Wednesday, July 13, 2011

வரலாறு காணாத விலையேற்றத்தை வாழ்த்தி வரவேற்போம்..!!

இந்த நிதியாண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இன்னும் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதற்கான தேதியும் கூட இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. எப்படியானாலும் இன்னும் பத்துப் பதினைந்து நாட்களுக்குள் அந்த பட்ஜெட் வெளியிடப்பட்டுவிடும். அதற்குள்ளாகவே பல பத்திரிகைகள், இந்த பட்ஜெட்டில் பல நல்ல சலுகைகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் முதல்வர் அறிவிக்கப் போகிறார் என்று கட்டியம் கூறிக்கொண்டிருக்கின்றன.

ஆனால் நேற்றுமுன் தினம் அதாவது 11 ஆம் தேதி இரவே அனைத்து வணிகவரி அலுவலகங்களுக்கும் அரசு தாக்கீது ஒன்று வருகிறது. அதில் நாளை முதல் அதாவது 12 ஆம் தேதிமுதல், "வாட்" எனப்படும் மதிப்புக்கூட்டு வரியில் சில மாறுதல்கள் செய்யப்படுகிறது என்றும், அதன் படி இது வரையிலும் 4 சதவிகித வாட் வரி கட்டிய பொருட்களுக்கு எல்லாம் இனி 5 சதவிகிதமாகவும், 12.5 சதவிகித வரி கட்டிய பொருட்களுக்கு இனி 14.5 சதவிகிதமாகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
 
இதில் இன்னும் ஒரு கொடுமையாக, ஏற்கனவே 4 சதவிகிதம் வரி கட்டப்பட்ட சில பொருட்களுக்கு இனிமேல் 12.5 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது! இந்த அபார வரி உயர்வு நேற்றைய தேதியிலிருந்தே நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்படுகிறது. அதாவது பட்ஜெட்டிற்கு முன்னதாகவே இந்த வரிகள் மிகக் கடுமையாக உயர்த்தப்படுகின்றன. ஆனால் எந்தப் பத்திரிக்கையிலும் இதைப் பற்றி விரிவான செய்திகள் இல்லை!

இருப்பினும் வரும் பட்ஜெட்டில், புதிதாக எந்த வரியும் உயர்த்தப்படாது!! அதேசமயம் ஃபேன், கிரைண்டர், மிக்ஸி, லேப்டாப், ஆடு, மாடுகள், அதிக பொருட்செலவில் காப்பீட்டுத்திட்டம் இவையெல்லாம் அறிவிக்கப்படும். அடுத்த ஒரு மாதத்திற்கு பத்திரிகைகளும், நம் இணையதளங்களும் அவற்றை பல்வேறு கோணங்களில் செய்தியாக வெளியிட்டு புலகாங்கிதம் அடைந்து கொள்ளும்.

சரி விஷயத்திற்கு வருவோம். சராசரியாக் மூன்றிலிருந்து ஆறு சதவிகிதம் வரையிலான இந்த வரி உயர்வு என்பது, நாம் தினசரி அத்தியாவசியமாக பயன்படுத்துகின்ற பேஸ்ட், சோப் வகையறாகளிலிருந்து மளிகை மற்றும் உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஸ்டேஷனரீஸ்.... இத்தியாதிகள் உட்பட அனைத்து விதமான உபயோகப் பொருட்களிலும் பிரதிபலிக்கும்.

சராசரியில் குறைந்தபட்ச உயர்வான 3 சதவிகிதத்தை எடுத்துக் கொண்டாலே, மதிப்புக் கூட்டு வரியில் அந்தப் பொருள் உற்பத்தி இடத்திலிருந்து, மொத்த விற்பனையாளர், விநியோகஸ்தர், கடைக்காரர் என்று பல படிகளைத் தாண்டி மக்கள் கைக்கு வந்து சேரும் பொழுது வரியாக மட்டுமே 5 சதவிகித உயர்வைக் கண்டிருக்கும்! இந்த நிலையில் எந்தவொரு வியாபாரியுமே வரி எவ்வளவு உயர்கிறதோ அதே அளவிற்கு மட்டும் விலையை ஏற்ற மாட்டார்கள். மாறாக அதிகச் செலவினம் என்ற அடிப்படையில் இன்னுமொரு 5 சதவிகிதத்தை சேர்த்து தான் விலையை ஏற்றுவார்கள்.

உதாரணத்திற்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5/= ஏறுவதாக வைத்துக் கொண்டால், ஆட்டோ சார்ஜ் எவ்வளவு ஏற்றலாம்? ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20 கி.மீ. தூரம் செல்லும் ஆட்டோவுக்கு கிலோ மீட்டருக்கு 25 காசுகள் மட்டுமே ஏற்றலாம். ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது? அது உங்களுக்கே தெரியும். அதேப்போலத்தான் மற்ற பொருட்களிலும் விலையேற்றம் நடக்கும்.

இப்படியொரு வரி உயர்வு என்பது அசாதாரணமானது என்று வியாபாரிகளே தலைசுற்றித்தான் போயிருக்கின்றார்கள்.  நேற்று போட்ட பில் எல்லாமே பழைய வரியில் போட்டு விற்றுவிட்டோமே என்று புலம்புகிறார்கள். அதை யார் ஈடுசெய்வது? எடுத்த ஆர்டரை பழைய விலைக்கே எப்படித் தருவது என்றும் குழம்பிப்போயுள்ளனர்.

கடந்த ஆட்சியில் அத்தியாவசியமற்ற அலங்கார இலவசமான ஒரு கலர் டீவிக்கே, அங்கலாய்த்தவர்கள்.., ஒரு லட்சம் கோடி கடன், பத்தாயிரம் கோடி ஆண்டு வட்டி என்று பெரிய பெரிய ஆடிட்டர்களையெல்லாம் பேட்டி எடுத்து, புள்ளி விவரங்களுடன் சாடியவர்கள்.... இன்று ஒன்றுக்கு பதில் மூன்று அத்தியாவசியமற்ற இலவசப் பொருட்கள், பள்ளி மாணவர்களுக்கே லேப்டாப், ஆடுகள், மாடுகள்,  ஒரு லட்சத்திற்கு பதிலாக நான்கு லட்சம் பெறுமானமுள்ள காப்பீட்டுத் திட்டம்... என்று அறிவிப்புகளை அடுக்கிக்கொண்டே செல்வதைப் பார்த்து..., இதற்கும் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டுப் பத்திரம் எழுதுகின்றார்கள்!!!

அத்தகையவர்கள், தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் செய்கிறார்களா? அல்லது தெரிந்து கொண்டே புரியாதவர்கள் போல நடிக்கிறார்களா? என்றே நம்மைப் போன்றவர்களுக்கு குழப்பமாக இருக்கின்றது!

ஆனால் எத்தனை காலத்திற்கு தான் தூங்குவது போலவே நடிக்க முடியும்?! இன்று முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மக்கள் கழுத்தை பெறுமளவில் நெறிக்கப்போகிறது. அது முதல் மக்கள் பேச ஆரம்பிப்பார்கள், பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் பெண்களுக்கு, அடுத்த மாதம் ஒன்றாம் தேதி ரோக்காவுடன் கடைக்குச் செல்லும் பொழுதே விபரீதம் புரிந்துவிடும்!!

அப்பொழுது இவர்களெல்லாம் சொல்வதற்கு என்ன பதில் வைத்திருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை. நமக்குத்தேவை பதில் இல்லை. நிவாரணம் தான். கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறுகளுக்குத்தான் தண்டனை கொடுக்கப்பட்டு தூக்கியெறியப்பட்டிருக்கின்றார்கள். அது முடிந்த கதை. இன்னமும் அதைப்பற்றியே பிரஸ்தாபித்துக் கொண்டு காலம் கடத்துவதும், புது ஆட்சியாளர்கள் செய்யும் சாதாரண நடைமுறை செயல்பாடுகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருப்பதும் மட்டுமே நமது வேலை என்று நினைத்துக் கொண்டிருந்தால்....,

புதிய ஆட்சியின் ஆரம்பமே முன்னைவிட பலமடங்கு அதிக இலவசங்கள், அதன் காரணமாக மிகக்கடுமையான விலைவாசி ஏற்றம் என்று எகிற ஆரம்பித்தால், ஐந்து ஆண்டுகளில் தமிழகம் என்ன மாதிரியான கடன்சுமையிலும், விலையேற்றத்திலும் சிக்குண்டு தவிக்கும் என்பதை உண்மையான நடுநிலைவாதிகளும், மக்கள் நலன் மட்டுமே பேணும் உள்ளம் கொண்டோரும் உணர வேண்டும். ஆட்சியாளர்களின் தவறுகளை முளையிலேயே கண்டித்து கிள்ளி எறிந்து தமிழக மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். செய்வார்களா??!!

5 comments:

முரளிகண்ணன் said...

வருத்தப்பட்டு பாரம் சுமக்க வைக்கிறார்கள்

வடகரை வேலன் said...

சௌமியன்,

நல்ல கட்டுரை.

sriram said...

நல்ல சாலைகள் அமைத்து, உலகத் தரத்தில் இலவச மருத்துவ வசதிகள் அளித்து, தரமான கல்வி அளித்து, குடிக்க நல்ல தண்ணீர் அளித்து....
வரிகளை கூட்டினால் கஷ்டப் பட்டாவது கொடுக்கலாம்.

Non Essential பொருட்களை இலவசமாக அளித்து அந்தச் சுமையை மக்கள் மீதே (அதுவும் திருட்டுத்தனமாக பட்ஜெட்டுக்கு முன்னால்) சுமத்துவது நியாமம் இல்லை. அரசு உணருமா??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஶ்ரீராம்

ஜீவன்பென்னி said...

5 வருசத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லயில்ல அப்புறமென்ன, மக்கள் பிரச்சனை மக்களுக்கு... ஆட்சியாளர்களுக்கு என்ன பிரச்சனை..

கொக்கரக்கோ..!!! said...

@ ஜீவன்பென்னி, வடகரை வேலன் அண்ணாச்சி, பாஸ்டன் ஸ்ரீராம், மற்றும் முரளி கண்ணன்...

புதிய தளத்திற்கு தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.