Friday, July 15, 2011

தி.மு.க. வை கரை சேர்க்குமா - இலவச திட்டங்கள்? (நிறைவுப் பகுதி)

2011 ஆம் வருடம், பிப்ரவரி 17  ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!


தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளால் நிறைவேற்றப்படும் இலவசத் திட்டங்களைப் பற்றித் தொடர் அலசலை இரண்டு பாகங்களாக, கீழ்கண்ட தலைப்புகளில் பதிவிட்டேன்.

1. இலவசங்கள் இருக்கும் வரை ஏழைகளும் இருப்பார்களா? [பாகம் 1],  2. இலவச திட்டங்கள் ஒரு பார்வை (பாகம் 2).

இதன் தொடர்ச்சியான மூன்றாம் பாகத்தை இப்பொழுது படிக்கும் முன், முனிரண்டு பாகங்களையும் படிக்காதவர்கள், அவற்றையும் படித்துவிட்டு வந்தால் வசதியாக இருக்கும்.முதல் பாகத்தில் சில சந்தேகங்கள்/கேள்விகளை எழுப்பி, அதற்கு விடை காணும் நோக்கில் இந்த அலசலை கொண்டு செல்லலாம் என்று திட்டம். அதில் பாதி கேள்விகள் அல்லது சந்தேகங்களைப் பற்றி இரண்டாம் பாகத்தில் பார்த்தோம். மீதமிருப்பதை இங்கு விவாதிப்போம்.

இந்த இலவச/மக்கள் நலத்திட்டங்களால், அப்பாவி நடுத்தர வர்க்கத்தினர் அடைந்த பயன் என்ன? - கொடுத்த விலை என்ன? இதில் ஒரு சாராருக்கு பலன்/லாபம் என்றால், இன்னொரு சாராருக்கு கண்டிப்பாக தீமை/நஷ்டம் தானே? நஷ்டம் என்றால் எந்தெந்த விதத்தில்? இது தான் நமது அடுத்த கேள்வி.

இந்த கேள்விக்கு 2008 பாராளுமன்ற தேர்தலில் நமது அரசியல்வாதிகள் நிகழ்த்திக் காட்டிய ஒரு சம்பவத்தைச் சொன்னாலே போதும், விடை தானாக கிடைத்துவிடும்! அந்த தேர்தல் பிரச்சாரங்களில், 'நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 80 ரூபாயாக இருக்கும் நூறு நாள் வேலை திட்ட சம்பளத்தை 100 ரூபாயாக உயர்த்துவோம்' என்று ஆளுங்கட்சியினர் உறுதியளித்திருந்தனர்.

அதேப்போல் ஆட்சிக்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே அத்திட்டத்தின் சம்பளத்தை 100 ரூபாயாக உயர்த்தியும் அறிவித்து விட்டார்கள். ஆனால் அதே நாளில் வந்த மற்றொரு அரசு அறிவிப்பு தான் நடுத்தர வர்க்கத்தினரின் வயிற்றில் புளியைக் கரைப்பதாக அமைந்தது. அதாவது 'இனி பெட்ரோல், சமையல் எரிவாயு விலைகள் சர்வதேச கச்சா எண்ணை விலை ஏற்றத்திற்கு தகுந்தாற்போல மாதம் இருமுறை மாற்றி அமைக்கப்படும்' என்பது தான் அந்த அறிவிப்பு.

அதிலிருந்து இன்றுவரை, அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 65 சதவிகிதத்திற்கும் அதிகமான விலையேற்றத்தை, தனது அன்றாட வாழ்வில தவறாமல் தினமும் பெட்ரோலை உபயோகப்படுத்தும் நடுத்தரப் பிரிவைச் சார்ந்த ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தான் பெறுமளவில் சுமந்து கொண்டிருக்கிறான். "இவர்களின் 65 சதவிகித சுமை அவர்களின் 20 ரூபாய் ஊதிய உயர்வாக.. இந்த ஆட்சியாளர்களின் சாதனையாக பரைசாற்றிக் கொள்ளப்படுகிறது" இதையே நடுத்தர வர்கத்தினரின் வாய்ஸாக சொல்ல வேண்டுமானால் "We are tax payer, they are benefit enjoyers" என்று தான் கூறவேண்டும்!!!

இதுவும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில் தான் வருகிறது. அரசு அலுவலகங்கள், நீதிமன்ற வளாகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிக்கூடங்கள், சாலைகள், மேம்பாலங்கள், மின்சார உற்பத்தி திட்டங்கள், கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்கள், ...இப்படியாக இன்னபிற அனைத்து அரசு சம்பந்தப்பட்ட, ஒரு அரசாங்கம் என்பது செய்யவேண்டிய அனைத்து மக்களுக்கும் தேவையான அடிப்படை விஷயங்கள் முழுவதுமே, இன்றைய நிலையில் துறுப்பிடித்து, அவலமான நிலையில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

பணக்காரர்களாகவும் இல்லாத, அதேசமயம் தகுதியற்றவைகளை சமாதானம் செய்து கொண்டு வாழ இயலாத..., அரசாங்கம் போடும் அனைத்து வரிகளையும் க்யூவில் நின்று கட்டும் அப்பாவி நடுத்தர மக்கள், அரசாங்கத்திடம் இலவசத் திட்டங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. மாறாக மேற்கூறிய அவசியத் தேவைகள் அல்லது அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை, தாங்களும் நிறைவாக அனுபவிக்க வேண்டுமென்று நினைப்பதில் என்ன தவறிருக்கிறது?

இந்த விஷயத்தில் நம்முடைய இன்னுமொரு கேள்வி, அரசியல்வாதிகள் இந்தப் போக்கை ஊக்கப்படுத்துவது நல்லதா? கெட்டதா? என்பதுதான்.

கண்டிப்பாக இது தவறான போக்குதான் என்பது என் அபிப்பிராயம். சமூகத்தில் அடிமட்டத்தில் இருக்கும் ஒரு சாராரை கைதூக்கி விடுவதில் எந்த சிறு தவறும் இல்லை. அதற்காக தன் கையிலுள்ள கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், குறிப்பிட்ட காலத்திற்கு அம்மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதைக் கூட தவறு என்று சொல்லமுடியாது. ஆனால் ஓட்டரசியலுக்காக இதுவும் காலம் கடந்தும் கொடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கூட இன்னொரு சாரார் ஜீரணிக்கப் பழகிக் கொண்டுவிட்டனர்.

ஆனால் அதன் தொடர்ச்சியான, பரவாயில்லை, கொடுக்கலாமே என்று நினைத்த இலவசத் திட்டங்களில் ஆரம்பித்து, அதன் பரிணாம வளர்ச்சியாக இலவச டீ.வி, ஒரு ரூபாய் அரிசி வரை வந்துவிட்ட நிலையில்... இனி அடுத்தடுத்து அறிவிக்கப் படவிருக்கும் இலவசத் திட்டங்கள் அனைத்திற்குமே.. இன்னொரு சாரார் முட்டி தேய, முதுகு கூன்விழும் அளவிற்கு உழைக்கும் ஒரு நவீன அடிமைத்தனமான போராட்ட வாழ்வை எதிர்காலத்தில் தவிர்க்க முடியாததாகிவிடும் ஆபத்திருக்கிறது.

ஆண்டு வரவு-செலவு திட்டத்தில், மிச்சமிருக்கும்(!) பணத்தில் வேண்டுமானால் அரசாங்கம் இந்த இலவச திட்டங்களை செயல்படுத்தலாம். அதை விடுத்து அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை, இந்த மாதிரியான இலவசத் திட்டங்களுக்கு செலவிட்டால், ஒரு "சமச்சீரற்ற சமூக அமைப்பு" (Social imbalance) நாட்டில் உருவாகிவிடும் அபாயம் இருக்கிறது! இது மதத்தீவிரவாதம், வெளிநாட்டுத் தீவிரவாதம் இவற்றையெல்லாம் விட மிகவும் ஆபத்தானது. இதை உடனடியாக அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் உணரவேண்டிய தருணம் வந்துவிட்டது.

ஒரு உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், நமது சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களுமே, சாலை வரிகளை கட்டிவிட்டுத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறு சாலைகளில் தற்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் டாடா வின் 'சின்ன யானை' என்ற வாகனத்திற்காக, அதன் உரிமையாளர்கள் செலுத்திய ஆயுள் சாலைவரியை மட்டுமே வைத்துக் கொண்டு, சராசரியாக 4000 கி.மீ. சாலைகளை தமிழ் நாட்டில் பக்காவாக போட்டிருக்கலாம். சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் மற்ற வகை வாகனங்கள் கட்டியிருக்கும் வரியினைக்கொண்டு, அந்த நாலாயிரம் கிலோ மீட்டருக்கும், மேலே கூறையே போட்டிருக்கலாம் போலிருக்கிறது!!!

இந்தப் பணமெல்லாம் எங்கே போனது என்று ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து மக்கள் கேட்க ஆரம்பித்தால்...?, மகாத்மா காந்தியைப் போல் வரிகொடா இயக்கம் ஆரம்பித்தால்...? அரசாங்கத்தின் நிலை என்ன???!!

இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன?

இந்த இலவச திட்டங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய அளவுக்கதிகமான விற்பனை வரி, (அதிலும் கடைசி உபயோகிப்பாளர் வரை), சேவை வரி, வருமான வரி, மத்திய அரசு வரி, மாநில அரசு வரி, சுங்க வரி, கலால் வரி,.... இப்படி நடுத்தர வர்கத்தினரின் முதுகில் வரிவரியாக கோடு போட்டுக் கொண்டே சென்றால், "எங்கே சுற்றினாலும் ரங்கனைத் தான் சேவிக்க வேண்டும்" என்பது போல், கடைசியாக தாங்கமுடியாத அளவிற்கான விலைவாசி ஏற்றத்தில் தான் கொண்டுவிடும் என்பதை அனைத்து ஆட்சியாளர்களும், ஆளத்துடிப்பவர்களும் உணர வேண்டும். அடுத்து, மாவட்டவாரியாக நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கும் சிறிய, நடுத்தர, மற்றும் பெரிய உற்பத்தி தொழில் திட்டங்களை உருவாக்கி, மக்கள் தங்கள் தேவையை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் வேளாண்மை மற்றும் பண்ணைத் தொழிலுக்கு வாய்ப்பிருக்கும் பகுதிகளில், முற்றிலும் நவீன முறைகளை அரசாங்கம் பயிற்றுவித்து, அதற்கு தேவையான அனைத்தும், விதை முதற்கொண்டு, உபகரணங்கள் வரை அனைத்தையுமே ஒரு பொதுநல அமைப்பை ஏற்படுத்தி, முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்து, விளை பொருட்களை அரசாங்கமே, விவசாயிகளுக்கான உடல் உழைப்பிற்கான சம்பளம், விளை நிலத்திற்கான வாடகை, அதற்கு மேல் ஒரு நல்ல லாபம் என்று சேர்த்து விலையாக நிர்ணயம் செய்து வாங்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் இலவசம் என்பது, விவசாயத்திற்கு மட்டுமே, அதுவும் இதேப் போன்று நெறிப்படுத்தப்பட்ட வகையில் மட்டுமே என்று இருக்க வேண்டும். இவ்வாறு செய்வது இலவசமாக இருக்காது. மாறாக அதுவே லாபமாகவும், இன்னும் சொல்லப்போனால் இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய காரணியாகவும் கண்டிப்பாக அமையும்.

இதெல்லாம் நடக்குமா? சாத்தியமா? அரசியல் சாக்கடையாகி விட்டதே? என்றெல்லாம் 'என்னத்த கண்ணையா' போல அங்கலாய்த்துக் கொண்டிருக்காமல், இதையெல்லாம் செயலாக்க என்னென்ன செய்யலாம் என்பதை... இன்னும் பலர் கூடி விவாதிக்கலாமே?!

தி.மு.க. கரையேறுமா? என்று தலைப்பில் கேட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமல் போனால் இது நிறைவடையாது. நான் இருக்கும் நாகை மாவட்டத்தில் சுமார் 27 கிராமங்களைச் சேர்ந்த 212 கூலி வேலைக்குச் செல்லும் பெண்களிடம் பேசிய பொழுது தெரிந்து கொண்டது இது தான். "இலவசங்கள் எல்லாம் சரிதான், இனிமே யார் வந்தாலும் அத கொடுத்துதான் ஆகணும், அதனால் அது ஒரு மேட்டர் இல்லை. ஆனால் கலைஞர் விலைவாசியை கண்ணாபின்னான்னு ஏத்திட்டார், அம்மாதான் அதிகாரிகளை அடித்து உதைத்து விலையை குறைப்பார்" என்று ஒரு பகீர் கருத்தை கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர் சொல்கிறார்கள்.

ஆகவே, அவர்களிடம் பேசிய வகையில் எனது புரிதலின் படி கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணத்தை வைத்துக் கொண்டு தி.மு.க. கரையேறினால் தான் உண்டு!

No comments: