Monday, June 30, 2014

அரசியல்....மார்க்கெட்டிங்..!!!

ஒரு காலத்தில் மளிகை சாமான் வாங்க வேண்டும் என்றால், செட்டியார் கடை, முதலியார் கடை, அண்ணாச்சி கடை... இப்படியாக இருந்து ஒரு கட்டத்தில் பாய் கடையும் வந்து சேர்ந்தது...

அப்போ கடைக்குச் சென்றால் நம்மவர்கள் அப்பளம் வேண்டும், நல்லெண்ணை வேண்டும் என்று பொருட்களின் பெயரைச் சொல்லித்தான் கேட்பார்கள். கடைக்கார அண்ணாச்சியோ அவர் கடையில் வைத்திருக்கின்ற அப்பளத்தையும், எண்ணையையும் தந்து அனுப்புவார். 

சிலோன் ரேடியோ விளம்பரங்கள் எல்லாம் வர ஆரம்பித்த நிலையில் ஒரு சில பெரிய நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த துவங்கவும், நம்மவர்கள் பல்பொடி வாங்க கடைக்குச் சென்றால் கோபால் பல்பொடியே தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி வர ஆரம்பித்தார்கள். 

சரியாக இந்த இடத்தில் தான் சந்தை என்பது உற்பத்தி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களான (கஸ்டமர்) கடைக்காரர்கள் கையில் இருந்து நுகர்வோர்கள் (உபயோகிப்பாளர்கள்) கைகளுக்கு இடம் பெயர்கின்றது....
இது தொடர்கதையாகி, இப்பொழுது மக்கள் சுயசேவைப் பிரிவு (செல்ஃப் சர்வீஸ் கவுண்ட்டர்ஸ்) கடைகளிலேயே அதிகமாக பொருட்களை வாங்க ஆரம்பித்திருக்கின்றனர். 

இப்பொழுது எல்லாம் அண்ணாச்சிகள், நுகர்வோரிடம் இந்த நிறுவன தயாரிப்பு தான் நன்றாக இருக்கும் என்ற சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் மக்கள் அதை வாங்குவதில்லை. காரணம் அந்த பிராண்டை விற்றால் அண்ணாச்சிக்கு அதிக கமிஷன் கிடைக்கும் போலிருக்கிறது என்ற சந்தேகம் தான்...!!!

ஆகவே இப்பொழுது கடைக்காரர்கள் ஒரு பொருளுக்கு... உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் டூத் பேஸ்ட்டை எடுத்துக்கொண்டால், அதில் குறைந்தது பத்து வகை பிராண்டுகளை அடுக்கி வைக்க வேண்டியிருக்கின்றது. மக்கள் தங்கள் தேர்வுக்கு சிறந்த மாற்று உடனடியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். தான் வழக்கமாக உபயோகிக்கும் பேஸ்ட்டில் சிறு குறையை அவர்கள் உணர்ந்தால் கூட அடுத்த மாதம் வேறு ஒரு பிராண்டை முயற்சி செய்கின்றார்கள். 

இது கூட பரவாயில்லை, இப்பொழுது உள்ள இளைஞர்கள் சந்தைக்கு புதிதாக ஒரு பிராண்டு அறிமுகமானால், அதற்கு நல்ல விளம்பரம் ஊடகங்களில் கொடுக்கப்பட்டால் அதை உடனே வாங்கி உபயோகித்துப் பார்க்கும் பழக்கத்திற்கு வந்து விட்டிருக்கின்றனர்...

ஓக்கே.....

இதை இப்படியே நம்ம அரசியல் தளத்திற்கு கொண்டு வாருங்கள். ஒரு பொருளை வாங்குவதில் கடந்த 40 ஆண்டுகளில் மக்களிடம் ஏற்பட்டிருக்கின்ற இந்த மாற்றம் இப்பொழுது ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பதிலும் கூட தாவியிருப்பதைத் தான், சமீபத்திய தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துவதாக இருக்கின்றன.
இப்பொழுது எல்லாம் காமராஜர் சொன்னார், அண்ணா சொன்னார், கலைஞர் சொன்னார், எம் ஜி ஆர் சொன்னார் என்பதற்காகவெல்லாம் மக்கள் தங்கள் முடிவுகளை எடுப்பது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் 100 வருட பாரம்பரியம், 50 வருட பாரம்பரியம் எல்லாம் கூட வேலைக்காகவில்லை. 

கடைக்காரர்கள்... அதாவது ஒரு பொருளை மக்களிடம் கொண்டு செல்லும் வாடிக்கையாளர்கள்... அதாவது கட்சியை மக்களிடம் கொண்டு செல்லுகின்ற மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் எல்லாம் மக்களுக்கு முக்கியமாகப் படவில்லை....

மாறாக, நிறுவனம்... அதாவது கட்சி..., அதன் தலைமையின் மீதான வசீகரம், நம்பகத்தன்மை, களங்கமற்ற நிலை, தன்னை முன்னிலைப் படுத்துகின்ற அந்த இலகுவான பாங்கு, பாரம்பரிய கதையெல்லாம் பேசிக்கொண்டிராமல், இன்றைக்கு இலங்கைப் பிரச்சினையில் என்ன செய்தாய்? இன்றைக்கு காவிரிப் பிரச்சினையில் என்ன செய்தாய்? இன்றைக்கு முல்லைப் பெரியாற்றில் என்ன செய்தாய்? இன்றைக்கு மக்கள் கண்களை உறுத்தாமல் உன் வாடிக்கையாளர்கள் (செயலாளர்கள்) எப்படி சேவை ஆற்றுகின்றார்கள்? இன்றைய என்னுடைய சாதாரண தேவைகளை நீ எப்படி பூர்த்தி செய்வாய்? அதற்காக உன்னிடம் உள்ள திட்டங்கள் என்ன?....

இப்படி நேரடியாக கட்சியின் தலைமையை மக்கள் பார்க்கின்ற நிலைமை தான் இன்றைக்கு நாட்டில் இருக்கின்றது. இது தான் காலுக்கு செறுப்பு கூட இல்லாமல், கிழிந்த டவுசரை போட்டுக்கொண்டு, யூனிஃபார்ம் போடாததால் பெஞ்ச் மேல் நின்று கொண்டு கல்வி கற்ற அனுபவம் இல்லாத, நடுத்தர வர்க்கத்து மக்களின் மனநிலை....!!!

எம் ஜி ஆர் ஆட்சிக்காலம் வரை அடித்தட்டு மக்கள் தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தார்கள். ஏனெனில் அன்றைக்கு அவர்கள் தான் எண்ணிக்கையில் அதிகம். ஆனால் இன்றைக்கு மேற் சொன்ன நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்கள் தான் வெற்றி தோல்வியினை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகின்றார்கள். 

ஆனால் அப்பொழுது திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த இந்த நடுத்தர வர்க்கம், துரதிருஷ்டவசமாக மேற் கூறிய இந்த நுகர்வோர் - நிறுவ்னம்.... அதாவது வாக்காளர் - கட்சித் தலைமை... என்ற புதிய சந்தைக் கலாச்சாரத்தின் அடிப்படைக்கு மாறி விட்டிருப்பதால், அதற்கு ஏற்றார் போல் திமுகவும் தன்னை மாற்றிக் கொண்டிருக்காத காரணத்தால்.. சட்டமன்றம், உள்ளாட்சி, பாராளுமன்றம் என்ற தொடர் தோல்விகளை திமுக சந்திக்க வேண்டியதாகிவிட்டது. 

ஆகவே இன்றைய அந்த நடுத்தர வர்க்கமும், இளைஞர்களும் எதிர்பார்க்கின்ற அல்லது விரும்புகின்ற மாதிரியான மாறுதல்களை முதலில் கட்சித் தலைமையில் திமுக உருவாக்க வேண்டும். 

அதற்கு திமுகவில் இருக்கின்ற ஒரே சாய்ஸ்... தளபதி மு.க. ஸ்டாலின் மட்டுமே. அவரை கட்சித் தலைவராகவும் முதல்வர் வேட்பாளராகவும் கட்சி முன்னிறுத்தினால் மட்டுமே, இளைஞர்கள் திமுகவுக்கு வாக்களிப்பதைப் பற்றி சிந்திப்பார்கள். 

திமுக மேடையில் நடுநாயகமாக கலைஞர், அவருக்கு பக்கத்தில் திருமாவளவன், அவருக்கு அடுத்து காதர் மொய்தீன், அவருக்கும் அடுத்தபடியாக நான்காவது இடத்தில் தளபதி உட்கார வைக்கப்பட்டிருப்பதைக் காண்கின்ற இளைஞர்களும், பெண்களும் தங்கள் கவனத்தை வேறு கட்சிகளின் மீது திருப்புகின்றார்கள்....

இதைத் தான் ஊடகங்கள் கவனமாக கணக்கில் எடுத்து ஜெயலலிதாவுக்கான மாற்றை தேடுகின்ற மக்களின் கண் முன்னே தளபதி ஸ்டாலின் இடத்தில் வைக்கோவைக் கொண்டு வந்து வாரம் தவறாமல் தங்கள் இதழ்களின் கட்டுரைகள் வாயிலாக முன் நிறுத்துகின்றார்கள். மேலும் தளபதியின் புகழையும் குறைக்கின்ற வகையில் அவருக்கு ஆளுமைத் தன்மை இல்லாமல் மாவட்ட செயலாளர்கள் பின்னால் ஒழிந்து கொள்கிறார் என்பதாக ஒரு கட்டுரையும், ஊழல் குற்றம் சாட்டப்பட்ட இறந்து போன நபரின் பேட்டியில் அவர் ஸ்டாலினைச் சந்தித்ததாகச் சொன்னதையே ஒரு குற்றம் போலவும் சோடித்து ஒரு கட்டுரையுமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள்.....

ஆகவே நிலைமையின் அவசரத்தையும், அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் தலைவர் கலைஞர் புரிந்து கொண்டு, உடனடியாக தளபதி ஸ்டாலின் அவர்களை கட்சித் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்து 2016 தேர்தலை எதிர் கொள்ள கட்சியைத் தயார் படுத்த வேண்டும்.

அவ்ளோ தான்....!

1 comment:

Nasar said...

Superstar......