Thursday, July 14, 2011

ராஜாவா?... தி.மு.க வா? - என்ன செய்யப் போகிறார் கருணாநிதி?!

2011 ஆம் வருடம், பிப்ரவரி 2 - ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!


சென்னை ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணாதுரை யால் 1949, செப்டம்பர் 17 ம் தேதி அன்று முறைப்படி தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். அறுபத்தியோறு  ஆண்டுகளைக் கடந்தும், வரும் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் கட்சிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதே அதன் பலத்தைப் பறை சாற்றும்.

அண்ணாதுரையால் ஆரம்பிக்கப் பட்ட கட்சி என்றாலும், கடந்த 42 வருடங்களாக தொடர்ந்து அக் கட்சியின் தலைவராக இருந்து, இன்று வரை தி.மு.க பலம் வாய்ந்த கட்சியாக தமிழகத்தில் இருப்பதற்கு கருணாநிதி மட்டுமே காரணம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

ஆனால் சற்றுமுன் வந்துள்ள செய்தி, கருணாநிதியின் இந்த பெருமையை அவர் காலத்திலேயே அழித்து விட்டும் சென்று விடுவார் என்பதாகத்தான் உணர்த்துகிறது. "முன்னால் மத்திய தகவல் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராஜா, இந்தியாவில் இதுவரை நடந்த அனைத்தையும் விட பெரிய தொகை கொண்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மத்திய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்". இது தான் அந்த செய்தி.

தி.மு.க வை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர், பெறும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டால் தி.மு.க வே அழிந்து விடுமா - என்ன?

நல்ல கேள்வி தான். ஆனால் அவருக்கு கட்சியும், கட்சித்தலைமையும் இன்று வரை உறுதுணையாக இருப்பது தான் பிரச்சினையே. தன் கட்சியின் அமைச்சர் மேல் ஒரு குற்றச்சாட்டு வெறுமனே வந்தால் கூட பரவாயில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது, குற்றம் சுமத்தப்பட்டவர் மேல் கடுமையான விமர்சனம் நீதிபதிகளால் வைக்கப்படுகிறது, பிறகு அவர் பேசியதாகச் சொல்லப்படும் (இவ்விஷயத்தில் அவருக்கு எதிரான) தொலைபேசி உரையாடல் பதிவு வெளிவருகிறது, அதன் பிறகு இந்திய பாராளுமன்றமே இரு வாரங்களுக்கு மேல் இவ்விஷயத்திற்காக ஸ்தம்பிக்கிறது... இதற்கெல்லாம் ஒரே தீர்வாக அவரது ராஜினாமா மட்டுமே இதுவரை பெறப்பட்டிருக்கிறது!!

தி.மு.க வின் அடுத்த தலைமுறை வாரிசுகளாக தொண்டர்களால் பார்க்கப்படும், அழகிரி, ஸ்டாலின், தயாநிதி மாறன் மற்றும், கட்சியின் முன்னனி தலைவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக கட்சியின் அனைத்து மட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள் அனைவருமே இந்த ஊழல் பிரச்சினையில் ராஜாவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகத்தான் தெரிகிறது.

கருணாநிதியின் இன்னுமொரு வாரிசான கனிமொழியும் அவர் தாயாரும் மட்டுமே இப்பிரச்சினையில் ராஜாவுக்கு ஆதரவான மனநிலையில் இருப்பதாக தெரிய வருவதோடு, அவர்கள் பேசியதாக சொல்லப்படும் தொலைபேசி உரையாடல் பதிவுகளும் வெளிவந்து, தி.மு.க தொண்டர்கள் அனைவருக்குமே மாற்றுக் கட்சியினரிடம் தலைகுனிவை உண்டாக்கி இருக்கின்றன.

இந்நிலையில் தான் இந்தக் கைது!!!.

இதற்கு மேலும் யாரைக் காப்பாற்றுவதற்காக கருணாநிதி மௌனம் காக்கிறார் என்பது தான் புரியவில்லை. ஏற்கனவே இந்த பிரச்சினையில் அழகிரி பெரிய போராட்டம் நடத்தி, வெறுத்துப் போய் ஒதுங்கிவிட்டதாகத் தெரிகிறது. ஸ்டாலினோ 'போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கருணாநிதிக்கே' என்ற மனநிலையில் இருப்பதாக தோன்றுகிறது.

கருணாநிதி தன்னுடைய "ஒரே ஒரு வாரிசுக்காக" தி.மு.க வின் வருங்கால தளபதிகள், முன்னனி தலைவர்கள், லட்சக்கணக்கான பொறுப்பாளர்கள், கோடிக்கணக்கான உறுப்பினர்கள்... ஆக ஒட்டுமொத்த தி.மு.க -வையே பலி கொடுக்கப் போகிறாரா? அல்லது கோடிக்கணக்கான தொண்டர்களின் சொல்லொனா தியாகத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் தி.மு.க என்ற கட்சிக்காக ராஜாவை பலிகொடுக்கப் போகிறாரா.....?

பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments: