Tuesday, July 12, 2011

கருணாநிதியை திட்டினால் என்ன கிடைக்கும்?!

2011 ஆம் வருடம், ஜனவரி 25 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!

யார் பற்ற வைத்த வதந்தி இது என்றே தெரியவில்லை. ஒரு வேளை கேரள நம்பூதிரி அல்லது பணிக்கர் யாராவது கிளப்பி விட்டிருக்கலாம் என்று கூட தோன்றுகிறது.

என்னன்னு புரியலையா?.. கொஞ்ச காலமாக தமிழக அரசியல் அல்லது ஊடகங்களை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்குப் புரிந்திருக்கும். அதாவது அரசியல், சினிமா, ஊடகம்... இப்படி முக்கியமான துறைகளில் ஒருவர்  தான் இருக்கும் நிலையிலிருந்து முன்னேற நினைத்தால்..., உடனடியாக அவர் செய்யும் காரியம், கருணாநிதியை ஒரு பிடி பிடித்து அறிக்கை விடுவது அல்லது (கொஞ்சம் பயம் மாதிரி ஏதாவது இருந்தால்) கருணாநிதிக்கு எதிரானவர்களிடம் போய் சரணடைவது, இல்லையேல் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிடுவது, இப்படி ஏதாவது ஒன்றை செய்வது வழக்கமாகி விட்டது!

இது கொஞ்சம் ஓவரா தெரியுதா? சமீபத்திய தமிழக -அரசியல்- பிரபலங்களை எல்லாம் கணக்கெடுங்கள் புரியும். விஜயகாந்த், விஜய், அஜித், சீமான், இளங்கோவன், இளைஞர் காங்கிரஸ் யுவராஜ், பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத்,.... என்று இந்தப் பட்டியல் நீ..ண்டு கொண்டே செல்லும்.

நம் வலைப்பதிவாளர்களில் கூட சிலர் கருணாநிதியை திட்டியே பிரபலமடைந்துள்ளனர். இதற்காக உண்மை தமிழன் கருணாநிதிக்கு 1008 தேங்காய் உடைக்கும் அளவிற்கு கடமைப் பட்டுள்ளார்! (நான் கூட அந்த நினைப்பில் தான் இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன்! ஹி..ஹி...!)

இதெல்லாம் கூட பரவாயில்லை, நீரா ராடியாவிடம் கனிமொழி, கருணாநிதி பற்றி அடித்ததாக சொல்லப்படும் கமெண்ட் இருக்கிறதே... ஆஹா இதை விடவா ஒரு உதாரணம் தேவை.? மற்ற பிள்ளைகள், துணை முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் ஆவதற்கு என்னென்ன திட்டினார்களோ தெரியவில்லை. இப்பொழுதாவது இரண்டாம் பத்தியில் எழுதியிருப்பது உண்மை என்று புரியும் சரியா?

விஜயகாந்த் தான் இதில் ரொம்ப சூப்பர்! அவரை தூக்கத்தில் எழுப்பி நீங்கள் ஏன் கருப்பாக இருக்கிறீர்கள் என்று கேட்டால் கூட, டக்கென்று கருணாநிதி தான் காரணம் என்பார்! அவர் இப்படி நடந்து கொள்வதற்கு நியாயமான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. எம்.ஜி.ஆர். செய்த அத்தனையும் தானும் செய்தால், முதல்வராகி விடலாம் என்று அவர் மனதில் அழுத்தமாக பதிய வைக்கப் பட்ட ஏதோ ஒன்று தான் இப்படி அவரை ஆட்டிப் படைக்கிறது. பிரேமலதா தான் பார்த்து சூதானமா நடந்துக்கனும்!

இதில் விஜய் செய்வது தான் ஓவர் நக்கல். உளியின் ஓசை, இளைஞன்... இதெல்லாம் ஓடாம போனதற்கு என்னைக்காவது விஜய் தான் காரணம் என்று கருணாநிதி சொல்லி இருக்காரா?! பின்ன ஏன் விஜய் மட்டும் அவர் படம் ஓடாததுக்கு கருணாநிதி தான் காரணம் என்கிறார்?

ஆனால் அஜித் கொஞ்சம் ரீஜெண்ட். அங்க இங்க சுத்தி வளைக்காம, கருணாநிதிய நேராவே திட்டிட்டார். பட் இந்த 'தில்' கருணாநிதிக்கு புடிச்சி போய்ட்டதால, இன்னும் வேணும்னா ரெண்டு சேர்த்து திட்டிட்டு 'மாவீரன்' பட்டத்தை நீ வாங்கிக்க, மங்காத்தா லாபத்தை (படத்தை தயாரித்து) என் பேரன் வாங்கிகட்டும்னு சொல்லிட்டார்!!

இப்பொழுது ஊடக வெளிச்சத்தில் இருக்கும் அரசியல்வாதிகளைப் பார்த்தால் எதிரணியில் இருக்கும் பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத் பேசுவதை தவறாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏன் இளங்கோவன் கூட பழைய பகையில் பேசுவதாக எடுத்துக் கொள்ளலாம், ஆனால் கார்த்திக் சிதம்பரம், யுவராஜாவுக்கெல்லாம் என்ன வந்தது? மற்றவர்கள் கூட கருணாநிதியை திட்டுகிறார்கள், ஆனால் யுவராஜ் ஒரு படி மேலே போய் கருணாநிதி பதவி விலகி ஸ்டாலினுக்கு வழிவிட வேண்டும் என்கிறார்!

இந்த கருமாந்திர பதவிக்காகத்தானே, தன் இன அழிப்பையே கண்டும் காணாமல் இருந்து, தீராத பழியை எல்லாம் தன் தலையில் ஏற்றுக் கொண்டு எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்டா.. ஸ்டைலில் நின்று கொண்டிருக்கிறார்! அவரைப் போய் பதவியை விட்டுத் தரச் சொல்கிறாரே இந்த யுவராஜ். கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டாரோ..?!

இது எதுக்குமே கொஞ்சம் கூட அசராமல், ஏன் அதற்கெல்லாம் பதில் கூட சொல்லாமல், கல்லுலி மங்கனாட்டம் கருணாநிதி இருப்பதைப் பார்த்தால், வசைபாடுபவர்கள் அனைவருமே, முன்னதாக கருணாநிதியைப் பார்த்து திட்டுக்கு தகுந்தாற் போல் தட்ச்சிணை வைத்து விடுவார்கள் போலிருக்கிறது!

ஆனால் இவர்கள் பேசுவதை எல்லாம் பார்த்தால் ஒரு நியாயம் இருப்பதாக கூட தோன்றுகிறது. கர்ம வீரர் காமராஜரில் ஆரம்பித்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று தமிழக முன்னால் முத்ல்வர்கள் அனைவருமே கருணாநிதியை கடுமையாக எதிர்த்து தாக்கிப் பேசியவர்கள் தான். அதனால் தான் விஜயகாந்த் முதல், முதல்வர் கனவில் இருக்கும் அனைவருமே, முதல் வேலையாக கருணாநிதியை எதிர்த்துப் பேச, ஸாரி திட்டிப்பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், தமிழக அரசியலில் கருணாநிதி என்ற பாத்திரம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், பத்திரிகையாளர் 'சோ'  இத்தனை நாள் எப்படி வண்டி ஓட்டியிருப்பார்?! கருணாநிதியைப் பற்றி எழுதாமல் ஒரு மண்டலம்.. அதாங்க எட்டு வர்ரம் துக்ளக்கை வெளியிடச் சொல்லுங்கள், அதன் பிறகு துக்ளக்கிற்கு சங்கு தான்!

இதெல்லாம் ஓக்கே தான், கருணாநிதியை எதிர்த்து முன்னேறியவர்கள் ஒரு பக்கம் இருப்பது கூட உண்மை தான். அதே போல் தற்பொழுது கருணாநிதியை திட்டிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த செண்டிமெண்ட் வேலை செய்யுமா?

ஒரு படத்தில் செந்தில் முகத்தில் விழித்து விட்டுப் போனால் நல்லது நடக்கும் என்று ஒரு ஜோசியக்காரன் சொன்னதை நம்பி கவுண்டமணியும் செய்து படிப்படியாக அடிபட்டு நொந்து போவது... ஏனோ நினைவுக்கு வருகிறது...!

ஏனென்றால், கருணாநிதியை எதிர்த்து வென்றவர்கள் அனைவருமே, கருணாநிதிக்கு சற்றும் குறையாத உழைப்பு, அனுபவம், புத்திசாலித்தனம், இன்ன பிற நற்குணங்களையும், அதற்கெல்லாம் மேலாக உண்மையான் பொது நல சிந்தனையும், தொலை நோக்குப் பார்வையும், அவரை விட கூடுதலான நேர்மையோடும் விளங்கியவர்களாக இருந்தார்கள் என்பது தான் உண்மை.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு புதிதாக அரசியல் களத்திற்கு வருபவர்கள் எதிர்ப்பு அரசியலை கையிலெடுக்காமல், அனைத்து துறைகளிலும் நாட்டிற்கும், மக்களுக்கும் தொலை நோக்கில் பயன் தரக்கூடிய கொள்கைகளையும், திட்டங்களையும் வடிவமைத்து, அதன் அடிப்படையில் போராடி, மக்களுக்கு புரியவைத்து, நேர்மையோடும் - ஒழுக்கத்தோடும் செயல்பட்டால் வெற்றி ஒரு நாள் நிச்சயம் கைகூடும்!

No comments: