Monday, August 17, 2015

திமுகவின் மதுவிலக்கு பிரகடனமும், அதன் அரசியல் பார்வையும்..!

2016 இல் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.... டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி, தலைவர் - திராவிட முன்னேற்ற கழகம்..!
திமுக தலைவர் கலைஞரின் இந்த அறிவிபும், அதைத் தொடர்ந்தான அக் கட்சியின் பொருளாளரும், முதல்வர் வேட்பாளருமாகிய மு.க. ஸ்டாலின் அவர்களுடைய, திமுக ஆட்சிக்கு வந்தால் போடப்படும் முதல் கையெழுத்தே மதுவிலக்குக்கானது என்ற பிரகடனமும் வரும் தேர்தலில் திமுகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டதாகத்தான் தோன்றுகிறது.

ஏனெனில் இது வரையிலும் மதுவிலக்குக்காக குரல் கொடுத்து வந்த பாமக, தமிழருவி மணியன், நெடுமாறன் போன்ற சிறிய கட்சித் தலைவர்கள் அனைவருமே, தமிழகத்தில் ஆட்சிக்கு வர தகுதியுள்ள ஒரு கட்சியான திமுகவின் இவ்வாக்குறுதியை அரசியல் கடந்த வரவேற்றிருந்தால்...  அதில் ஒரு நியாயம் அல்லது நேர்மை இருந்திருக்கும். ஆனால் அதை விடுத்து இவர்கள் பதபதைத்து, இதை திமுக செய்யாது என்றும், செய்ய முடியாது என்றும், கலைஞர் தான் தமிழகத்திலேயே சாரயத்தை ஆறாக ஒடவிட்டவர் என்பது போலவும்....   அறிக்கைகள் கொடுத்து, எப்படியாவது ஜெயலலிதா மது விலக்கை அறிவித்து அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்யும் பதட்டத்தோடு செயல்படுகின்றனர்.

இவர்கள் நேர்மையான அரசியல் தலைவர்களாக இருந்தால், அதிமுகவையும், திமுகவையும் ஒரே தட்டில் வைத்துத் தான் நிறை குறைகளை அணுகியிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் நோக்கம் எல்லாம் எப்படியாவது திமுகவை பலவீனப்படுத்தி, மக்கள் மனதில் அக் கட்சியைப் பற்றிய தவறான எண்ணங்களை தவறாமல் விதைத்துக்கொண்டு, அதிமுக ஆட்சிக்கு வருவதை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என்பதைத் தாண்டி இவர்கள் அரசியல் செய்வதில் வேறு எந்த நோக்கமும் கிடையாது என்பதையே மதுவிலக்கு பற்றிய திமுகவின் அறிக்கைக்கு எதிரான இவர்களது வாதங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ஆனால் அப்படி திமுகவை இதில் குறை கூற என்னதான் இருக்கின்றது என்று, மது சம்பந்தமான உண்மையான, யாராலும் மறுக்க முடியாத, ஆதாரப்பூர்வமான வரலாற்றை நாம் சற்று தெளிவாக உற்று நோக்கினால்....    இதோ கீழே அந்த வரலாறு இருக்கிறது. இதில் திமுகவின் மேல் என்ன குற்றம் இருக்கின்றது? என்பதை உங்கள் முடிவுகளுக்கே விட்டுவிடுகின்றேன். 
1971 க்கு முன்னதாக தமிழகத்தில் உள்ள தமிழர்கள் யாரும் மதுவே அருந்தவில்லை, வெறும் பால் மட்டும் குடித்துக்கொண்டு விரல் சூப்பிக் கொண்டிருந்தார்கள் என்றெல்லாம் சிலர் இங்கே பரப்புரை செய்து கொண்டிருப்பது அபத்தத்தின் உச்சம்.
அன்றைக்கும் கள் குடித்தும், கள்ளச்சாராயம் குடித்தும், தமிழகத்தின் எல்லைப்புற மாநிலங்களான பாண்டி, கேரளா, ஆந்திரா என்று அனைத்திலிருந்தும் இங்கே மதுக் கடத்தல் தாராளமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததும்... அதனால் பலர் உயிரிழந்ததும், பலர் மேல் அவ்வப்பொழுது வழக்குகள் போடப்பட்டுக் கொண்டிருந்ததும்....

..இதெல்லாம் எதற்கு? காந்தி சொன்னதைக் கேட்டு, தென்னை மரம் இருந்தால் தானே கள் இறக்கிக் குடிப்பார்கள் என்று தன் தோப்பில் உள்ள தென்னை மரங்களை வெட்டி வீழ்த்திய பெரியாரின் செயல் கூட தமிழகத்தில் மது விற்பனை பற்றிய புரிதலை நன்கு எடுத்துக்காட்டிய செயலாகும்..!!
அப்படி இருக்க, 1971 இல் கள், கள்ளச்சாராயம், வெளி மாநிலத்தில் இருந்து கடத்தல் என்று பல்வேறு வகையில் தமிழக தமிழர்கள் மது அருந்துவதை கவனித்த கலைஞர், இதில் இருந்து வரும் வருமானத்தை தமிழக அரசே பயன்படுத்தினால் என்னவென்று முடிவெடுத்துத் தான் மது விலக்கை நீக்கினார்.
ஆனால் பல தரப்பு உயர் மனிதர்களின் கருத்துக்களை கருத்தில் கொண்டு, மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தில் மீண்டும் பூரண மது விலக்கை அமல்படுத்தி... அதே கலைஞர் உத்தரவிட்டார்.

