Saturday, June 22, 2013

பட்டதாரி இளைஞர்களும், பயனுள்ள வேலை வாய்ப்புகளும்! பாகம் - 1

எங்க நிறுவனம் ஆரம்பித்து கடந்த ஏப்ரலோடு பதினாறு வருடங்கள் பூர்த்தியாகி விட்டது.  ஆரம்பித்த புதிதில் இருந்தே, FMCG துறையைச் சேர்ந்த எங்கள் தயாரிப்பை உற்பத்தியோடு மட்டும் ஒதுங்கிக் கொள்ளாமல், சந்தைப்படுத்தலும் சேர்த்தே தான் செய்து வருகின்றோம். நிறுவனம் சிறியது என்றாலும் FMCG துறையில் ஈடுபட்டு சந்தைப்படுத்துதல் செய்யும்ஒரு MNC நிறுவனத்தில் நடைமுறையில் இருக்கும் அதே மாதிரியான நெட் ஒர்க் வடிவமைப்பில் தான் நாங்களும் தயாரிப்புகளை விநியோகம் செய்து வருகின்றோம்.

மெயின் மேட்டர்க்கு வருகிறேன். ஆரம்பித்த புதிதில் விற்பனை பிரதிநிதிகளுக்கான தேர்வு நடத்தும் பொழுது நிறைய பட்டதாரிகள் விண்ணப்பத்தோடு வருவதுண்டு. அவர்களில் எங்களுக்குத் தேவைப்படும் எண்ணிக்கையை திறமையானவர்களாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்வோம்.

காலம் செல்லச் செல்ல இந்த நடைமுறையில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. வேலைகேட்டு ஆட்கள் வருவதே குறைந்து போன நிலையில், நாம் விளம்பரம் தந்து ஆட்களை கூவிக்கூவி அழைத்தாலும், ஒரு சிலரே வந்தார்கள். தேர்ந்தெடுத்து ஆட்களை பணியமர்த்துவது குறைந்து போய், வந்தவர்களை சேர்த்துக் கொள்ளும் நிலைமை வந்தது.

இன்னும் சிறிது காலத்திற்குப் பிறகு, அந்த சொற்ப ஆட்களும் வராமல், பட்டதாரி அல்லாத, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்களையெல்லாம் கூட சேர்த்துக் கொள்ளும் நடைமுறை அமலுக்கு வந்தது

ஒரு கட்டத்தில், அவர்களை வேலை வாங்குவதே ரத்தக்கொதிப்பை அதிகரிக்கச் செய்துவிடும் நிலைமைக்கு வந்து விட்டது. பல நாட்களில் ஏரியா போகாமலேயே போய் வந்ததாக கணக்குச் சொல்லி விடுவார்கள். இதைக் கண்டு பிடித்து, நானே அவர்கள் வருகையை உறுதி செய்ய மார்க்கெட் சென்று சோதிக்கும் நிலை தினம் தினம் உருவானது.

அடுத்த கட்டமாக இப்படியெல்லாம் செக் பண்ணி வேலை வாங்கினால் இந்த வேலையே வேண்டாம் என்று அவர்கள் சென்றுவிடும் சூழலுக்கும் பழகிப்போனோம். வேலைக்கு சேர்ந்தா எல்லா நாளும் வேலை செய்யணும்ன்னெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது என்றெல்லாம் நியாயம் பேசும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

அதுனால இருக்குற ஆட்களையும் விட்டுடக்கூடாதேன்னு, நான் மார்க்கெட் போவதையே நிறுத்திக் கொண்டேன். விநியோகஸ்தர்களிடமிருந்து ஃபோன் வரும். ஆட்கள் சரியாக வேலை செய்வதில்லை, ஆர்டர்கள் வருவதில்லை. ஒரு மணி நேரம் வேலை செய்தாலே பெரிய விஷயம் என்றெல்லாம் சொல்வார்கள். அதே சமயம் எல்லா நிறுவனங்களிலும் இதே நிலை தான் என்று நமக்கே சமாதானமும் சொல்லி, இருக்கிற ஆட்களை விட்டுவிட வேண்டாம் என்றும் சொல்லி வைப்பார்கள்!

ஒவ்வொரு விநியோகஸ்தருக்கும் நானே மாதத்தில் பாதி நாள் சென்று மார்க்கெட் பார்த்துக்கொடுக்கும் நிலையும் (அந்த பகுதி விற்பனை பிரதிநிதியையும் உடன் அழைத்துக்கொண்டு) உருவானது. இந்தத் துறையில் இருக்கும் எல்லா நிறுவனங்களுக்குமே இந்த நிலை உருவாகிவிட்டது. சில பெரிய நிறுவனங்கள் ஏரியா சேல்ஸ் மேனேஜர் போஸ்டிங் மட்டும் போட்டு விட்டு, இண்டரீம் சேல்ஸ் ரெப் என்ற பதவியில் அந்தந்த பகுதி விநியோகஸ்தரின் வேலையாள் ஒருவருக்கே விற்பனையில் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் என்று கொடுத்து விடுவார்கள்.

கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் இந்த துறையில் மிகப் பெரிய சங்கடங்கள் ஏற்பட்டு விட்டது. தயாரிப்புகள் புஷ் மார்க்கெட்டாக இருந்த நிறுவனங்கள் எல்லாம் கடையை கட்டிவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டது. புல் மார்க்கெட் இருந்த நிறுவனங்கள் பல்வேறு தடைகளையும் தாண்டி தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தன.

இத்தனைக்கும் இந்தத் துறை உலக அளவில் என்றைக்குமே நல்ல சம்பளத்தில் அதிக வேலை வாய்ப்புகளை வைத்திருக்கும் ஒன்று. இங்கே அனுபவம் ஏற ஏற வருமானமும் ஏறும். தொடர்ந்து இந்த துறையில் ஐந்து வருடம் அனுபவம் பெற்று நேர்மையாக உழைக்கும் மனநிலையில் இருக்கும் ஒருவர், நிச்சயமாக சம்பளம் மற்றும் டி ஏ, மற்றும் இதர படிகள் எல்லாம் சேர்த்து மிகக் குறைந்த பட்சமாக இருபத்தைந்தாயிரம் ரூபாயும், அதிக பட்சமாக திறமைக்கு ஏற்றார் போல ஐம்பதாயிரம் வரையிலும் கூட வாங்கலாம். ஃப்ரெஷ்ஷர்ஸ்க்கே முதல் மாத சம்பளம் அனைத்து படிகளையும் சேர்த்து பத்தாயிரத்துக்கு குறையாது. ஆறு மாதத்தில் நிச்சயம் இதிலிருந்து உயர்வு இருக்கும்.

அப்படியிருந்தும் இதையே அலட்சியம் செய்யும் அளவிற்கு பட்டதாரிகள் இந்தப்பக்கமே எட்டிப்பார்க்காமல், தொலைத்தொடர்புத் துறை அல்லது சென்னை போன்ற மாநகராட்சி நகரங்களில் கைக்கும் வாய்க்கும் போதாமல் சம்பளம் வாங்கி ஒண்டிக் குடித்தனத்தில் வாழ்வது தான் சிறப்பு என்று நினைத்துக் கொண்டே ஒதுங்கி விட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

இந்த மோசமான நிலையிலிருந்து அதிரடி திருப்பமாக கடந்த ஆறு மாதங்களாக வசந்தம் வீச ஆரம்பித்திருக்கின்றது. சமீபகாலமாக தினம் ஒன்று இரண்டு என்று பட்டதாரிகள் வேலை கேட்டு விண்ணப்பத்தோடு வருகின்றார்கள். அவர்களில் தேர்ந்தெடுத்தவர்களை வேலையில் சேர்த்துக்கொள்கிறேன்.

வேலையில் சேர்ந்தவர்களில் சிலர் உடனடியாக வெளியேறினாலும், சிலர் இதில் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆவலாய் இருக்கின்றனர். இந்தத் துறை முழுவதுமே இப்போ கொஞ்சம் உற்சாகம் அடைந்திருப்பது போல தெரிகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இன்றையை இளைய பட்டதாரிகளுக்கு இந்த மாதிரி ஒரு துறை இருப்பதே அதுவும் இன்றைய ஐடி சம்பளத்தை விட அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்புள்ள துறை இருப்பதே தெரியாமல் இருப்பது தான்.

கடந்த பதினைந்து வருடங்களில் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் மிகப்பெரிய தொழிற்புரட்சி அல்லது வேலையில்லா திண்டாடத்திற்கான தீர்வுகள் செயலபடுத்தப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. அது கொஞ்சம் ஓவர் டோஸாகிப் போய், ஒரு தலைமுறையையே தவறான பாதைக்கு கொண்டு சென்றிருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

டிகிரி முடித்து ஐந்து வருடங்களுக்கு மேலானவர்கள், இதுவரை அந்த இடைவெளியில் ஏழெட்டு இடங்களில் ஒன்றிரண்டு வருடங்கள் மட்டுமே வேலை பார்த்து மற்ற நாட்களில் வீட்டிற்கு பாரமாய் இருந்திருப்பதும் வேலை கேட்டு வருபவர்களிடமிருந்து தெரிய வருகிறது.

கடந்த பத்து வருடங்களில் இந்த சமூகம் ஏதோ ஒரு மாயையில் சிக்கிக் கொண்டிருந்திருப்பதும் தெரியவருகிறது. நம் நாட்டின் மிகப் பெரிய செல்வமான மனிதவளம் உள்நாட்டுத் தொழில்களில்  ஈடுபடுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டிருப்பதும் தெரியவருகிறது.

பீகார், நேபாள், ராஜஸ்தான், ஒரிசா தொழிலாளர்கள் எல்லாம் இங்கே ஊடுறுவ நம் தமிழக அரசுகளின் கண்மூடித்தனமான இலவசங்கள் வழிவகை செய்துவிட்டிருப்பதையும் உணரமுடிகிறது. இன்றைக்கு 22 லிருந்து 30 வயதுக்குள்ளிருக்கும் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் ஒரு பயம் கலந்த எதிர்பார்ப்போடு தவித்துக்கொண்டிருப்பதையும் உணர முடிகிறது.

ஐடி துறையிலிருந்து பட்டதாரி இளைஞர்களின் பார்வை இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற துறைகளின் மீது பரவ ஆரம்பித்திருப்பதும் தெரியவருகிறது.

இது பெரிய அளவிலான விவாதத்துக்குறிய விஷயம். அதனால தான் சொல்லனும்ன்னு தோனிச்சி எழுதினேன். இதன் தொடர்ச்சியான இந்த துறை பற்றிய அறிமுகமும், அதில் இருக்கும் வேலை வாய்ப்புகள் மற்றும் சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகள் பற்றியும் தொடர்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன்.



3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயம் என்றே உருவாக்கி விட்டது... இன்று தான் தெரிகிறது என்றால் வியப்பு தான்...

தொடர்ந்து எழுதுங்கள்... பலரும் பயன் பெறுவார்கள்... இன்றைய நிலைமை அப்படி...!

kkk said...

I realise the truth in every word of this pathivu, in my business.Please go ahead.MY heartfelt THANKS for sharing this.

கொக்கரக்கோ..!!! said...

நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் & kkk