Monday, January 21, 2013

திமுக Vs அதிமுக - பாராளுமன்ற தேர்தல்?!

இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா கன ஜோராய் ஆரம்பித்து விட்டது. அகில இந்திய அளவில் பார்த்தால், காங்கிரஸ் தனது உயர்மட்டக் குழு மாநாட்டைக் கூட்டி ராகுலை துணைத்தலைவராக அறிவித்து அவரை வெளிப்படையாக களம் இறக்கி விட்டிருக்கிறது. பாஜகவும் தனது தலைவரை தேர்ந்தெடுக்கும் முஸ்தீபுகளில் இறங்கிவிட்டது.

ஆனால் நமக்கு அதெல்லாம் இப்பொழுது பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டில் திமுக அல்லது அதிமுக இரண்டில் யார் அதிக இடங்களைக் கைப்பற்றப் போகிறார்கள்? என்பது தான் ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்ப்பாப்பாகவுமே இப்பொழுது இருந்து கொண்டிருக்கிறது. வடக்கர்கள் அப்படி எதையும் காட்டிக் கொண்டிருக்காவிட்டாலும் தேசியக் கட்சிகள் மற்றும் மத்திய அரசைக் கட்டியமைக்கும் சூத்திரதாரிகள் அனைவரது அடி மனதுமே இப்படி ஒரு மன நிலையோடு தான் திக் திக் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

ஏனெனில் கடந்த இருபத்தியிரண்டு ஆண்டுகளாக (நடுவில் நரசிம்மராவ் ஆட்சிக்காலம் தவிர்த்து) திமுக அல்லது அதிமுகவின் ஆதிக்கம் தான் மத்திய அரசை அமைப்பதில் அதீதமாய் இருந்திருப்பதை அனைவரும் உணராமல் இருக்க முடியாது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், வாஜ்பாயில் ஆரம்பித்து, இரண்டு முறை மன்மோகன் சிங் அமைச்சரவை வரை ஆக மொத்தம் 15 ஆண்டுகளாக தொடர்ந்து திமுகவின் ஆளுமை மத்திய அரசில் இருந்ததை யாரும் மறுக்க இயலாது.

அதே எதிர்ப்பாப்பு வரும் பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தின் முக்கிய கட்சிகள் மீது இருப்பதை தவிர்த்து விட்டு அடுத்த மத்திய ஆளும் அமைச்சரவை பற்றி யாரும் எந்த கணிப்பையும் வெளிப்படுத்த முடியாது.

சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம்! தமிழகத்தைப் பொறுத்த வரை வரும் பாராளுமன்றத் தேர்தல் என்ன மாதிரியான முடிவுகளைத் தரும்? அச்சு அசலாக யாரும் அதை இப்பொழுதைக்கு கணிக்க முடியாது எனினும், இது எந்தப் பாதையை நோக்கி நகரும் என்பதை ஓரளவிற்கு ஊகிக்க இயலும்.

அதிமுக வைப் பொறுத்த வரை, சமீபத்தில் அதன் பொதுக்குழுவில், ஜெயலலிதா அறிவித்ததைப் போன்று, 40 தொகுதிகளிலும் தனித்து நின்று தேர்தலை சந்திப்போம் என்ற நிலைப்பாடு தற்பொழுது வரை தொடர்ந்தாலும், அதிகபட்சம் 10 தொகுதிகள் வரை, சிறிய அல்லது சில்லறைக் கட்சிகளுக்கு ஒதுக்கும் மனநிலையில் இருப்பதாகத் தான் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான கட்சி நிர்வாகிகளின் எண்ண ஓட்டமும் அவ்வாறே இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கூட்ட்ணியின்றி போட்டியிடுவதை அவர்களே ஒரு கேலிப்பேச்சாக எண்ணி கடந்து போவதைத் தான் பார்க்க முடிகிறது. அது தற்கொலைக்குச் சமம் என்றே பலர் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஜெயலலிதாவிடம் இதை நேரிடையாக சொல்லும் தைரியம் அவர்களுக்கு இல்லை என்றாலும், அம்மாவுக்கு எல்லாம் தெரியும், இப்போ சும்மா ல்லுல்லாவுக்குத் தான் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள், என்பது போல் தான் பேசுகின்றார்கள்!

அதே சமயம் திமுகவைப் பொறுத்தமட்டில் தற்பொழுது வரை காங்கிரஸுடன் கூட்டணி என்பதில் மிகத் தெளிவாக இருப்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். அதிமுகவுடன் குறைந்தபட்சம் வரும் தேர்தலிலாவது கூட்டணி வைக்கும் வாய்ப்பு நிச்சயம் கிடையாது என்பதால் விஜயகாந்த் திமுகவின் பக்கமாக சாயும் வாய்ப்புகள் தான் அதிகம்.

நாட்கள் நகர நகர எதிர்பாராத மாற்றங்கள், புதிய கூட்டணிகள் எல்லாம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றாலும், இப்பொழுதைய நிலையில் வரும் பாராளுமன்றத்திற்கான கூட்டணி என்பது......

திமுக - காங்கிரஸ் - தேமுதிக - விசி என்ற ஒரு அணியும், அதிமுக - இரு கம்யூனிஸ்ட்டுகள் - பாமக - மதிமுக - மற்றும் சில லெட்டர்பேடு கட்சிகள் என்ற இன்னொரு அணியும் தான் நம் கண் முன்னே குத்து மதிப்பாக தெரிகின்றன. இந்த அமைப்பிலேயே தமிழகத்தின் தேர்தல் களம் அமையும் என்றால் என்ன மாதிரியான தேர்தல் முடிவுகள் ஏற்படும் என்பதை நாம் கொஞ்சம் அலசலாம். 

எவ்வளவோ மக்கள் நலத் திட்டங்கள், உட்கட்டமைப்புகள், நல்ல நிர்வாகம், பணப்புழக்கம், தடையில்லா விவசாயம் என்று கடந்த திமுக ஆட்சியில் மக்கள் அனுபவித்திருந்தாலும், ஊடகங்களாலும், எதிர்க்கட்சிகளாலும் சரியாக திட்டமிடப்பட்டு பரப்புரை செய்யப்பட்ட ஐந்து விஷயங்களில் தான் தமிழக வாக்காளர்கள் மிகப் பெரிய மாற்றத்திற்கான எதிர்பார்ப்போடு இந்த அதிமுக ஆட்சியை கொண்டு வந்திருந்தார்கள்.

1. மின் தடை, 2. ஸ்பெக்ட்ரம், 3. குடும்ப அரசியல், 4. குறுநில மன்னர்களின் (நீண்ட கால மாவட்ட செயலாளர்கள்) அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் 5. விலைவாசி உயர்வு.....    இந்த ஐந்து விடயங்கள் தான் மக்களை திமுகவுக்கு எதிராக வாக்களிக்கத் தூண்டிய காரணிகளாகும்.

ஆனால் புதிய ஆட்சியில் முன்பை விட ஐந்து மடங்கு அதிகமான மின் தடை நடைமுறையில் இருப்பதும், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் பிசுபிசுத்துப்போய் ஏலம் விட்டும் சொல்லப்பட்ட அந்த அதீத தொகை வராமல் ஏமாற்றியதும், திமுகவின் குடும்ப அரசியல் குழப்பங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அடுத்தது ஸ்டாலின் தான் அதன் தலைவர் என்று கலைஞராலேயே அறிவிக்கப்பட்டிருப்பதும், குறுநில மன்னர்கள் எல்லாம் இப்பொழுது ஸ்டாலின் வருகையால் பல் பிடுங்கப்பட்ட நிலையில், வாரிசு அரசியலில் இல்லாத இளைஞர் அணி புது எழுச்சியுடன் கட்டமைக்கப்பட்டிருப்பதும், கடந்த ஆட்சியில் நியாயமாக சீரான வளர்ச்சியுடன் இருந்த விலை வாசி இப்பொழுது மடங்குகளில் உயர்த்தப்பட்டு விண்ணை முட்டி மக்களிடமும் பணப்புழக்கம் இல்லாத நிலையைக் கொண்டு வந்திருப்பதும்........

....தமிழக வாக்காளர்களின் மனநிலையை கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய மனநிலையில் இல்லாமல் மாற்றியிருப்பது கண்கூடான விஷயம்.......

விவசாயமும், சிறு குறு தொழில்களும் முற்றிலுமாக முடக்கப்பட்ட நிலையில், அதிகாரமற்ற வாய்மூடி அமைச்சர்களால் அந்தந்தப்பகுதிக்குத் தேவையான தொலைநோக்குத் திட்டங்கள் மட்டுமல்லாது, உடனடித் தேவையான பல திட்டங்களும் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருப்பதால்....  மக்களின் மன நிலை ஆட்சிக்கு எதிராக இல்லை என்று ஆளுங்கட்சியும், பத்திரிகைகளும் நம்பினாலும், சட்ட மன்ற தேர்தல் நிலவரத்தைப் போல அதிமுகவுக்கு ஆதரவான மனநிலையில் இல்லை என்பதை அவர்களாலேயே மறுக்க முடியாது!

எனவே ஜெயலலிதா அறிவித்துள்ளதைப் போன்று தனித்து நின்றாலும் சரி, சரியான பலம் மிக்க கூட்டணி அமைக்கா விட்டாலும் சரி, வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு எதிரானதாகத் தான் அமையும்.

ஆனால் இதுவரையிலான ராகுல் காந்தியின் செயல்பாடுகள், திமுவுக்கு இணக்கமானதாக அமைந்திருக்கவில்லை என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால், அதிமுகவினருக்கு ஆதரவான அல்லது திமுகவுக்கு எதிரான  மனநிலை கொண்ட சில காங்கிரஸாரின் போதனையால் தேமுதிக மற்றும் சில சில்லறைக் கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு காங்கிரஸ் தனியாக மூன்றாவது அணி அமைத்து களம் காணுகின்ற வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதை மறுப்பதற்கில்லை.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கலைஞர் Vs ஜெயலலிதா (அவரின் ஆலோசகர்கள்) என்ற நேரடி அரசியல் சாணக்கியத் தனங்களின் உச்சக்கட்ட வெளிப்பாட்டை தமிழக மக்கள் ஆவலுடன் கண்டு களிக்கலாம். ஆனால் அப்படி ஒரு பலம் மிக்க மூன்றாவது அணி அமைவது ஆட்சிக்கு எதிரான அதிருப்தி ஓட்டுக்கள் பிரியக் கூடிய வாய்ப்பு என்ற வகையில் அதிமுகவுக்கு ஆதரவான நிலையாகத் தான் அமையும். ஆகவே பலம் மிக்க மூன்றாவது அணி அமைக்க ஜெயலலிதாவே முயற்சிகளை திரைமறைவில் முன்னெடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் அதிகமாகவே இருக்கின்றன.

இப்படி ஒரு சூழ்நிலை அமையும் பட்சத்தில், உள்ளாட்சித் தேர்தலில் பரீட்சித்துப் பார்த்த, தனித்து நிற்கும் நிலைப்பாட்டை திமுக எந்த தயக்கமும் இன்றி எடுக்கும் என்பதையும் யாரும் மறுக்க முடியாது!

அப்படி ஒரு நிலை ஏற்படுமானால், திமுகவும் அதிமுகவும் ஆளுக்கு ஒன்றிரண்டு சில்லறைக்கட்சிகளை தங்களோடு இணைத்துக் கொண்டு கிட்டத்தட தனியாகவும், தமிழகம் முழுவதும் பரவலாக இருக்கும் தேமுதிகவும், காங்கிரஸும் தங்களோடு சில சில்லறைக் கட்சிகளை இணைத்துக் கொண்டு பலம் மிக்க மூன்றாவது அணியாகவும் நின்று, தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் பரிமாணம் முன்னெடுக்கப்படும் வாய்ப்பை உருவாக்கும். இது இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் ஒரு மாற்றை கொண்டுவர பிரிபப்படும் கணிசமான பொதுமக்களுக்கு பெரியதொரு வரப்பிரசாதமாகவும்  அமையும்.

பொது மக்களுக்கு இப்படியென்றால், இந்த மாதிரியான சூழ்நிலை திமுக மற்றும் அதிமுக இரண்டுக்குமே தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வதற்கும், தங்களைப் பற்றிய மக்களின் உண்மையான மதிப்பீட்டை உணர்ந்து கொள்ளவும் வழி வகுக்கும்.

பாராளுமன்ற தேர்தல் எப்பொழுது வரும் என்றே தெரியாத நிலையில் ஆனால் ஒரு வருடத்திற்குள் நடந்து விட்டிருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் இன்றைய அரசியல் மேக மூட்டங்களை வைத்து இவ்வளவு தான் நம்மால் யூகிக்க முடியும் என்றாலும், தமிழகத்தில் பலம்மிக்க மூன்றாவது அணி அமைய நீண்ட காலத்திற்குப் பின் இப்பொழுது தான் சாதகமான சூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் நலன் கருதி அப்படி ஒரு அரசியல் கூட்டணிகள் அமைய வேண்டும் என்ற அவாவோடு இப்பொழுதைக்கு இந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு பற்றிய கணிப்புகளின் முதல் அத்தியாத்தை நிறைவு செய்வோம்!




4 comments:

பெம்மு குட்டி said...

அதிமுக ஆட்சி வந்தப்பவும், இப்படி ஒரு போஸ்ட் போட்டிருந்திங்க. அதுல காங்கிரஸ் கூட சேர்ந்ததுதான் தோல்விக்கு காரணம்ன்னு சொல்லியிருந்தீங்க ...இப்ப நீங்க சொல்லியிருக்கிற காரணங்களை நான் அப்ப சொன்னப்ப அப்படி இல்லவேயில்லைன்னு சாதிச்சீங்க .... ;-))))

இப்ப மனசுமாறி உண்மையே ஒத்துக்கொண்டதுக்கு நன்றி ;-))

பெம்மு குட்டி said...

ஆனா இப்பவும் அதே தப்பைத்தான் செய்திருக்கீங்க ...... இப்ப நடக்க போறது மத்திய அரசுக்கான தேர்தல், அதுல காங்கிரஸா, பிஜேபியான்னு தான் தமிழக மக்கள் பார்ப்பாங்க ..... அந்த தேசிய கட்சிகள் எந்த கூட்டணியில இருக்கோ, அதப் பொருத்து வெற்றி தோல்வி வித்தியாசப்படும், (உதா 1998 தேர்தல், அதிமுக வெற்றி) , இப்போதைக்கு பிஜேபி யை யாரும் தமிழகத்துல பக்கத்துல சேர்ந்துக்க போறதில்லை ,,,,,


காங்கிரஸை மக்களுக்கு பிடிக்கலன்னா, அதகூட கூட்டணி வைச்சிருக்கிற உங்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும்,

மின்வெட்டு அளவுக்கதிமான கோபத்தை மக்களிடம் ஏற்படுத்தியிருந்திச்சினா / ஏற்படுத்துதின்னா அதிமுகவுக்கு பாதிப்பு .......

கொக்கரக்கோ..!!! said...

எதுவா இருந்தாலும் தெளிவா லிங்க் கொடுத்திட்டு பேசுங்க பெம்மு. போற போக்குல சேற்றை வாறி இறைப்பது போல பேச வேண்டாம்.

நான் எதை மாற்றிப் பேசினேன் என்பதை தெளிவான ஆதாரங்களுடன் விளக்கவும்.

கொக்கரக்கோ..!!! said...

இந்த புது ப்ளாக் இந்த ஆட்சியின் ஆரம்ப்த்துலேர்ந்தே இருக்கு. பழைய ப்ளாக்கிலிருந்தும் அதே தேதியிட்டு சில பதிவுகளை இதில் ஏற்றியிருக்கிறேன்.