இத்தோடு அந்த அத்தியாயம் முடிந்து விட்டது. ஒரு விஷயத்தில் ஒரு முடிவை ஒரு அரசு எடுத்து அமல்படுத்துவதும், அதன் பிறகு அதில் உள்ள சாதக பாதகங்களை நடைமுறையில் கண்டுணர்ந்து அதை மாற்றி அமைப்பதோ அல்லது முற்றிலும் கை விடுவதோ என்பது தான் ஒரு நல்ல ஆட்சியாளருக்கான சிறந்த உதாரணம். அந்த அடிப்படையில் தான் கலைஞர் அவர்கள் மது விலக்கை நீக்கியும்... மீண்டும் மூன்றே ஆண்டுகளில் அதை அமல் படுத்தியும் உத்தரவிட்டார்.
ஆனால் அந்த அத்தியாயத்தை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து 1983இல் மீண்டும் துவங்கியது யார்? சாட்சாத் அன்றைய அதிமுக முதல்வர் எம் ஜி ஆர் தான்....!
இந்த இடத்தில் தான் சிலர் லாவகமாக கலைஞரை குறை சொல்வார்கள். ஆனால் வெறும் மூன்றே ஆண்டுகள் இருந்த மதுவிலக்குத் தடை.... அதன் பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து நடை முறைக்கு வருவதற்கு நிச்சயம் காரணமாக இருந்து விட முடியாது. மேலும் கலைஞர் தலைமையிலான திமுக அரசு மதுவை விற்பனை செய்யவில்லை. மதுவிலக்கை தடை மட்டுமே செய்தது.
ஆனால் ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் மதுவை தமிழகத்தில் கொண்டு வந்த எம் ஜி ஆர்... அவர் அறிவித்த பல்வேறு இலவச திட்டங்களுக்கான நிதிக்காக மதுவிலக்குத் தடையோடு.... மதுவை அரசே விற்பனை செய்யும் அல்லது உற்பத்தி செய்யும் டாஸ்மாக் என்ற அரசு நிறுவனத்தையும் அமைத்து... தமிழகத்தில் முற்றிலும் புத்தம் புதிய விஷமத்தனமான மது விற்பனையைத் துவக்கினார்.
அப்பொழுது எல்லாம் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் என்பது அப்பனுக்கு சாராயம்.. பிள்ளைக்கு சத்துணவு...! என்பதாகத்தான் இருந்தது. மாலையில் அப்பன் காசை ஒயின் ஷாப்பில் கறந்துவிட்டு காலையில் பிள்ளைக்கு சாப்பாடு போடுவது தான் இந்த ஃபார்முலா...!!

இது தான் தமிழக மக்கள் இலவசங்களுக்கும், மதுவுக்கும் அடிமையானதற்கான புதிய ஃபார்முலா. அல்லது பிள்ளையார் சுழி...! அதன்பிறகு இலவசங்களை நிறுத்தினால் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலையில் மது விலக்கும், அடுத்தடுத்த ஆட்சியாளர்களால் தடை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
இலவசத்தை அனுபவித்தவர்களுக்கு கூடுதல் இலவசம் கொடுத்தால் தான் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலையும் வர, டாஸ்மாக் பல்வேறு பரிமாணங்களை எட்டி இன்றைக்கு, இலக்கு நிர்ணயித்து விற்பனை செய்யும் அளவிற்கும், ஊருக்குள்ளேயே பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே விற்பனை மையத்தை திறக்கும் அளவிற்கும் வளர்ந்து நிற்கின்றது.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் வாய்ப்புள்ள கட்சிகளில் ஒன்றான திமுகவின் தலைவர் கலைஞர் அவர்கள்  அறிவித்திருக்கும்.... தாங்கள் அடுத்து ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற திட்டவட்டமான அறிக்கை......... தமிழகத்தை முழுமையான வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்வதற்கான அற்புதமான நடவடிக்கையாகவே தோன்றுகிறது...!!
மது விலக்கை அமல் படுத்தினால் மட்டும் போதாது, தேவையற்ற இலவசங்களையும் உடனடியாக நீக்க வேண்டும். ஆனால் இதற்கான அறிவிப்பைச் செய்தால் ஓட்டு விழாது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகாவது அதைச் செய்தால் தான் உண்மையான வளர்ச்சியை நோக்கி தமிழகம் நகரும்.

இன்றைக்கு அரசே ஏற்று விற்பனை செய்யும் இந்த மதுவால் தமிழக இளைஞர்களும், பெண்களும் கூட அடிமையாகி வருவதை உணர்ந்த திமுக தலைமை, வெறும் அறிவிப்போடு நின்று விடாமல், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருக்கின்றது. இதற்கு மேல் திமுகவால் இப்பிரச்சினையில் இருந்து பின் வாங்க முடியாது. ஒரு ரூபாய்க்கு அரசி தர முடியாது என்ற விமர்சனங்களை தகர்த்து அதை சாதித்துக்காட்டியது தான் திமுக. அதேப் போன்று தான் மது விலக்கையும் தான் ஆட்சிக்கு வரும் போது சாதித்துக் காட்டும்..!

No comments: