Thursday, July 14, 2011

அந்த முப்பது எங்கய்யா இருக்கு ராகுலு?

2011 ஆம் வருடம், பிப்ரவரி 8  ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!

ஒரு நாலு நாளா இந்த சந்தேகம் என் மண்டைய போட்டு குடைஞ்சிகிட்டு இருக்கு. கடைசியாக வந்த வாரப் பத்திரிகைகள், இணைய ஊடகங்கள், சில தினசரிகள் கொளுத்திப் போட்ட செய்தி தான் அது.

நம்ம கருணாநிதி டில்லி போனப்ப தாங்கள் நிற்க விரும்பும் தொகுதிகள்னுட்டு நம்ம பீகார் புகழ்(!) ராகுல் காந்தி 90 தொகுதிகள் அடங்கிய லிஸ்ட் ஒன்றை கொடுத்தாராம். அதில் ஒன்றும் கருத்து சொல்ல நமக்கு வழியில்லை! 'கேட்பது அவர்கள் உரிமை கொடுப்பது எங்கள் கடமை' என்ற வசனத்தைப் பேசிவிட்டு கருணாநிதியும் கொடுத்து விடலாம்!. அது இல்லை எனது பிரச்சினை.

ராகுல் கொடுத்த அந்த லிஸ்ட்டை ஏ, பி, சி என்று மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவின் கீழும் முப்பது தொகுதிகளின் பெயர்களை எழுதிக் கொடுத்திருக்கிறாராம். அது என்ன ஏ, பி, சி என்று புரியவில்லையா?

'ஏ' பிரிவின் கீழ் வரும் தொகுதிகளில் காங்கிரஸ் தனித்து நின்றாலே ஈஸியாக வென்று விடுமாம்.

 'பி' பிரிவின் கீழ் வரும் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் துணையிருந்தால் வென்றுவிடுவார்களாம்.

 'சி' பிரிவின் கீழ் வரும் தொகுதிகளில் கூட்டணியில் இருந்தாலும் தேறுவது சிரமம் என்று ஒத்துக் கொண்டுமிருக்கிறார்.

இங்கு தான் என்னுடைய பிரச்சினையே ஆரம்பித்தது. பி, சி எல்லாம் சரிதான். அந்த ஏ - பிரிவு 30 தொகுதிகள் தமிழகத்தில் எங்கிருக்கிறது என்று யாரவது தெரிந்தவர்கள் சொல்ல முடியுமா? இப்பொழுது சொல்லுங்கள் என்னுடைய சந்தேகம் நியாயமானது தானே?

கருணாநிதியிடம் சாதாரணமாக 90 சீட் வேண்டும் என்று கேட்டிருந்தால், சொந்தக் கதை, சோகக் கதையை எல்லாம் மனதில் வைத்து அலசி ஆராய்ந்து, மேல பத்து சீட் சேர்த்து போட்டு, ரவுண்டாக நூறு சீட் கூட கொடுத்திருப்பார். அத வுட்டுட்டு, அதென்ன தனியா நின்னாலும் ஜெயிக்கும் தொகுதின்னு சொல்றது?

ஏதோ அவரோட போதாத காலம், நீங்க எதக்கேட்டாலும் விட்டுக் கொடுக்கிறார்! ஒரு மந்திரி போனதுக்கு பதிலா இன்னொன்னு நீங்க தரணும் அதக் கேட்டாரா? இந்த மந்திரிய ஜெயிலுக்கு அனுப்புனதுக்கு ஏன்னு ஒரு வார்த்த உங்கள கேட்ருப்பாரா? அரை நாள் காகக வச்சிங்களே அதக் கூட பெரிசா எடுத்துக்கலியே. ஏன் தமிழ் நாட்டுல போற வர காங்கிரஸ் காரன்லாம் (இன்னும் புதுசா தேர்வாகியிருக்கிற மாணவர் காங்கிரஸ் தல தான் பாக்கி) கண்ட மேனிக்கு அவர திட்டினீங்களே.. ஒரு.. ஒரு வார்த்த்த்..த ஏன்னு உங்கள பார்த்து கேட்ருப்பாரா?

இதெல்லாம் சாதாரணம், இப்ப சொல்லுங்க நேத்திக்கு வெளியான இரண்டு லட்சம் கோடி ஊழலுக்கும் தி.மு.க தான் காரணம்னு. நெஞ்ச நிமிர்த்தி அந்தப் பழிய தான் ஏற்றுக் கொண்டு உங்கள காக்க தயாராயிடுவார்! ஏன்னா உங்க பாட்டியே சொல்லியிருக்காங்க கருணாநிதி எதிர்த்தாலும் அப்படி எதிர்ப்பார், ஆதரித்தாலும் கண்மூடித்தனமா ஆதரிப்பார்னுட்டு! அத சொல்லி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அவரையும் தி.மு.க வையும் ரணகளமாக்கிட்டீங்களே ராகுல்!! இது நியாயமா?

சரி அவராச்சு நீங்களாச்சு, ஏதோ பண்ணிட்டுப் போங்க. ஆனா என்ன நெனப்புல நீங்க தனியா நின்னாலும் 30 தொகுதில ஜெயிப்போம்னு சொன்னீங்க? இது கருணாநிதி, தி.மு.க வையும் தாண்டி, வெகுஜன தமிழக வாககாளர்களை நையாண்டி செய்யும் விதமாக இருக்கிறது என்பதையாவது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? இளங்கோவன் பூண்டானது, சிதம்பரம் மயக்க நிலையில் கரை ஒதுங்கியது எல்லாம் மறந்து போய் விட்டீர்களா?

அத விடுங்க 30 தொகுதில நீங்க தனியா நின்னா, இந்த சீமான் வகையறாவுக்கெல்லாம், "கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா..." ன்னு கேட்ட மாதிரி ஆகிடும்ணு உங்களுக்கு தோனலியா? சும்மா காமெடி பண்ணாதிங்க சார்..! போய் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்னிகிட்டு, பொருப்பா நடந்துக்கற வழிய பாருங்க!!! 

சிதம்பர ரகசியமாவே இருக்கு, உங்கள பாத்துட்டு வந்த ராதா ரவியும், விஜய்யும் அடுத்தடுத்து அம்மாட்ட சரண்டர் ஆனது ஏன் என்பது! ஆனா அடுத்த நடிகர் திலகம்! எஸ்.வி. சேகர் மட்டும் உங்களோடயே ஐக்கியமாயிட்டார். இதில் தி.மு.க, அ.தி.மு.க ரெண்டு கட்சி காரங்களுக்குமே ரொம்ப சந்தோஷம்!!!

சரி அதை விடுங்கள் நீங்கள் தனியா வரும்பொழுது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் இந்த சந்தேகத்திற்கு மட்டும் விடை சொல்லுங்கள், ஒருவேளை கருணாநிதியை பொதுக்குழு உறுப்பினர்கள், ஒரு மாதிரியாக உசுப்பேற்றி விட, அவரும் அதே சூட்டோடு உங்களிடம் 90 சீட் தருகிறோம் ஆனால் நீங்கள் தனியாக நின்று ஜெயிக்க வாய்ப்பிருக்கும் அந்த 30 தொகுதிகளில், நாங்களும் வேட்பாளர்களை நிறுத்தலாமா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்....?!

திஸ்கி: ராகுல் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதில்லை. யாருக்கு பதில் தெரிந்தாலும் கொஞ்சம் சொல்லுங்களேன்... ப்ளீஸ்!!!


  

No comments: