Wednesday, February 5, 2014

2 ஜி ஆடியோ ரிலீஸ்... திமுக வெற்றியை பாதிக்குமா?!

கடந்த நான்கு வருடங்களாக அகில இந்திய அளவில் வடிவமைக்கப்பட்டு, திடீர் திடீர் திருப்பங்களுடனும், பக்கா ட்விஸ்ட்டுகளுடனும், பற்பல கிளைக் கதைகளுடனும் அறங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நாடகம் 2 ஜி அலைக்கறை ஊழல் வழக்கு!

இந்த வழக்கின் ஒரு கிளைக் கதை தான் கனிமொழி மூலமாக கலைஞர் டீவிக்கு வந்ததாகச் சொல்லப்பட்ட 200 கோடி ரூபாய் பணம். ஒன்னே முக்கால் லட்சம் கோடி ரூபாய் லஞ்சம் என்று சொல்லப்பட்ட மெயின் கதையில் கடைசியாக ஒன்றுக்கும் குறைவாக கால் சதம் கூட தேறாத வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே கலைஞர் குடும்பத்திற்கு வந்து சேர்ந்திருப்பதாக சொல்லப்படுவது தான் இந்த கிளைக் கதையில் உள்ள பெரிய லாஜிக் ஓட்டை!

ஆனால் கதைக் குழுவில் இருப்பவர்கள் இது பற்றிச் சொல்லும் போது, கதையில் அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்டுகளும், விறுவிறுப்புக் காட்சிகளும், இந்த லாஜிக் ஓட்டையை மக்கள் கண்களில் இருந்து இலகுவாக மறைத்து விடும் என்கின்றார்கள்.

ஓக்கே இந்த முன்னுரையோடு இப்ப மெயின் மேட்டருக்கு வருவோம். கடந்த ஒரு வாரமாக தமிழ்கத்தில் பற்றவைக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அது புகைய ஆரம்பித்து நேற்று டெல்லியில் வெடித்திருக்கும் விஷயம் தான் கனிமொழி சம்பந்தப்பட்ட 2ஜி கிளைக் கதையில் வருகின்ற சில நபர்களுக்கிடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள் அடங்கிய ஆடியோ ரிலீஸ்!!

வரும் ஏப்ரல் 16 முதல் நாடாளுமன்ற தேர்தல்கள் துவங்கவிருக்கின்றன என்று தேர்தல் கமிஷன் டெல்லியில் அறிவித்த சில மணித்துளிகளில் இந்த 2ஜி கிளைக் கதையின் ஆடியோ ரிலீஸை அதே டெல்லியில் வைத்து ஆம் ஆத்மி கட்சியின் பிரஷாந்த் பூஷன் வெளியிட்டிருக்கின்றார்.

கலைஞர் குடும்பம் சார்ந்த ஆடியோ என்பதால், அகில இந்திய அளவில் கூட நல்ல மார்க்கெட் இருக்கின்றது என்ற காரணத்தால் தமிழ்கம் மட்டுமல்லாது இந்திய அளவிலான் ஆங்கில ஊடகங்களும் கூட கேஸட்டைப் பெற்றுக்கொண்ட கையோடு அதை இருந்து சிறப்பாக ஒலிபரப்பி நன்றாக கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றன.

சரி, இப்போ இதனால் திமுகவுக்கு ஏற்படவிருக்கின்ற சாதக பாதகங்கள் அல்லது இந்த பரப்புரைகளால் அதை திட்டமிட்டு செயல்படுத்திக் கொண்டிருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் எந்த அளவிற்கு பூர்த்தி செய்யப்படும், என்பதையெல்லாம் கொஞ்சம் தெளிவாகப் பார்க்கலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவுக்கு எதிரான பரப்புரைகள் என்பது புதிதான ஒன்று அல்ல.  அதனால் இந்த கேஸ்ட் மேட்டர் எல்லாம் அந்த பத்தோடு பதினொன்று தான் என்பதில் வாக்களிக்கப்போகும் பொதுமக்களுக்கே சகஜமாகத் தெரிந்த விடயம் தான். கலைஞருக்கு எதிரான சர்க்காரியா கமிஷன் குற்றச்சாட்டுகள் தொடங்கி, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்து ராஜீவைக் கொன்றதாக தீவிரவாத முத்திரையில் பயணித்து, 2ஜி அலைக்கற்றை ஊழல் என்ற அகில இந்திய அளவிலான ஊழல் குற்றச்சாட்டு வரை இந்தப் பயணம் தமிழக மக்களுக்கு பழகிப் போன ஒன்று தான்.

ஆனால் திமுக எதிர்ப்பாளர்களின் இந்த முயற்சிகள் ஒவ்வொரு முறையும் திமுகவை அந்தந்த காலங்களில் நடைபெற்றிருந்த ஓரிரு தேர்தர்தல்களில் தோல்வியைத் தழுவ வைத்திருக்கின்றதே தவிர, திமுகவின் வளர்ச்சியையும், இன்றைய தேதியில் அகில இந்திய அளவில் திமுகவின் ஆளுமையையும் ஒரு சிறு துளி அளவு கூட மட்டுப்படுத்துவதற்கு மாறாக மட்டற்ற வளர்ச்சியைத்தான் ஒவ்வொரு தேர்தல் தோல்விக்குப் பிறகும் திமுகவுக்குத் தந்திருக்கின்றது. இது யாரும் மறுக்க இயலாத வரலாற்று உண்மை.

இந்த அடிப்படையில்  பார்க்கும் பொழுது, 2ஜி பிரச்சினை என்பதற்கான விலையை கடந்த 2011 சட்டமன்ற தேர்தலிலேயே திமுக கொடுத்து விட்டது. அந்தத் தேர்தலுக்குப் பிறகு இந்த விவகாரம், எப்படி ஒன்றுமில்லாமல் நீர்த்துப் போய் நீதிமன்றத்தில் அல்லாடிக் கொண்டிருக்கின்றது என்பதையும், அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ. ராசாவாகட்டும், கனிமொழியாகட்டும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு சிறைக்குச் சென்றதாகட்டும், அதன் பிறகு இன்று வரையிலும் நீதி மன்றத்திற்கு பெருமளவில் ஒத்துழைப்பு நல்கி, இந்த வழக்கை விரைந்து முடிக்க அவர்கள் காட்டுகின்ற நேர்மையாகட்டும்.... இதையெல்லாம் தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

அதே சமயம், இரண்டுக்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகளில் ஒரு சிலவற்றில் கீழ் கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்று அதில் ஜாமீன் பெற்று வெளியில் வந்து மேல் முறையீட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்நீதிமன்ற வழக்கில் 130 தடவைக்கும் அதிகமாக வாய்தா பெற்றும், நீதிபதிகள் முதல் அரசு வழக்குறைஞர்கள் வரை குற்றம்சாட்டப்பட்டவகளே மாற்றக் கோருகின்ற விநோத நிகழ்வுகளையும்,  முதல்வராக இருக்கும் போதே கூட வருமானவரி கட்டாமல் ஏமாற்றிய வழக்கில் 17 வருடங்களாக நீதி மன்றத்திற்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்ததற்கு உச்சநீதி மன்றத்தால் எச்சரிக்கப்பட்டு, இன்னும் நான்கு மாத கெடுவிற்குள் அவ்வழக்கை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கின்ற நெருக்கடியில் இருந்து கொண்டிருக்கும் இன்றைய தமிழக முதல்வரைப் பற்றியும் தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு தமிழக மக்கள் பத்தாம் பசலிகளாகத்தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் திமுக தரப்பை மட்டுமே அவதூறுகள் செய்து கொண்டிருக்கும் ஊடகங்களையும் தமிழக மக்கள் உற்று நோக்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். ஊடகங்களின் இந்த ஒரு தரப்பான அவதூறுகள், கொஞ்சம் கொஞ்சமாக திமுகவினர் மேல் ஒரு வித அனுதாபத்தையும், அதிமுகவின் மீதான ஊடகங்கள் பேச மறந்த அல்லது மறுக்கும் விமர்சனங்களை  மக்களே பேச ஆரம்பித்திருக்கும் நிலையும் தான் இப்பொழுது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்றது.

தமிழகத்தில் முக்கியமான இரு பெரிய கட்சிகளின் மீதான விமர்சனங்களையும் சமமாக எடுத்து வைத்து மக்கள் மன்றத்தில் அதை விவாதப் பொருளாக கட்டமைக்க வேண்டிய கடமையில் இருந்து தவறி செயல்படும் ஊடகங்களால்.....

மக்கள் திமுக சார்பிலும், ஊடகங்கள் அதிமுக சார்பிலும் நின்று வாதிடும் நிலை இன்றைக்கு இயல்பாகவே தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது என்பது தான் யதார்த்தம்.

ஊடகங்கள் பேச்சை நம்பி திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கிய தமிழக மக்கள், மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையிலும்...  இன்றைக்கும் அதே திமுகவின் மேல் அதே குற்றச்சாட்டை வைத்து அதே ஊடகங்கள் வரும் பாராளுமன்ற தேர்தலையும் அதிமுகவுக்கு ஆதரவாக பயன்படுத்துவதை ஒருவித அசூயையுடன் தான் கவனிக்கின்றார்கள்.

கடந்த திமுக ஆட்சியில் செய்யத்தவறியாக சுட்டிக்காட்டப்பட்ட கடமைகள், செய்ததாகச் சொல்லப்பட்ட தவறுகள்.... இவற்றையெல்லாம் இந்த மூன்று ஆண்டுகளில் அதிமுக அரசு எந்த அளவிற்கு சரி செய்திருக்கின்றது என்ற மக்களின் கேள்விகளுக்கு அதிமுகவிடமோ, ஊடகங்களிடமோ பதில் எதுவும் இல்லை என்கின்ற போது.....

திமுகவின் உட்கட்சிப் பிரச்சினைகளிலும், ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு சிறை சென்று, நடந்து கொண்டிருக்கின்ற அதுவும் வேகமாக நடந்து கொண்டிருக்கின்ற வழக்கை மீண்டும்  பூதாகரமாக.... சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும்... அதிமுகவும், பாஜகவும் எடுத்து வைப்பதும், ஊடகங்களும் அதையே தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதும்....

கடந்த மூன்றாண்டுகால அதிமுக அரசின் தோல்வியை அல்லது கையாலாகாத தனத்தை மறைப்பதற்கான முயற்சியாகவே இது மக்களால் பார்க்கப்படுகின்றது. மேலும் 91 - 96 ஜெயலலிதா ஆட்சியில் மிகப் பெரிய அளவிலான ஊழல்களையும், அராஜகங்களையும் செய்த ஜெயலலிதா ஆட்சியை, மிகக் கேவலமான தோல்வியைத் தந்து தோற்கடித்த தமிழக மக்கள், அந்த ஊழல்களுக்கான வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையிலும், 2001 இல் மீண்டும் ஆட்சியில் அமர வைத்தனர்.

அப்படியிருக்கும் போது, 2ஜி ஊழல் குற்றச்சாட்டின் ஒரு கிளைக் கதையை எடுத்துக் கொண்டு க்டந்த தேர்தலிலும் இதே போன்ற ராடியா டேப் விவகாரத்தை பூதாகரமாக்கிப் பேசி, அதை நம்பி மக்களும் திமுகவுக்கு எதிராக வாக்களித்து விட்ட நிலையில், அது வழக்கிற்கு சம்பந்தமில்லாதது என்று உச்சநீதிமன்றம் சொல்லிவ்விட்ட நிலையில்.... இந்த தேர்தலிலும் திமுகவை வீழ்த்த அவர்கள் எடுத்திருக்கும் அதே மாதிரியான் ஆடியோ டேப் விவகாரம் என்பது நிச்சயம் பூமராங்காகத் திரும்பி அவர்களையே தாக்கும் என்பதில் வேறு கருத்துக்கு இடமில்லை.

ஆகவே இப்பொழுது தமிழக ஊடகங்கள் எல்லாம் அதிமுகவைக் காப்பாற்றுவதை நிறுத்திவிட்டு, தங்களின் நம்பகத்தன்மையை மக்களிடம் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் களம் இறங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர வேண்டும்.

ஒரு வேளை இவ்வழக்கில் கனிமொழி மீண்டும் சிறைச் செல்ல வேண்டியிருந்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதையும் திமுக வெல்லும்!!!!!

5 comments:

Unknown said...

அருமையான பதிவு..
கண்ணன் என் காதலன் படத்தில் எம்.ஜி.ஆர் - ஜெ ஆடிப் பாடிய பாடல் வரிகள் இன்று காலை நினைவுக்கு வந்தது..அவ்வரிகள்..
"கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் டக்கு முக்கு திக்கு தாளம் எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு திக்கு" ...
ஆம் நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் மின்வெட்டே இல்லாத நிலை எய்தி விட்டதாக பம்மாத்து அறிவிப்பு..
அனால், இன்று காலை பள்ளி, கல்லூரி, அலுவலகம்
செல்வோரின் நிலை உணராது தீடிரென மின்வெட்டு,
காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை..(அறிவிப்பே
இல்லாது)..அது போலவே நீதி மன்றங்களை துச்சமாக நினைக்கும் ஜெ க்கு தக்க நீதி தர மக்களும், நீதி மன்றங்களும் தயார்..

Unknown said...


Jayadev Das said...

குடுத்த காசுக்கும் அதிகமாவே கூவி விட்டீர்........... கொக்கரக்கோ ...பொருத்தமான பெயர். தமிழன் முட்டாள், ஆகையால் உமக்கு மீண்டும் ஓட்டு விழும், சந்தேகமேயில்லை.

Sankar said...

well said

இளிச்சவாயன் அல்லது திமுக தொண்டன் said...

//ஒரு வேளை இவ்வழக்கில் கனிமொழி மீண்டும் சிறைச் செல்ல வேண்டியிருந்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதையும் திமுக வெல்லும்!!!!!//

ஹாஹா