Tuesday, October 27, 2015

அரசியல் கதம்பம் - ஈழ வியாபாரம் மற்றும் மின் மிகை மாநில புரட்டு..!

***02.10.2015***
ஈழப்போர் விவகாரத்தில் திமுகவையும், கலைஞரையும் குறை கூறி வாய் கிழிய விமர்சித்து, திமுகவுக்கு எதிராக தேர்தலில் கடும் பிரச்சாரமும் செய்து ஈழப்பாசத்தைக் காட்டிக்கொண்டு விட்டு.....
இன்றைக்கு ஐநா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றிபெறச் செய்த மோடி அரசினையும், அந்த மோடி அரசுக்கு ஆதரவாக களமாடுகின்ற ஜெயலலிதாவையும் விமர்சிக்காமல் மௌனம் காக்கும் அனைவரையும், பொட்டைகள் என்றும் சொல்லலாம், அல்லது காசுக்காக ஈழத்தைக் காட்டிக்கொடுத்தவர்கள் என்றும் சொல்லலாம்.
ஈழப்போரில் திமுகவால் எதையுமே செய்ய முடியாது என்பது தான் யதார்த்த நிலை. அப்படியிருந்தும் அது சம்பந்தமான தனது எதிர்ப்பை திமுக எப்பொழுதுமே பதிவு செய்து தான் வந்திருக்கின்றது. போருக்குப் பிறகான ஐநா தீர்மானங்களில் அன்றைய மத்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட முடியாத அளவிற்கு திமுக கடைசி வரை தடை ஏற்படுத்தியும் வைத்திருந்ததை உண்மையான ஈழ உணர்வாளர்கள் இன்றைக்கு உணர முடியும்.
காமன்வெல்த் மாநாட்டுக்கு கூட பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை செல்ல விடாமல் தடுத்ததில் திமுகவின் பங்கு அளப்பறியது.
ஆனால் வைக்கோ, ராமதாஸ் போன்றவர்கள் எல்லாம் ஆதரித்து ஆட்சிக்கு வந்த மோடி தன் பதவியேற்ப்புக்கே ராஜபக்‌ஷேவை அழைத்து ஷாக் கொடுத்ததும், ஐநாவில் இலங்கைக்கு ஆதவரவாக களமாடி வெற்றிபெற வைத்ததும், தமிழக அரசியல் கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப மத்திய அரசு இலங்கை விவகாரத்தில் செயல்பட முடியாது என்று பொன். ராதாகிருஷ்ணன் சொல்வதும், 37 எம் பிக்களை வைத்துக்கொண்டு, மத்திய அரசுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படும் ஜெயலலிதா, இது பற்றியெல்லாம் மோடி அரசை நிர்ப்பந்திக்காமல் இருப்பதும்.....
ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்தும் வைக்கோ, நெடுமாறன், சீமான், தா.பா, தமிழருவி, இன்னபிற ஈழ வியாபாரிகளுக்கு வேண்டுமானால் உரைக்காமல் இருக்கலாம் அல்லது உரைக்காதது போல் நடிக்கலாம்...
ஆனால் இவர்கள் பேச்சைக்கேட்டு, திமுகவை விமர்சித்த உண்மையான உணர்வுள்ள நடுநிலை இளைஞர்கள், திமுக மட்டுமே அனைத்து தரப்பு, அனைத்துப் பகுதி தமிழர்களுக்குமான பாதுகாப்பு இயக்கம் என்பதை இப்பொழுதாவது உணர வேண்டும். திமுக இம்மாதிரியான பிரச்சினைகளை அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்கொள்ளும் என்றும், அது மட்டுமே இப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைத் தரும் என்றும் அழுத்தமாக நம்புகிறது என்பதையும் இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
வைக்கோ, சீமான் போன்றவர்களின் சுயநலத்திற்காக உணர்ச்சிவயப்பட்டு செய்யப்படும் செயல்கள், பேரழிவை ஏற்படுத்துவதோடு, அந்த அழிவிற்குப் பிறகான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தகர்த்து விடும் என்பதை இப்பொழுதாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.
கலைஞரின் உண்ணாவிரதத்தை குறை கூறும் முன்பாக அப்படியொரு உண்ணாவிரதத்தை இருந்து வைக்கோ, சீமான் போன்ற யாராவது ஒருவர் உயிர் துறந்திருக்கின்றார்களா என்ற கேள்வியைக் கேட்டுவிட்டே கிண்டல், கேலியைத் துவங்க வேண்டும்.
***30.09.2015***
ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் மின் தடையை நீக்கும்வோம் என்றும், ஆட்சிக்கு வந்து ஒரே வருடத்தில் மின்மிகை மாநிலமாக மாற்றுவோம் என்றும் வாக்குறுதி தந்து தான் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சிக்கு வந்தது.
ஆனால் இந்த ஆட்சி முடிவதற்கு இன்னும் ஏழே மாதங்கள் தான் இருக்கின்ற நிலையிலும், இன்றைக்கும் நகர்ப்புரங்களில் மூன்று மணி நேரமும், கிராமப்பகுதிகளில் 5 மணி நேரமும் அறிவிக்கப்படாத மின் வெட்டு இருந்து கொண்டு தான் இருக்கின்றது.
நகர்ப்புற எல்லையைத் தாண்டிவிட்டால் கிராமப்புரங்களில் ஒரு நாளைக்கு வெறும் 10 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. அதாவது கிராமப்புரங்களில் மின்சாரத்தை நம்பி, ரைஸ் மில், வெல்டிங் பட்டரை இப்படி எந்த சின்ன சின்ன தொழில் கூட செய்ய முடியாத நிலை தான் இன்றைக்கும் தொடர்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தை எப்படி மின் மிகை மாநிலமாக ஜெயலலிதா அறிவித்தது போல் ஏற்றுக்கொள்ள முடியும்?
ஒரு மாநிலத்தில் கிராமம், நகரம், மாநகரம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் 24 மணி நேரமும் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும். அதேப் போன்று மும்முனை மின்சாரம் பயன்படுத்துகின்ற தொழிற்சாலைகள், பட்டரைகள், விவசாய பம்ப்புசெட்டுகள், இப்படி அனைத்திற்கும் தடையில்லா மின்சாரம் 24 மணி நேரமும் கிடைக்க வேண்டும்.
இந்த நிலை வந்தால் மட்டுமே அம்மாநிலத்தை மின் மிகை மாநிலம் என்று அறிவிக்க முடியும். அது மட்டுமன்றி அம் மாநிலம், இத் தேவைகளுக்கான மின்சாரத்தை வெளியில் இருந்து விலை கொடுத்து வாங்காமல், தங்கள் சொந்த தயாரிப்பில் அல்லது மாநில அரசும் பங்குதாரராக இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும் பயன்படுத்தி இந்த நிலையை அடைந்தால் மட்டுமே அது மின் மிகை மாநிலமாக அறியப்படும்.
ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு மின் உற்பத்தி திட்டத்தைக் கூட இதுவரை புதிதாக ஆரம்பித்து நிறைவேற்றி ஒரே ஒரு யூனிட் மின்சாரத்தினைக் கூட உற்பத்தி செய்யவில்லை என்பது தான் யதார்த்தம்.
ஸோ.... பொய்யான வாக்குறுதிகளைக் கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, அவற்றை நிறைவேற்றி விட்டதாக பொய் பிரச்சாரம் செய்வோரை மக்கள் மன்னித்தால், மிகப் பெரும் தவறான பின்விளைவுகளை மக்கள் சந்திக்க வேண்டியதிருக்கும்.
கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்டு, செயல்படுத்தப்பட்ட மின் உற்பத்தி திட்டங்களின் பலனாகத் தான் இந்த நான்கரை ஆண்டுகளில் வீடுகளுக்கான மின்சாரை தேவையை ஓரளவிற்காவது இந்த ஆட்சியினரால் ஈடு செய்ய முடிகின்றது. அந்த திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றியிருந்தாலே இந்நேரம் தமிழகம் உண்மையான மின் மிகை மாநிலமாக மாறியிருக்கும்.
சிந்திப்பீர் செயல்படுவீர்....!!

***

No comments: