Thursday, December 15, 2011

சொந்த வீடு!!


எனக்கு நன்கு நினைவு தெரிந்த போது தரகுகாரர் வீட்டில் தான் குடியிருந்தோம். அதற்கு முன் பஞ்சான் வீட்டிலிருந்து குடிபெயர்ந்து இங்கு வந்ததாக வீட்டில் சொல்வார்கள். இந்த வீட்டிலிருந்து தான் என் பள்ளிப் பயணம் ஆரம்பமானது. மூன்றாம் வகுப்பு முடித்ததும் எங்கள் குடும்பம் என் தாய் ஊரான பெருஞ்சேரிக்கு (மாயவரத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவு) குடிபெயர்ந்தது. நான் ஆறாம் வகுப்பு வந்தபொழுது மீண்டும் மாயவரத்திற்கே குடி வந்தோம்.

வடக்கு வீதியில் எங்கள் பூர்வீக வீடு, ஆனால் கால சூழ்நிலையால் அங்கும் வாடகைக்கு தான் குடிவந்தோம். என்னுடைய அண்ணன், நான் மற்றும் என் மகன் கூட அந்த வீட்டில் தான் பிறந்து, எங்கள் பூர்வீக உரிமையை பதிவு செய்திருக்கிறோம்(?!). வீட்டில் முக்கிய ஆண் வாரிசுகள் பிறக்கும் பொழுது எங்கள் குடும்பம் அந்த வீட்டில் வசிப்பதை ஆண்டவன் ஒரு அஜெண்டாவாக வைத்திருக்கிறான் போலிருக்கிறது!

இப்படியாக குடி மாறி குடி மாறி கடந்த 2005 ஆம் வருடம் ஜனவரி பொங்கல் திருநாள் அன்று தான், கடந்த வாரம் வரையிலும் குடியிருந்த சுப்ரமணியபுரம் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். 43 வருடங்கள், கிட்டத்தட்ட பதினான்கு முறை குடி மாறியிருக்கின்றோம். ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் என்னைப் பார்ப்பவர்கள், இப்பொழுது எங்கு குடியிருக்கிறாய் என்று ஒரு டெம்ப்ளேட் கேள்வி கேட்பது வழக்கமாகிவிட்டது!

ஆரம்பத்தில் அப்படி கேட்கப்படுவது ஒன்றும் வித்தியாசமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் சில காலத்திற்குப் பிறகு அது ஒரு அவமான உணர்வாக மாறியது..., பின்னர் அப்படி கேட்பவர்கள் மேல் என்ன ஒரு இங்கிதம் இல்லாத கேள்வி? என்று கோபப்பட வைத்தது.... ஒரு கட்டத்தில் அப்படி கேட்கப்படும் பொழுது எந்த உணர்வுமே எழாமல் மரத்துப் போய் விட்டது.

ஏனெனில் பதின்ம காலங்களில் எனக்கும் என் அண்ணனுக்கும், சொந்த வீடு கட்டும் கனவு அல்லது லட்சியத்தைவிட, எடுப்பு கழிவரை இல்லாத பாம்பே லெட்ரின் உள்ள வீட்டிற்கு குடிபோக வேண்டும் என்பது தான் பெரிய கனவாக இருந்தது. நாங்கள் ஹைஸ்கூல் படித்துக் கொண்டிருந்த போது அந்த அதிர்ஷ்டமும் எங்களுக்கு கிட்டியது. நாங்கள் குடியிருந்த பூர்வீக வீட்டுக் கொள்ளையில் அந்த சித்தப்பா, பெரிய பள்ளம் தோண்டி செப்டிக் டேங்க் கட்டி, பாம்பே லெட்ரீனும் கட்டிவிட்டார். எங்கள் சந்தோஷம் உச்சத்தை தொட்டது! ஆனால் கட்டி முடித்த கையோடு அந்த சித்தப்பா அப்பாவிடம் வந்து "அண்ணே நிறைய் செலவாகிடுச்சின்ணே, அதனால அடுத்த மாதத்திலேருந்து மாத வாடகையை 50 ரூபாய் ஏற்றிக் கொடுங்கள்" என்று கேட்டவுடன், எங்கள் ஒட்டு மொத்த குடும்பத்தின் தலையிலும் இடி விழுந்தது போல் ஆகிவிட்டது.

ஒரு மாதம் டைம் குடு தம்பி, நான் வேற வீடு பாத்துடறேன்னு அப்பா சொல்லிவிட, அந்த ஒரு மாத இடைவெளியில் நானும், அண்ணனும் ஆளுக்கு 100 தடவைக்கு மேல் அந்த டாய்லெட்டை உபயோகித்திருப்போம்!!

சிறு வயது காலங்களில், சொந்த வீடு இல்லாத எவரும் எண்ணுவதைப் போல, ...படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் முதல் செலவே சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டுவதுதான், என்ற லட்சியம் எனக்குள்ளும் இருந்தது உண்மை தான். ஓரிரு வருடங்கள் சென்னையில் வேலை பார்த்த பிறகு, இந்த சம்பளத்தில் வீடு கட்டுவதெல்லாம் கனவாகவே நின்றுவிடும் என்று அனுமானித்து(!) அடித்துப் பிடித்து அபுதாபிக்கு பயணப்பட்டாயிற்று!

விசா செலவு, டிக்கெட், தங்கி வேலை தேடிய செலவு,.. இத்தியாதிகளை ஈடு செய்யவே ஒரு வருட சம்பளம் சரியாய் இருந்தது. மிச்ச சொச்ச பணத்தை எடுத்துக்கொண்டு ஊர் வந்தால், காதலித்த பெண்ணை உடனே கைப்பிடிக்க வேண்டிய கட்டாயம்...!! அதையும் முடித்து மீண்டும் வெளிநாடு பயணம். மனைவியையும் அழைத்துச் சென்றால், சொந்த வீட்டுக் கனவு மிக நீ...ண்டதாய் மாறிவிடும், அதே சமயம் விட்டுப் பிரிந்து வாழவும் இருவருக்குமே மனமில்லை. இந்த போராட்டத்தோடே, கிட்டத்தட்ட மூன்று வருடங்களில் ஒரு ஸ்திரமான முடிவுக்கு வந்து வீடு கட்டுவதற்கு தேவையான ஒரு தொகையுடன் ஊரில் வந்து கால் வைத்தவுடன் தான் என்னுடைய ஏழாம் அறிவு பல யுகங்கள் முன்னே பின்னே எல்லாம் பயணித்து, தொலை நோக்குச் சிந்தனையுடன் ஒரு திட்டத்தை தயாரித்தது!!

கையில இருக்கறதயெல்லாம் போட்டு வீட்டை கட்டிவிட்டால், பிறகு அன்றாட சாப்பாட்டுக்கு என்ன வழி? என்ற கேள்வியோடு ஆரம்பித்த என் பிரசங்கம், .... இங்கு வந்து செட்டில் ஆவதற்காக கடந்த ஓராண்டாய் செய்துவரும் தொழிலில் இந்தப் பணத்தைப் போட்டு, கடுமையாக உழைத்து அதை விருத்தி செய்தால்..... அடுத்த இரண்டே ஆண்டுகளில் இப்பொழுது கட்ட நினைப்பதை விட பெரிய பங்களா கட்டி போர்ட்டிகோவில் டாட்டா சுமோவையும் (அப்பொழுது அது தான் ஸ்டேடஸ் சிம்பள்) நிறுத்திவிடலாம் என்று பல புள்ளிவிவரங்களுடனும், இரண்டு ஆண்டுக்கான பேலன்ஸ் ஷீட், ப்ராஃபிட் - லாஸ் அக்கவுண்ட் எல்லாம் வாய்மொழியிலேயே போட்டுக்காட்டி முடித்த போது வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்த என் மனைவி தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டாள்!!!

வெளிநாடெல்லாம் சென்று வந்து சில லட்சங்களை ஒன்றாக கையில் வைத்திருக்கும் மகன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று என் தாய் தந்தையும், ஒரு வயதே ஆன என் மகனும் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டு(!) என் திட்டம் அரங்கேறத் தொடங்கியது.

ஆனால் ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பதையும், இந்திய தொழில்துறை எவ்வளவு அசாதாரணமானது (குறுந்தொழில் செய்தால் கூட) என்பதும், கையிலிருந்த பணம் மூன்றே மாதங்களில் சூடத்தைப் போல் எரிந்த படிமம் கூட காணப்படாமல் கரைந்து போன போது தான் புரிந்தது. உற்றம் சுற்றம் அனைத்துமே அடுத்து என்ன நடக்கும் என்று குத்துக்காலிட்டு இரண்டு கைகளையும் கன்னத்தில் முட்டுக்கொடுத்து வேடிக்கை பார்ப்பது போல் ஒரு உணர்வு!

ஆனால் நீங்கள் நினைப்பது எதுவும் நடந்துவிடாது என்று காட்டிக்கொள்வதற்காக.... கடந்த மூன்றரை வருடங்களில் வாங்கப்பட்ட நகைகள் அனைத்தும் அடகு கடைக்கு படையெடுக்க, பின்பு அவையே மீட்கப்பட்டு விற்கப்பட...  பிறகு கடன்கள், வட்டிகள்........ என்று சிக்கி, சாதாரண மனிதனுக்கு கிடைக்கக்கூடிய மன நிம்மதி, அமைதி, உட்பட உற்றார், உறவினர், நண்பர்கள் என்று அனைவரையும் இழந்திருந்தாலும் கூட இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையையும் தூக்கிப் பரணில் போட்டது தான் அதிக வலியைத் தந்தது.

இடைப்பட்ட காலங்களில் நிறுவனத்திற்காக இடம் வாங்கி, கட்டி, பெரிய இயந்திரங்களெல்லாம் வாங்கிப் போட்டாலும், சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது கனவாக மட்டுமல்ல, நினைவிலேயே இல்லாமல் மறைந்து போயிருந்தது. ஒரு கட்டத்தில் ஒவ்வொரு நாளையும் ஜெயிக்க வேண்டும், அதாவது வாழ வேண்டும் என்பது தான் எங்களது மிகப்பெரிய லட்சியமாய் இருந்தது. ஆனால் இதிலெல்லாம் துவண்டுவிடாமல் எங்களை ஓயாமல் உழைக்க வைத்துக்கொண்டிருந்த ஒரு விஷயம், எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி தான். அதில் நாங்கள் எந்த சமாதானமுமே செய்து கொள்ளவில்லை.
எவ்வளவு கஷ்டத்தை ஒரு மனிதனால் எவ்வளவு காலம் தாங்க இயலும் என்பதற்கான 'பரிசோதனை எலி' யாக ஆண்டவன் எங்களைப் பயன்படுத்திக் கொண்டான் என்றே தோன்றுகிறது. ஆனால் அவனுக்கான டேட்டாஸ் எல்லாம் கிடைத்தவுடன், எங்களுக்கான ஆசீர்வாதம் அன்புடன் வழங்கப்பட்டது என்பதையும் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும்!! ஒரு மாமாங்கம் என்று சொல்வார்களே, அதேப்போன்று 12 வருடங்கள் இடைவிடாத போராட்டத்திற்குப் பிறகு, படிப்படியாக எல்லாம் மாறியது...! தோசையை புரட்டிப் போட்டது போன்ற ஒரு உணர்வு.

ஆம், வீடு கட்ட பணத்தோடு வந்து, அதை தொழிலில் போட்டு, அந்தக் கனவை நனவாக்க 14 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. நினைக்கவே மறந்த விடயங்கள் மீண்டும் சிறகடிக்கத் தொடங்குகிறது. சொந்தவீடு என்ற கனவு வசப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு கிரவுண்ட் நிலத்தை, நாங்கள் அதிகமாக குடியிருந்த பகுதிகளின் ஒரு மையப்புள்ளியில் வாங்கி, அதே மாதம் 23 ஆம் நாள் புது வீடு கட்டுவதற்கான பூமி பூஜை போடப்படுகிறது. அதன் பிறகு ஏழு மாத காலத்தில் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு கடந்த மாதம் பதினான்காம் தேதி புதும்னை புகுவிழா சடங்குகளும், இந்த மாதம் ஐந்தாம் தேதி 43 வருட போராட்டத்திற்குப் பிறகு சொந்த வீட்டில் குடியேறும், என் வாழ்வில் என்றுமே மறக்க இயலாத அந்த சந்தோஷமான நிகழ்வும் இனிதே நடந்தேறின. 

பட்ட கஷடங்கள் அனைத்துமே இப்பொழுது அடைந்திருக்கும் இன்பநிலை நோக்கிய பயணத்திற்கான படிக்கற்களாகத்தான் தோன்றுகின்றன. ஒவ்வொரு சங்கடமும், இழப்புகளும், அவமானங்களும் என் சொந்த வீட்டின் அறையில் அமர்ந்து இதை டைப்பும் பொழுது சுகமான நினைவுகளாகத்தான் மனது மீள்பதிவு செய்து காட்டுகிறது! நான் இன்னமும் இந்த வீட்டை முழுமையாக அனுபவிக்கவில்லை. கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக அமர்ந்து பார்க்கிறேன். என் தாய், தந்தை, மனைவி, மகன் அனைவரும் இந்த உன்னதத்தை எப்படி ரசிக்கிறார்கள், அனுபவிக்கிறார்கள் என்று பார்த்துப் பார்த்து சந்தோஷமடைகின்றேன்.

மனதில் உண்டாகியிருந்த வடுக்கலெல்லாம் மறைந்து கொண்டிருக்கின்றன. எவ்வளவு மோசமான எதிரிகளுக்கும் இன்முகம் காட்டத்தோன்றுகிறது. ஒரு வாரமாக சத்தமின்றி மெதுவாகப் பேசுகிறேன். மனமும், உடலும் இலேசானது போல் ஒரு உணர்வு. நிச்சயமாக இது ஒரு சுய தம்பட்டம் இல்லை. என்னுடைய சந்தோஷத்தை உங்களிடம் பகிரும் பொழுது அது பன்மடங்காகப் பெருகும், என்ற யாருக்கும் தீங்கில்லாத ஒரு சின்ன சுயநலம் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்!!

35 comments:

பொன். வாசுதேவன் said...

வாழ்த்துகள் சௌமியன்.

மணிஜி said...

நெகிழ்ச்சியான பதிவு.. நானும் என் வாழ்க்கையில் செய்த உருப்படியான காரியம்..சொந்த பிளாட்தான்...வீடு என்பது இல்லம் ஆகும் தருணம்..ஆனந்தத்தின் எல்லை...வாழ்த்துக்கள் சௌமி..மென்மேலும் தொழில் சிறக்கவும், ஃபோர்டு எண்டோவர் கார் வாங்கி போர்ட்டிகோவில் நிப்பாட்டவும்...

வடகரை வேலன் said...

வாழ்த்துக்கள் சௌமியன்.

எங்கப்பா சொல்லுவாரு, “ சொந்த வீட்டுல சட்டையக் கழட்டிப் போட்டுட்டு அக்கடான்னு படுத்துத் தூங்குற சொகம் சொர்க்கம்டா”ன்னு.

நாங்களும் பல வாடகை வீடுங்கள்ல பல கண்டிசன்களுக்கிடையே வசித்ததன் அனுபவப் பாடம் அது.

ஆனால் வீட்டை அலங்கரிக்கிறேன்னு கைய வைக்காதீங்க இப்ப. கொஞ்ச கால அவகாசம் எடுத்துக்குங்க.

Unknown said...

இன்னும் பல சாதனை சிகரங்களை தொட மனமார்ந்த வாழ்துக்கள் சௌமியன்.

ஜோதிஜி said...

மனம் முழுக்க சந்தோஷம். இருவருக்கும் ஒரே வயது தான் போல.
மணிஜி சொல்வது போல கார் வாங்கி கவிழ வேண்டாம். ஏற்கனவே அந்த அனுபவம் எனக்குண்டு.

ponsiva said...

வாழ்த்துகள் சார்,

இன்னொரு குழந்தை வேண்டாம் என முடிவெடுத்தது நெருடல்

நெகிழ்ச்சியுடன்
பொன்.சிவா

Prakash said...

Great...Happy Living Sowmiyan...by the way, what business are you doing ?

யுவகிருஷ்ணா said...

வாழ்த்துகள் நண்பரே!

நான் பிறந்ததிலிருந்து ஒரே வீடுதான். அதனால்தானோ என்னவோ தெரியலை, எங்க போனாலும் உடனே வீட்டுக்கு ஓடிவந்துடணும்னு தோணும்.

கொக்கரக்கோ..!!! said...

நன்றி பொன். வாசுதேவன், மணிஜி, அண்ணாச்சி & அபுல் பசர்.

கொக்கரக்கோ..!!! said...

ஜோதிஜி & அண்ணாச்சி, தங்களின் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி. அறிவுரைகளை மனதிலிருத்தி, தடுமாற்றமில்லாமல் தொடர்ந்து பயணிக்க விழைகிறேன்.

கொக்கரக்கோ..!!! said...

நன்றிகள் பொன் சிவா, பிரகாஷ் & லக்கி.

பிரகாஷ், நான் உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் தொழிலில் இருக்கின்றேன்.

அபி அப்பா said...

படித்துவிட்டு அப்படியே கொஞ்ச நேரம் அமைதியா உட்காந்துவிட்டேன். ரொம்ப அருமையான பதிவு. வீட்டின் போட்டோவை ஏன் போடலை?

அபி அப்பா said...

புதுவீட்டிலே எப்போ வலைப்பதிவாளர்களுக்கு ட்ரீட் என்பதை ஏன் இந்த பதிவிலே அறிவிக்கவில்லை?

Kesavan said...

வாழ்த்துக்கள் சௌம்யன் . நிறைய கஷ்டப்பட்டு அதற்க்கு ஒரு நல்ல வழி கிடைக்கும் பொது இருக்கும் ஆனந்தமே தனி தான்

கேக்கறேன்னு தப்ப எடுத்துக்காதீங்க. எப்போ சின்ன வீடு ஏற்பாடு பண்ணபோறீங்க :)

Kesavan said...
This comment has been removed by the author.
கொக்கரக்கோ..!!! said...

@அபிஅப்பா, ஃபோட்டோ காப்பி பண்ணினா ஹேங் ஆகுது. ட்ரீட் எல்லோரும் கூடி பேசி முடிவெடுக்கலாம்.

கொக்கரக்கோ..!!! said...

வருகைக்கு நன்றி கேசவன். இப்புடி பொசுக்குன்னு கேட்டுட்டீங்களே?! ))

Kesavan said...

// இப்புடி பொசுக்குன்னு கேட்டுட்டீங்களே?! )) //
சில விஷயங்களை உடனே கேட்டுடணும் .ஆறபோடகூடது.வேணும்ன்ன அபி அப்பாவிடம் கேளுங்கள்.அவர் உங்களுக்கு வழி காட்டுவார் :))

அருண் பிரசாத் said...

வாழ்த்துக்கள் செளமியன்... உணர்வை கலந்து எழுதி இருக்கீங்க :)

TERROR-PANDIYAN(VAS) said...

// என்னுடைய சந்தோஷத்தை உங்களிடம் பகிரும் பொழுது அது பன்மடங்காகப் பெருகும், என்ற யாருக்கும் தீங்கில்லாத ஒரு சின்ன சுயநலம் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்!!//

மிக்க மகிழ்ச்சி! இறைவன் உங்களுக்கு எல்லா நலமும் வளமும் அள்ளி வழங்கட்டும். வாழ்த்துகள் சௌமியன்.. :)

செல்வா said...

ரொம்ப நெகிழ்ச்சியான பதிவுங்க! மகிழ்ச்சியான பதிவும் கூட. எத்தனையோ கஷ்டங்களை அடைந்திருந்தாலும் இந்த மகிழ்ச்சிக்கு இணையாக முடியாது :))

இனிய வாழ்த்துகள் :)) புது வீட்டினைப் போலவே உங்கள் தொழிலும் சிறக்கட்டும் :))

வைகை said...

நானும் சிறுவயதில் இருந்து சொந்த வீடுதான்.. ஆனால் அதில் என் சித்தப்பாவிற்கும் பங்கு, எப்ப வந்து அவர்கள் பங்கை கேப்பார்களோ என்ற ஒரு உறுத்தளில்தான் இருக்க வேண்டி இருந்தது.. நான் படித்து முடித்து வீடு கட்டிதான் திருமணம் என்பதில் உறுதியாய் இருந்தேன் அதை அவ்வாறே செய்தும் முடித்தேன்... சொந்த வீடு கட்டி முடித்து உள்ளே போனதும் இந்த உலகையே கைகளில் கொண்டுவந்த திருப்தி.. அது அனுபவித்தவர்களுக்கு தெரியும் உங்கள் உணர்வுகளும் அப்பிடிதான் :-))

நாய் நக்ஸ் said...

:)))))))))
வாழ்த்துக்கள் ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அற்புதம் சௌம்யன், உணர்வுகள் மிக அருமையாக வெளிப்பட்டிருக்கின்றன. உங்கள் சொந்தவீட்டுக் கனவு நிறைவேறியதற்கு வாழ்த்துக்கள்! அதன் பின் இருக்கும் உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்பும் மகத்தானது. அது படிக்கும் அனைவருக்குமே ஒரு தூண்டுகோலாய் அமையும் என்று எண்ணுகிறேன்!

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;-)

சொந்த தொழிலில் உங்களுடைய படிப்படியான முன்னோற்றம் நிச்சயமாக எனக்கு ஒரு பாடம் !

Venkat said...

Well written and well done!

Jackiesekar said...

மிக மிக நெகிழ்ச்சியான பதிவு...சௌமியன் புது வீட்டுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள்.. கண்டிப்பாக குடும்பத்துடன் நேரில் ஒருநாள் வருகின்றேன். தொடர்ந்து இது போல எழுதுக்கொண்டே இருக்கவும்.

Anonymous said...

இப்பொழுதுதான் உங்கள் பதிவை படித்தேன். வாழ்த்துக்கள். எந்த சூழ்நிலையிலும் துணையிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் இருக்கும்போது என்ன கவலை சார் உங்களுக்கு...

வாழ்த்துக்கள்.

புதுகை.அப்துல்லா said...

வாழ்க வளமுடன்.

கொக்கரக்கோ..!!! said...

வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்.. .

டெர்ரர் பாண்டியன், வெங்கட், அப்துல்லா, ஜாக்கி சேகர், வைகை, நாய்நக்ஸ், அருண் பிரசாத், கோமாளி செல்வா, கோபிநாத், ஜாஃபர் .... அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் சௌமியன்

Jabar said...

வாழ்த்துக்கள் உடன்பிறப்பே... அருமையான.. சுடும் உண்மைகளை சொன்ன பதிப்பு...

அமர பாரதி said...

அருமையான நெகிழ்ச்சியான அனுபவ பதிவு. அற்புதம். நான் குழந்தையாக இருந்த பொழுதுகளில் வாடகை வீட்டில் வசித்திருக்கிறேன். அதன் பிறகு சொந்த வீட்டில் என்று நான் நினைத்திருந்த வீட்டில் வசித்திருக்கிறேன். அதாவது என்னுடைய தந்தையால் இது என்னுடைய சொந்த வீடு, உன்னுடையது அல்ல என்று உணர்த்தப்படும் வரை. அப்போது பட்ட வலியால் சொந்த வீட்டை கட்டியும் விட்டேன். அதில் வசிப்பதற்கு இன்னும் எத்தனை கால ஆகுமென்று தெரியாது. இருந்தும் ஓரிரு வாரங்களே இருந்தாலும் சொந்த வீடு கொடுக்கும் மன மகிழ்ச்சி வேறு தான்.

ஏழு மாதங்களில் கட்டி முடித்தது உண்மையிலேயே ஆச்சரியம்தான்.

மறுபடியும் வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

சொந்த வீடு - கனவு நனவாகியது குறித்து மிக்க மகிழ்ச்சி சௌமியன் - இது போலவே நினைப்பது அத்தனையும் கை கூட நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.

mohamedali jinnah said...

அனுபவித்து எழுதப்பட்ட அருமையான கட்டுரை. மற்றவர்களையும் ஊக்குவிக்கும் சொந்த வீடு கட்ட