Tuesday, February 14, 2012

“இந்த வார்த்தையைச் சொல்ல ஏன் இத்தனை நாள் காக்க வைத்தீர்கள்?”

நெய்வேலியின் ‘சி’ ப்ளாக் வீடு அது. முன் பக்கம் இருக்கும் 30 அடி தோட்டத்தில் 12 அடிக்கு இழுத்து போடப்பட்ட ஒன் சைட் ஷெட் அது. அதில் தான் எனக்கு படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்த ஷெட்டில் என்னுடன் அவள் தன் அக்கா, அண்ணன் மற்றும் தன் தம்பியுடன் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க, என் மனது இருப்புக் கொள்ளாமல் தவித்துக் கொண்டே இருந்தது. ஆனால் அந்த கல்லுளி மங்கைக்கு அப்படி எந்த உணர்வுமே இல்லாது போல் தான் தோன்றுகிறது!.

அது இன்றிலிருந்து 20 வருடம் முன்னோக்கிய ஒரு ஃபிப்ரவரி மாதத்தின் 26 ஆம் நாள். புரியவில்லையா? அதாங்க 1992. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. ப்ராஜெக்ட் முடிவதற்கு. கிட்டத்தட்ட 75 நாட்களை வீணடித்து விட்டேன். இன்னும் 6 நாட்களுக்குள் இதற்கு ஒரு முடிவு தெரியாவிட்டால் ப்ராஜெக்ட் முடிந்து கல்லூரிக்கு திரும்ப வேண்டியிருக்கும்.

அவள் என்னைக் காதலிக்கிறாள் என்று புரிந்து கொள்வதற்கு ஏகப்பட்ட உதாரணங்களை கடந்த ஒன்றரை வருட அவளது செயல்பாடுகள் மூலமாக என்னால் உறுதியாக கூற முடியும். அதே அளவிற்கான அவளது எதிர்மறை செயல்பாடுகளையும் கூட என்னால் பட்டியலிட முடியும்!!

என் மனம் எவ்வளவு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.... ஆனால் அவளைப் பாருங்கள், அவள் தம்பி ஜூனூனில் வந்த ஒரு மொக்கை ஜோக்கை சொன்னதற்கு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறாள்.

ச்சே என்ன கருமம்டா இது?! நானும் எங்கூரு டைரக்டர் டி. ராஜேந்தர் மாதிரி ஒருதலை காதலனா ஆயிடுவேனோ? எங்க ஊரு ஆம்பள பசங்களுக்கெல்லாம் இது ஒரு சாபமோ?! ச்சீ ச்சீ... ச்சான்ஸே இல்ல. என்ன ஒரு கண்ணியமா இத்தனை நாளும் நடந்துக்கிட்டிருக்கேன். என் காதலை அவ மறுதலிச்சான்னா, அவ வேற எந்த பயலோடயுமே காதல் உணர்வுள்ள மனைவியா வாழ முடியாது (?!)

சௌமி, கூல் டவுன். ஏன் இப்படி நெகட்டிவ்வா திங்க் பண்ற? இப்ப என்ன நடந்துடிச்சி?  இல்ல.. அவ மேல உள்ள காதல்ல தான இவ்ளோ மன உளைச்சலோட தன்னந்தனியா, மைண்ட் வாய்ஸோட புலம்பிக்கிட்டு இருக்கேன். ஆனா அவள பாருங்க ஜாலியா சிரிச்சி பேசி அரட்டை அடிச்சிட்டிருக்கா.

அவளுக்கும் என் மேல.... சரி என் மேல கூட வேண்டாம் வேற எந்த கருமம் புடிச்சவனோடவாவது காதல் இருந்திச்சின்ன என்னய மாதிரிதான அவளும் புலம்பிக்கிட்டு இருக்கனும்?! இல்லியே, அதான் எரிச்சல் எரிச்சலா வருது!

விட்றா, விட்றா..., நீ சொல்ற படியே பார்த்தாலும் அவளுக்கு உன் மேல காதல் இருக்கோ இல்லியோ... ஆனா வேற எந்த நாதாரி கூடவும் லவ்வு இல்லன்னு புரிஞ்சு போச்சு! அதுவே ஒரு ப்ளஸ் பாயிண்டு தானே உனக்கு?!  அட ஆமால்ல? ஒரு வேளை என் காதல ஏத்துக்கலன்னாலும், க்ளீன் ஸ்லேட்னு தெரிஞ்சா போதும், அப்பறம் அத இத பேசி, செஞ்சி கரெக்ட் பண்ணிடலாம். எத்தன படம் பார்த்திருக்கோம்!!

இப்டியே மைண்ட் வாய்ஸ் கூட பேசிட்டிருந்ததுல என் தலை ஒரு 60 டிகிரிக்கு பின் பக்கமா சாய்ந்து ஒரு பக்க விட்டத்தை என் கண்கள் நோக்கிக் கொண்டிருந்தது போலிருந்தது.

போற போக்க பார்த்தா ஜெயங்கொண்டம் மெய்ன்ல கிடைக்கிற லிக்னைட்ட அக்கு வேற ஆணி வேறா பிரிச்சி மேஞ்சி நம்ம என் எல் சி லயே டிஜிஎம் ஆ வந்து உட்கார்ந்துடுவீங்க போலருக்கு என்று அவள் அக்கா சொன்ன போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன்.

நாளக்கு ரொம்ப வேலையிருக்கு, காலைல சீக்கிரமே கிளம்பனும் அதான்... என்று சம்பந்தமில்லாமல் உளறி வைத்தேன். ஆனால் அந்த உளறல் தான் என் வாழ்க்கையிலேயே ஒரு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்று எனக்கு அந்த நிமிடத்தில் தெரிந்திருக்கவில்லை.

உடனே என்னவள், ஐயையோ அவங்க வேலையை நாம கெடுக்க வேண்டாம், வாங்க போய் படுக்கலாம் என்று சொல்லி, மற்றவர் பதிலை எதிர்பார்க்காமல் வெளி கேட்டை பூட்டச் சென்றாள். நானும் இது தான் சாக்கென்று பெஞ்சில் கட்டையை நீட்ட ஆயத்தமானேன். மற்றவர்களும் படுப்பதற்கு உள்ளே சென்று விட்டார்கள்.

அவள் வெளி கேட்டை பூட்டிவிட்டு, நான் படுத்திருந்த ஷெட் கதவை சாத்திக் கொண்டிருந்தாள். மிகவும் நிதானமாக அல்லது வேண்டுமென்றே தாமதித்து அவள் செயல்படுவது போல் ஒரு ப்ரம்மை. அது எனது மனதின் பழக்க தோஷம் என்று புறந்தள்ளிவிட்டு, அவளிடம் கேட்டுவிடுவது என தீர்மானித்து ஒரு வேகத்துடன் அவளைத் திரும்பிப் பார்த்தேன்.

என்ன என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள்.  ம்ம் ஒன்னுமில்ல, உனக்கு என்ன கலர் பிடிக்கும்? ...... ஏன்?   ...ச்சும்மா!!   ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வந்தது. அந்த சிறிய இடைவெளி என் மனதில் மிகப் பெரிய தைரிய பூதத்தை கொண்டு வந்து உட்கார வைத்தது.

நானே மௌனத்தை உடைத்தேன். இல்லை... உன்னுடன் கொஞ்சம் தனியாக பேச வேண்டும். .....எப்போ?     ....எப்போ என்ற அந்த கேள்வியே என் மனதில் ஆயிரம் நம்பிக்கை கீற்றுகளை ஒரு சேர பளிச்சிட வைத்தது.

நாளைக்கு காலைல....?

ம்... பேசலாமே!

எங்க பேசலாம்?

ஒரு சிறிய புன்னகையுடன்.  நாளைக்கு சீக்கிரமா, ப்ராஜெக்ட் செண்டர்க்கு போகனும்னு சொன்னீங்கள்ல? நானும் ப்ராக்டிகல் எக்ஸாமுக்கு போகனும். 8 மணிக்கெல்லாம் காலேஜ்ல இருக்கனும். நீங்க ஏழு மணிக்கு கிளம்புனீங்கன்னா நானும் கூட வருவேன்.

சரி பச்சை கலர் ட்ரெஸ் போட்டுட்டு வர்றீயா?

............................................

ஏதோ கேட்க வாயெடுக்க... குட்நைட் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அந்த இரவு எனக்கு எப்படி இருந்திருக்கும்? அந்த 8 மணி நேரத்திற்கு மட்டும் நான் எண்பது பதிவுகள் போடலாம்! மறு நாள் காலை 6 மணிக்கே ஃபுல் மேக்கப்பில் ரெடியாக உட்கார்ந்து விட்டேன்.

வாசலில் கோலம் போட்டுவிட்டு வந்த அத்தை, என்ன தம்பி எப்பவும் எட்டரைக்கு தான கிளம்புவீங்க. இன்னிக்கு ஏன் சீக்கிரமா கிளம்பி நிக்கிறீங்க?

இல்லை அத்தை, ப்ராஜெக்ட் இன்னும் ஆறு நாள்ல முடியுதுல்ல, அதான் சீக்கிரம் முடிக்க நிறையா வேலை பாக்கியிருக்கு.  ஏழு மணிக்கே போயாகனும்.

ஐயையோ இன்னும் டிஃபன் ரெடி பண்ணலியே, சின்னவளும் சீக்கிரம் காலேஜ் போகனும்னு கிளம்பிட்டிருக்கா. அவள கேண்டீன்ல சாப்பிட சொல்லிட்டேன். ராத்திரியே சொல்லிருந்தா எதாவது டிஃபன் பண்ணிருப்பேனே!

பரவால்லத்தை, நானும் கேண்டீன்லயே சாப்டுக்கறேன். என்று சைக்கிளை எடுத்து வெளி வந்த போது தான், என்னவள் வெளியே வந்தாள். ஒரு தேவதை போல். பச்சை நிற பாவாடை தாவணியில். வளையல், பொட்டு, காது தொங்கல் உட்பட அனைத்துமே பச்சை தான்!!

ஒரு சில விநாடிகள் இதயம் துடிக்க மறந்து போய்... பிறகு வேலை செய்ய ஆரம்பித்தது. தொண்டையின் உள்பக்க தோல் மேலண்ணத்துடன் ஒட்டிக்கொண்டது. இதைத் தான் விக்கித்து நிற்பது என்று சொல்வார்கள் போலிருக்கிறது!

அம்மா, அவங்களை கொஞ்சம் வெய்ட் பண்ண சொல்லுங்க. காலை நேரம் ரோட்டில் யாருமே இருக்க மாட்டாங்க. பயமா இருக்கும். காலேஜ் வழியா தான் காட் செண்டர்க்கு போகனும், கொஞ்சம் துணையா வரச்சொல்லுங்க என்று அவசமாக சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்!

நான் பேயரைந்தது போல் அத்தையை மெதுவாக பார்க்க... ஆமாம் தம்பி கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. ரோடெல்லாம் வெறிச்சோடி கிடக்கும். இந்த ஊர் பசங்களே சரியில்லாதவனுங்க.ன்னு சொல்லிக்கொண்டே, சீக்கிரம் கிளம்புடி அந்த புள்ள வெய்ட் பண்ணுதுன்னு உள்ளே சென்றார்கள்.

எனக்கு மூன்று மணி நேரமாகத் தெரிந்த அந்த முப்பது விநாடிகளில் அவளும் தன்னுடைய சைக்கிளை தள்ளிக் கொண்டே வெளியில் வந்தாள்.

மெதுவாக ஆரம்பித்தது எங்கள் பயணம். நெய்வேலியின் நீள நீளமான இரட்டைச் சாலைகள். கழுவி விட்டாற்போன்ற ஒரு பொலிவு. இரண்டு பக்கமும் அடர்த்தியான உயர்ந்த மரங்கள். ஃபிப்ரவரி மாத இதமான பனி. இரவு முழுதும் பயணித்து, பூமியைத் தொடும் முன்பாக எங்களையும் நனைத்துக் கீழிறங்கிக் கொண்டிருந்தது.

அவள் படித்துக் கொண்டிருந்த ஜவஹர் கல்லூரிக்கு ஒரு ஃபர்லாங் முன்னதாக பரந்து விரிந்த ஒரு பகுதி. வெட்டவெளி என்றும் சொல்ல முடியாது... ஆனால் அதிக மரம் செடி கொடிகளும் கிடையாது. அது வரையிலும் நாங்கள் ஒரு வார்த்தை கூட பேசிக் கொண்டிருக்க வில்லை. மனம் படபட வென்று ஒரு சீரான, ஆனால் இனம்புரியாத சந்தோஷத்துடன் ஒரே தாளத்தில் அடித்துக் கொண்டிருந்தது.

இன்னும் ஓரிரு நிமிடங்களில், எங்களுக்குள் நடைபெறப்போகும் உரையாடலுக்குப் பிறகு ஒன்று உச்சஸ்த்தாயியில் துடிக்கலாம்... அல்லது சிலபல விநாடிகள் இடைவெளிவிட்டு, பிறகு ஏன் துடிக்க வேண்டும் என்று சுரத்தில்லாமல் கூட மெதுவாக துடிக்க ஆரம்பிக்கலாம். எது வேண்டுமானாலும் நடக்கும்.

நான் தான் பேச்சை ஆரம்பித்தேன். எடுத்த எடுப்பிலேயே....

உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்...!! உனக்கு சம்மதமா?!

அவள் நிச்சயம் இந்த மாதிரியான அணுகுமுறையை எதிர்பார்த்திருக்க மாட்டாள் தான்.....!  ஆனாலும் சுதாரித்துக் கொண்டு பேசினாள்.....

“இந்த வார்த்தையைச் சொல்ல ஏன் இத்தனை நாள் காக்க வைத்தீர்கள்?”


6 comments:

ஜோசப் பால்ராஜ் said...

இந்த கதை போன வாரம் தெரியாமப் போச்சே!

சரி சரி இன்னொருக்கா மாயாவரம் வராமயாப் போயிருவோம்?

கோவை நேரம் said...

இது நிகழ்வா...இல்லை கதையா.....ஆயினும் அருமை

sathishsangkavi.blogspot.com said...

//“இந்த வார்த்தையைச் சொல்ல ஏன் இத்தனை நாள் காக்க வைத்தீர்கள்?”//

இந்த வரியை கேட்ட அந்த நிமிடம் உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றி பெற்றதாக இருந்திருக்கும்...

வாழ்த்துக்கள் அண்ணே...

கொக்கரக்கோ..!!! said...

வாங்க ஜோ. வந்து ஒரு சிறப்பான பாராட்டு விழா எடுத்து ஆளுக்கு அஞ்சஞ்சு பவுனுக்கு தங்க செயின் எல்லாம் போடுங்க. )))))))))

கொக்கரக்கோ..!!! said...

வாருங்கள் கோவை நேரம். இது உண்மை நிகழ்வு தான்!

கொக்கரக்கோ..!!! said...

உண்மை தான் சங்கவி. இன்று வரையிலும் என்னை வெற்றிபெற வைத்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள் அவை!!