Tuesday, October 27, 2015

தளபதியின் நமக்கு நாமே மக்களின் கைகளில்...!!!

தளபதியின் நமக்கு நாமே முதற்கட்ட பயணம் கன்னியா குமரியில் துவங்கிய போது, திமுகவினர் மட்டுமே... அதிலும் குறிப்பாக காலத்திற்கு ஏற்ப கொள்கை மாறாமல் தம்மை புதுமைப் படுத்திக்கொள்ளும் எண்ணமுடையவர்களும், இணையதள திமுகவினரும் தான் முதல் நாள் முதல் நொடியில் இருந்து தளபதியின் ஆரல்வாய் மொழியில் ஆரவாரமாக ஆர்ப்பரித்துக் கிளம்பிய எழுச்சி அலையினை உன்னிப்பாக உற்றுக்கவனித்து... அதை அப்படியே மக்கள் மன்றத்தின் முன்பாக பதிவு செய்யவும் செய்தனர்.
ஒவ்வொரு நாளும் கடந்து போக... கடந்து போக, அந்த எழுச்சிஅலையின் உற்சாகம் ஒட்டுமொத்த திமுகவினர் மத்தியிலும் தீயாக பற்றிக்கொண்டு, பொது மக்களிடம் நம்ம ஊருக்கு எப்ப வருவார் என்ற எதிர்பார்ப்பையும் எகிற வைத்து, எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றுப்போக்கையும் கிளப்பி விட்டு.... ஒரு வழியாக முதற்கட்ட நமக்கு நாமே சூறாவளி சென்னை அண்ணா அறிவாலயத்தில் கரை ஏறியது...!!
இதோ இன்றைக்கு நமக்கு நாமேவின் இரண்டாம் கட்ட பயணம் மேற்குத் தொடர்ச்சி மலையில் மைய்யம் கொண்டு, கூடலூரில் அனலைக் கூட்டி தரை இறங்க ஆரம்பித்து விட்டது.
இந்த இரண்டாம்கட்ட துவக்க நிகழ்ச்சியை, திமுகவினரையும் தாண்டி ஒட்டுமொத்த தமிழக பொது மக்களும் கவனிக்க ஆரம்பித்து விட்டனர். 17 ஆம் தேதி நாகைன்னு போட்டிருக்கே, நம்ம மாயவரத்துக்கு வரமாட்டாரா? இது நேற்று என்னிடம் ஒரு நடுநிலை நண்பர்... கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர் கேட்ட கேள்வி.
கண்டிப்பாக மாலை மாயவரம் வருவார். ஏன்? என்ன விஷயம்? என்றேன்.
ஒன்னுமில்ல... நம்ம ஊருக்கு ஒரு சூப்பர் பஸ்ஸ்டாண்டும், ஊரைச் சுற்றி நல்ல ரிங் ரோடும், நம்ம ஜி.ஹச் ஐ மாவட்ட மருத்துவமனையாகவும் மாத்தனும்ன்னு சொல்லி மனு தயாரிச்சி வச்சிட்டேன். அதை ஸ்டாலின் கிட்ட கொடுக்கனும். பேப்பர்ல நாகைன்னு போட்டுருந்ததுனால, மாயவரம் இல்லியோன்னு நினைச்சுத்தான் உங்க கிட்ட கேட்டேன் என்றார்.
அவருக்கும் எனக்கும் கடந்த 6 ஆண்டுகளில் நடந்த பல சூடான விவாதங்கள் நினைவில் ஆட, சற்றே ஒரு புன்முறுவலுடன் அவரைப் பார்த்தேன்....
..அவரும் என்னை ஒரு கணம் உற்றுப்பார்த்து, இலேசாக புன்னகைத்து, நான் என்றைக்காவது உங்கள் ஸ்டாலினைப் பற்றி ஒரு குறையாவது சொல்லியிருக்கேனா? அவர் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்க தலைவரும் அவரை முதல்வராக அறிவிப்பார்ன்னு நம்பறேன்.... என்று அவர் பேசும் பொழுதே அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன்.
உங்கள் நம்பிக்கை வீண் போகாது. கண்டிப்பா அந்த மனுவை உங்கள் கையாலேயே அவரிடம் கொடுங்கள். அவர் அதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்று சொல்லும் போது என் கண்கள் குளமாகிவிட்டன.
இப்பொழுது தளபதியின் நமக்கு நாமே மக்களின் கைகளுக்குப் போய் விட்டது...!!

No comments: