Tuesday, June 19, 2012

மோட்டுவலையப் பார்த்து யோசிச்சது..!!

இது என் வலைப்பூவின் புதிய பரிமாணம்.!

சில சமயங்களில் இரவு நேரத்தில் தூக்கத்திற்கு மனதும் மூளையும் ஒன்றிணைந்து தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில், அன்று முழுமைக்கும் நாம் கடந்து வந்த பற்பல மனிதர்கள், காட்சிகள், சம்பவங்கள், இசை, சண்டை சச்சரவுகள், சுக துக்ககங்கள்.... என்று எல்லாவற்றிலுமிருந்து, சிலவை மட்டும் நம் மனதின் அடியில் சம்மணமிட்டிருக்கும்.

அந்த நினைவின் வெளிப்பாடு, வேறு சில பரிமாணங்களுடனோ அல்லது முன்பொறு நாள் நம் வாழ்வில் நடந்திருந்த இதற்கு இணையான வேறொரு சம்பவத்தின் முளை விட்ட விருட்சமாகவோ இருந்திருக்கும். அப்படிப்பட்ட நினைவுகளின் தொகுப்பை அவ்வப்பொழுது தொகுத்து பதிவாக்கினால் என்ன? என்று எழுந்த சிந்தனையின் கோர்வை  தான் என் வலைப்பூவின் இந்த புதிய பரிமாணமாக வந்திருக்கிறது. 

தொடர்ந்து அவ்வப்பொழுது, சீரான இடைவெளியில் இந்த மாதிரியான என்னுடைய சிந்தனைகளை உங்களிடம் பரிமாறி, வம்படி வழக்காக சாப்பிடச் சொல்வேன்!!!!!!
****************************************************************************************

சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் தேவர் மகன் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. நல்ல இளமையோடு இருந்த காலத்தில் வந்த படம்.  திருமணத்திற்கு முன் காதலித்துக் கொண்டிருந்த வசந்தகால சமயத்தில் வந்த படம் அது.

இளங்கலை படிக்க ஆரம்பிக்கும் போதே, கமலின் தீவிர ரசிகனாக மாறிவிட்டிருந்தேன். அதனால் கமல் படம் என்றாலே அதிலுள்ள நல்லது கெட்டதுகளையெல்லாம் ஆராயாமல், கைதட்டி, விசிலடித்து ஆர்பாட்டத்துடன் படம் பார்ப்போம்...

இந்தப் படமும் அப்பொழுது அப்படித்தான் பலமுறை என்னால் பார்க்கப்பட்டது.

ஆனால் இப்பொழுது அப்படத்தைப் பார்க்கும் பொழுது, சாதி, சமூகம், அது தொடர்பான காட்டுமிராண்டித் தனங்கள் எல்லாம் பற்றி மனம் சென்று கொண்டிருந்தாலும்.....

லண்டன் கல்லூரித் தோழியும், காதலியுமான கௌதமியை அழைத்துக் கொண்டு, ஊருக்கும், தன் சாதி சனத்திற்கும் ஒவ்வாத ஒப்பனையுடன் ஊரைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருப்பார் கமல்.

அப்பொழுது கம்புச்சண்டை பயிற்றுவிக்கும் எதிர்கோஷ்டி ஆசாமி கமலை வம்புக்கிழுக்க, இவர் அதை புரிந்து கொண்டு நகர, அவன் விடாமல் வம்பிக்கிழுத்து முதலில் விளையாட்டுக்கு என்று ஆரம்பிக்கும் சண்டை, பிறகு தீவிரமாக மாறி அவன் நெற்றியில் சுண்ணாம்பு பொட்டு வைக்கும் போட்டியாக அதி தீவிரம் எடுக்கும்.

திறமையான இயக்குனர்களின் படங்களில் சில முக்கிய காட்சிகளில் இளையராஜாவின் பின்னனி இசை அபாரமானதொரு பங்களிப்பைத் தருவதாக அமைந்துவிடுவதுண்டு

இந்தக் காட்சியிலும் அப்படித்தான். அந்தக் காட்சிக்கு சம்பந்தப்பட்ட நடிகர்கள் உட்பட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் ஒரு பக்கம் என்றால், சரி பாதியாக இன்னொரு பக்கத்தில் இளையராஜாவின் தாளக்கட்டு மட்டும் நிற்கும்!

விளையாட்டாக கம்பு சுற்றிவிட்டு வெளியேறும் கமலை ஒடி வந்து பின்னாலிருந்து எதிர் ஆசாமி அடிக்க, அதன் பிறகு தீவிரமான சண்டைக்கு தயாராகி உடைகளை மாற்றி களமிறங்குவார் கமல்.

அப்பொழுது தான் ஆரம்பிக்கும் இளையராஜாவின் தாளக்கட்டு வாத்தியம். முதலில் ஒற்றை வாத்திய இசைக் கருவியில் தான் ஆரம்பிக்கும். சதுஸ்ர ஜாதி தாளத்தில் மூன்று ரவுண்டு ஒரே கோர்வையாக வந்த பிறகு, இன்னுமொரு துணை தாள வாத்தியம் திஸ்ர நடையாக உள்ளே நுழையும்.......

அதுவரையிலும் கமல்ஹாசன் மற்றும் ஒளிப்பதிவாளரின் கைகள் சற்றி ஓங்கியிருந்தது என்றால், அந்த புதிய தாள வாத்தியம் திஸ்ர நடையாக உள்ளே நுழைத்தவுடன், இசை என்னும் இறைவன், பார்வையாளர்களின் மூளையில் போய் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டு......

வேறு எதையும் பார்க்காதே...., கூர்ந்து கவனி....., இருக்கை நுனிக்கு வந்து உட்கார்ந்து பார்...., ஆஹ்.. இப்பொழுது கைத்தட்டு....., இப்பொழுது ஆரவாரம் செய்..... சரி இப்பொழுது லேசாக சிரித்துக் கொண்டே இருக்கையில் பின்நகர்ந்து சாய்ந்து உட்கார்ந்து பார்...... என்று ஆணையிட்டுக் கொண்டே இருக்கும்!

கிட்டத்தட்ட இரண்டரை நிமிடங்கள், நான்கு கோர்வைகளை முதல் மூன்றும் தாள வாத்தியமாகவும், நான்காவதை லய வாத்தியமாகவும் உள் நுழைத்து.... அருமையானதொரு ஆலாபனையாக......

அப்பப்பா, கண்களில் நீர் கோர்த்து விட்டது. இதை யார் சாதித்தது? இளையராஜாவா? இல்லை அவரை வேலை வாங்கிய கமல்ஹாசனா? .......

எதுவாக இருந்தாலும், அது வெளிப்பட்டது இளையராஜா மூலம் தான்........

எழுந்து நின்று கரவொலி செய்கின்றேன் இளையராஜா அவர்களே!! உங்கள் மேல் இருக்கும் வருத்தம் எல்லாம், இதை ஏன் எல்லா இடத்திலும் நியாயமாக செய்ய தவறுகின்றீர்கள் என்பது தான்...!


 சாந்து பொட்டு பாட்டு - இது ஆரம்பிக்கும் முன்பே அந்த தாளக்கட்டு ஆரம்பித்து விடும். வெறும் பாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து தான் ஆரம்பிக்கும். படத்தோடு பார்க்கும் போது இன்னும் அற்புதமாக இருக்கும்.

************************************************************************************

அது 1996 ஆம் வருடத்தின் மார்ச் மாத பின் மாலைப் பொழுது. அபுதாபில் ஒரு பணக்கார ஷேக்கின் உல்லாசப் படகு அது. அப்படகின் ஓட்டுனரும் என் நண்பருமாகிய பாபநாசம் சிவாவும் நானும் மட்டும் அந்த படகிலிருந்தோம்.

படகு, அலைகளெல்லாம் கடந்த... அமைதியாக நீர் தளும்பிக் கொண்டிருக்கும் கடற்பகுதியில் நிலை கொண்டிருந்தது. நண்பர் ஒரு தீவிர இளையராஜா ரசிகர். பேச்சு இளையராஜா, இப்பொழுதெல்லாம் சொர்ணலதாவை அதிகம் பயன்படுதுவதில்லை, மீண்டும் சித்ராவுக்கே முக்கியத்துவம் தருகிறார் என்ற ரீதியில் போய்க்கொண்டிருந்தது.

அப்பொழுது நண்பர், படகிலிருந்த அன்றைய லேட்டஸ்ட் ஆடியோ ஸிஸ்டத்தில் “போறாளே பொன்னுத்தாயி” பாடலின் சோக ட்ராக்கை ஒலிபரப்பச் செய்தார். அதை ஓட விட்டு அரையிலிருந்து வெளிவந்து கடலை பார்த்தவாறு நின்றிருந்தேன்.

வீட்டு நினைவுகளும், அப்பொழுது காதலியாக இருந்த இப்பொழுதைய என் மனைவியின் நினைவுகளும் மனம் முழுக்க விரவியிருந்தது...., காதுகலூடே அந்த பாடலும் உள் நுழைந்து மனதிலிருந்த அந்த நினைவுகளையெல்லாம் மெல்ல வெளியேற்றி கொஞ்சம் கொஞ்சமாக விரவ ஆரம்பித்து உச்சத்தில் தீவிர ஆக்கிரமிப்பாக மாறிப்போனது.

அந்தக் குரலில் இருந்த ஏதோ ஒன்று, மனம் என்ற வஸ்துவை மசாஜ் செய்து கொண்டிருந்தது. எதிரே தெரிந்த சில அங்குலங்கள் மட்டுமே நீண்டிருந்த அலைகளைக் கொண்ட கடல் நீரும், தலைச்சீவலை கன்னாபின்னாவென்று கலைக்காத வெக்கையிலிருந்து குளிருக்கு மாறும் இடைவெளியிலிருந்த அந்த இதமான காற்றும், கண்ணுக்கெட்டிய தூரத்தில் பெரிதாய் இளஞ்சிவப்பும் மஞ்சளுமாய் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்த சூரியனும்......

எல்லாம் மறைந்து போய் அந்த தேவதையின் குரல் மட்டுமே மனதை ஆக்கிரமித்தது போதாதென்று மூளையையும் அபகரித்துக் கொண்டிருந்தது!

அந்த நிமிடங்கள் தான் என் மனம் கொஞ்சம் கொஞ்சமாக ஜானகியிலிருந்து சொர்ணலதாவுக்கும், இளையராஜாவிலிருந்து ஏ.ஆர். ரஹ்மானுக்கும் இடம் பெயர்ந்து இன்றளவும் அதிலிருந்து விடுபடாத மயக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறது!!!

எதைக் கொடுத்தாலும் தகும் அந்த எமகாத குரலுக்கு!!  (இதை கிளிக்கி நீங்களும் அனுபவியுங்கள் அந்த சுகத்தை)

1 comment: