Saturday, September 21, 2013

சினிமா 100 - கலைஞரிடம் திணறும் ஜெயலலிதா!!!!

இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் நடக்கிறது. தென் இந்தியாவின் நான்கு மாநில முதல்வர்கள் பங்கேற்கிறார்கள் (பாண்டிச்சேரி முதல்வரை எல்லாம் எதோ கல்லூரி முதல்வர்ன்னு நினைச்சிட்டாங்க போலருக்கு). அப்பறமா கடைசி நாள் நிகழ்ச்சியில நம்ம இந்திய ஜனாதிபதி கூட கலந்துக்கறார்...  லாப் லாப் லாப்.....

இதெல்லாம் மேட்டர் இல்லை. இந்த விழாவுக்கு ஒரு பழம்பெரும் சினிமா கலைஞர் என்ற அடிப்படையில் கூட டாக்டர் கலைஞர் அவர்களுக்கு அழைப்பில்லை. இது கூட பெரிய மேட்டர் இல்லை. ஏன்னா? ஜெயலலிதாகிட்ட வேற என்னத்த பெரிசா நாம எதிர்ப்பார்த்துட முடியும்?!

வேற என்ன தான் முக்கிய விஷயம்ங்கறீங்களா?

நாம் என்ன மாதிரியான சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?! என்பது தான் இங்கே அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம். நாம் என்று இங்கே நான் குறிப்பிட்டது நம் தமிழக வாழ் தமிழர்களைத் தான். அரசியல் ரீதியாக ஒரு கட்சி தவறான ஆட்சியை தந்திருக்கிறது என்று வாக்களர்கள் நினைத்தாலோ அல்லது இன்னொரு கட்சி, தற்பொழுது இருப்பதை விட சிறப்பானதொரு ஆட்சியை நமக்கு தரும் என்று நம்பினாலோ, அந்த ஆட்சிக்காலம் முடிந்த பிறகு புதிய கட்சியின் ஆட்சி அரங்கேற்றப்படும்.

அப்படி ஏதோ ஒரு நினைப்பில் தான் கடந்த திமுக ஆட்சி அகற்றப்பட்டு, தற்பொழுதைய ஜெயா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கட்டிலில் தமிழக மக்களால் அமர வைக்கப்பட்டிருக்கின்றது. அப்படி உருவாக்கப்பட்ட இந்த ஜெயா ஆட்சி வந்தவுடன் உடனடியாக செய்த செயல்கள் என்னென்ன?

கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை நீக்க முற்பட்டது, பாடப்புத்தகங்களில் திருவள்ளுவர் படம் கூட அகற்றப்பட்டது அல்லது ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டது, அவர்கள் கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை முடக்கிப் போட்டது, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை செயலிழக்கச் செய்தது, இப்படியாக இன்னும் பல...!

அடுத்த கட்டமாக தமிழக சட்டசபை வைரவிழா கொண்டாட்டங்களில் 60 ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக வரலாறு படைத்துக்கொண்டிருக்கும், இன்றைக்கு இந்திய அளவில் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்களிலேயே மிக மூத்த, மிக அதிக காலம் அந்தப் பொறுப்பில் இருக்கின்ற பெருமைக்குறிய கலைஞர் அவர்களை தவிர்த்து அவரை அவமானப்படுத்தியதாக நினைத்துக் கொண்டது.....!

இதன் தொடர்ச்சியாகத்தான் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சினிமா நூற்றாண்டு விழாவில், அந்தத் துறையில் எழுபது ஆண்டுகளாக தொடர்ந்து இன்றுவரை பணியாற்றிக்கொண்டிருக்கும் கலைஞர் அவர்களை புறக்கணித்து புலகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் பாஸிஸத்தனமான கோரைப்பற்கள் முகம் காட்டும் ஜனநாயகத்திற்கு விரோதமான கொடுங்கோல் ஆட்சிதான் நம் முன்னே கடை விரிக்கப்பட்டிருக்கின்றது!!

இது பற்றி கலைஞரிடம் கேட்டதற்கு, “நான் யார்? என்னை ஏன் அழைக்க வேண்டும்?” என்று திரும்ப ஒரு கேள்வியையே பதிலாக்கி விட்டு கடந்து போய் விட்டார்....!!!

அவர் கடந்து போய் விட்டார். ஆனால் அந்தக் கேள்வி அது கேட்கப்பட்டதற்குப் பிறகு பூதாகரமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. 

யாருக்கு முன்னே அது நிற்கின்றது?

நம் முன்னே தான்! இந்த கொடுங்கோல் ஜெயலலிதா ஆட்சிக்கு வழியமைத்துக் கொடுத்த நம் தமிழக மக்களுக்கு முன்னே தான் இந்தக் கேள்வி பயமுறுத்துவது போல் நின்று கொண்டிருக்கிறது. இதற்கான பதிலை ஆட்சியாளரிடமிருந்து பெறுவதற்கு நாம் தொடர்ந்து தவறிக்கொண்டிருந்தால், நாளை பொதுமக்களாகிய நாமே அவமானத்திற்கும், அடிமைத்தனத்திற்கும், நம்மேல் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளுக்கும் ஆளாக நேரிடுவதை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும்.

கடந்த ஆட்சியில் தவறுகள் நடந்திருப்பதாக தற்பொழுதைய முதல்வர் நம்பினால், அந்த ஆட்சியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மேல் வழக்குத்தொடர்ந்து நீதி மன்றத்தில் நிறுத்தியிருக்க வேண்டும்!!

ஆனால் இப்பொழுது நடந்து கொண்டிருப்பது என்ன? தற்பொழுதைய முதல்வர் ஜெயலலிதாவின் மேல் திமுக தொடர்ந்த வழக்கிலிருந்து விடுதலை பெற அல்லாடிக் கொண்டிருக்கின்றார். தனக்கு எதிராக வாதாடுபவரை மாற்றக்கூடாது என்று அழாத குறையாக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு இந்திய நீதித்துறையே கேலியாகச் சிரிக்கும் அளவிற்கு தமிழக மானத்தைக் கப்பலேற்றிக்கொண்டிருக்கின்றார்....!!!

இந்த இடத்தில் தான் மக்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். திமுக செய்தது ஊழல் ஆட்சி என்று ஜெயலலிதாவைக் கொண்டு வந்தோம். ஆனால் இப்பொழுது நடந்து கொண்டிருப்பது என்ன? ஜெயலலிதா தான் தன் மீதான வழக்கிலிருந்து தப்பிக்க ஒவ்வொரு நீதிமன்றமாக அலைந்து கொண்டிருக்கின்றார். அவர் நீதியை வளைப்பதை கலைஞர் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்று சேர்த்துக்கொண்டிருக்கின்றார்...!!!

தான் ஆட்சிக்கு வந்தாலும் திமுக போட்ட வழக்கால் அல்லல்படுவதை தவிர்க்க முடியாத கோபம், கலைஞர், தளபதி மேல் நியாயமாக குற்றம் சொல்லி வழக்குத் தொடுக்க இயலாத இயலாமை, இதெல்லாம் சேர்ந்து எப்படியாவது கலைஞரை அவமானப்படுத்த வேண்டும் என்ற வெறி.....

அது தான் இப்படி சட்டமன்ற வைரவிழாவானாலும், சினிமா நூற்றாண்டு விழாவானாலும் இவ்விழாக்களில் கதாநாயகனாக உட்கார வைக்க வேண்டியவரை கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்து, உள்ளுக்குள்ளே குரூர சந்தோஷத்தை அடைந்துகொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது!

ஆனால் ஜெயலலிதா அவர்களே, அந்த விழா மேடையில் உங்கள் முன்னே பேசுகின்ற ஒவ்வொருவரும் பேசாமல் மறைக்க எத்தனிக்கும் அந்த ஒரு வார்த்தை..., அந்த ஒரு பெயர்..., அங்கே எதிரே குழுமியிருக்கும் ஆயிரக்கணக்கான திரைக்கலைஞர்களின் மனதில் பிரம்மாண்டமாக நிரம்பியிருக்கும் அந்த உருவம், ஒட்டுமொத்தமாக ஒரே எண்ண வடிவாக, ஒரே சக்தியாக உங்கள் தலைமேல் வந்து இறங்கும்.

இது ஒரு ஆரம்பப்புள்ளி, உங்கள் வீழ்ச்சிக்கு!!! இது இன்னுமொரு ஆரம்பப்புள்ளி எங்கள் தலைவனின் எழுச்சிக்கு!!!!

நீங்கள் நினைப்பது போல் இது கலைஞருக்கான அவமானமில்லை. ஆனால் மக்கள் மன்றத்தில் உங்கள் உண்மையான முகத்தை தோலுரித்துக்காட்ட எங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு இது! இப்பொழுது தான் தங்களால் ஏற்படுத்தபட்ட பஸ் கட்டண உயர்வும், மின் கட்டண உயர்வும் மக்களை தாக்கத்தொடங்கியிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியைப் போன்று மக்களிடம் பணப்புழக்கமில்லை, உட்கட்டமைப்பு வேலைகள் நின்று போனதால், அடித்தட்டு மக்களிடம் வேலையில்லாத்திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் உருவாகியிருக்கிறது..... ஊரெங்கும் கொலை, கொள்ளை, நகை பறிப்பு, ஜாதிக்கலவரங்கள்.....

என்று தமிழக மக்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இப்பொழுது தான் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள். கடந்த ஆட்சியில் நடைபெற்ற இலவச திட்டங்களை விமர்சித்துத்தான் ஆட்சிக்கட்டிலுக்கே வந்தீர்கள், ஆனால் அதற்கும் மேலாக இப்பொழுது நீங்கள் இலவசக்கடைகளை விரித்திருப்பதை மக்கள் கணக்கெடுத்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.

எவ்வளவு காலத்திற்குத்தான் ஊடகங்களை நம்பியே நீங்கள் அரசியல் செய்ய முடியும்? மக்கள் அதையும் உணரத்தொடங்கிவிட்டார்கள். தி இந்து பத்திரிக்கை வந்தது தினமலருக்குத்தான் ஆப்பு என்று ஒரு ஆட்டோ ஓட்டுனர் அஸால்ட்டாக சொல்லும் அளவிற்கு ஊடகங்கள் பற்றிய மக்களின் கணிப்பு மிகத் தெளிவாக இருக்கிறது. அவர்கள் உங்கள் படம் போட்ட பலூனை ஊதினால் அதை சூரியன் என்று மக்கள் நம்பிவிடுவார்கள் என்று இனி எண்ண வேண்டாம்.

ஆகவே இன்னும் இரண்டு நாட்களுக்கு முடிந்த வரை இந்த சினிமா விழாவில் சந்தோஷமாக கழித்து விடுங்கள். ஏனெனில் அதன்பிறகு மக்கள் மன்றத்தில் நீங்கள் ஏற்ப்போகும் ஒவ்வொரு மேடையுமே எட்டிக்காயாகத்தான் உங்களுக்கு இருக்கப்போகிறது...!!!

கடைசியாக ஒட்டுமொத்த திமுகவினர் சார்பாகவும் உங்களுக்கு ஒரு நன்றியினைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் ஜெயலலிதா அவர்களே!!

ஒரு மேட்டிமை குணம் பொறுந்திய மனுஷியாக நீங்கள் தலைவர் கலைஞர் அவர்களை இந்த விழாவுக்கு முறைப்படி அழைத்து செய்ய வேண்டிய நியாயமான மரியாதையைச் செய்திருந்தால் அது ஒரு சம்பிரதாயமாண விழாவாகவே முடிந்திருக்கும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கொள்கையில் வழுவாது நீங்கள் ஆட்சிபுரிவதாக நாங்கள் உட்பட தமிழக மக்கள் அனைவரும் உங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியிருப்பார்கள்....!!!

ஆனால் உங்களின் இயல்பான குரூர புத்தியுடன் இவ்விழா சம்பந்தப்பட்ட செயல்பாடுகளிலும் நடந்து கொண்டு, எங்களுக்கான வேலைப்பளுவை குறைத்துக்கொடுத்ததோடு மட்டுமல்லாமல், எங்கள் உடன்பிறப்புக்கள் அனைவரும் தலைவர் கலைஞர் அவர்களின் திரைத்துறை சாதனைகளை அவரவர் பாணியில் மிகத்தெளிவாக பட்டியலிட்டு இன்றைய இளைய தலைமுறை வரை ஒரே நாளில் கொண்டு சென்று சேர்த்த அந்த நல்ல நிகழ்வும் நடப்பதற்கு காரணமாக அமைந்த உங்களுக்கு மீண்டும் ஒரு முறை திமுக உடன்பிறப்பாக நன்றி சொல்லிக்கொள்கின்றேன்!!!



1 comment:

Anonymous said...

உங்க காமெடி பெரிய காமெடியா இருக்குங்கடா!