Monday, July 11, 2011

தி.மு.க + காங்கிரஸ் - வெற்றி கூட்டணியா? (இம்முறையும்)

2011 ஆம் வருடம் ஜனவரி 11 ஆம் தேதி என்னுடைய 6 ஆவது பதிவாக எனது பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது.  

உள்ளங்கை நெல்லிக்கனியாக இருந்த தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி என்பது இன்றைய நிலையில் சந்தேகத்திற்கு இடமானதாகவும், ஏன் கிட்டத்தட்ட கானல் நீராகவும் மாறிப்போனதன் பின்னனி என்ன? இதற்கு காரணகர்தற்கள் யார் யார்? பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார் யார்? இந்த நிலை மாறி மீண்டும் வெற்றி பாதையில் இக்கூட்டணி பயணிக்க இயலுமா?

இக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண, தற்பொழுது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இக் கூட்டணி உருவான கால கட்டத்தையும் அதிலிருந்து இன்று வரையிலான ஏழரை வருட கால சிறு வரலாற்று நிகழ்வுகளையும் சற்று உன்னிப்பாக கவனித்து அலசினாலே போதும். அதை தான் இபபொழுது நாம் செய்யப் போகிறோம்.

அது 2003 பாராளுமன்ற தேர்தலுக்கான முஸ்தீபுகளின் உச்சத்தில் தேர்தல் கமிஷன் உட்பட அனைத்து கட்சிகளும் இருந்த நேரம். காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் வேறோடும் வேறடி மண்ணோடும் இந்திய் அரசியலில் இருந்து பிடுங்கி எரியப்பட்டுவிடும் என்ற நிலை. அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்ற விவாதப் பொருளுக்குள் கூட ராகுல் வராத நேரமது. இன்னும் சொல்லப்போனால் பிரியங்கா தான் அரசியலுக்கு வருவார் என்று கூட பரவலாக எதிர்பார்க்கப்பட்ட காலம்.

தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் செல்வாக்கான கட்சிகளை கூட்டணிக்காக தேடி அலையும் பரிதாபமான நிலை காங்கிரஸுக்கு. இந்த நிலையில் தான் தமிழகத்திலிருந்து தி.மு.க வின் சார்பாக காங்கிரஸுக்கு ஆதரவாக தெள்ளத்தெளிவான குரலை அழுத்தம் திருத்தமாக எழுப்புகிறார் கருணாநிதி! அதுதான் ஆரம்பம், அதன் பிறகு எல்லாமே அமர்க்களம் தான் காங்கிரஸுக்கு - இரண்டாவது முறையாகவும் இந்திய ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறது.

2003 ல் காங். க்கு ஆதரவாக ஓங்கி ஒலித்த கருணாநிதியின் குரலாகட்டும், தேர்தலுக்குப் பின் காங். தலைமையில் ஆட்சி அமைய புதுடெல்லி சென்று தங்கி அவர் செய்த தில்லாலங்கடி வேலைகலாகட்டும், பின்னர் சில பல கூட்டணி கட்சிகளால் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது தன்னுடைய உறுதியான ஆதரவை வெளிப்படுத்தி அதை முறியடித்த பாங்காகட்டும், இவைகளெள்லாம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு சிறந்த நிலைப்புத் தன்மையை ஏற்படுத்தித் தந்ததோடு சோனியாவையும் இந்திய ஆட்சி அதிகாரத்தின் ஏக போக தலைவியாக்கியது. சோனியாவின் இந்த நிலை தான் இலங்கையில் தனித் தமிழ் ஈழம் என்ற கனவு தவிடு பொடியாக்கப்பட்டு, புலிகள் அழிப்பு, பிரபாகரன் இழப்பு என்று போய் கடைசியில் முள் வேலி சித்ரவதை வரை வந்து நிற்கிறது! இது தான் ஈழத் தமிழர்களின்/ஆதரவாளர்களின் கண்மூடித்தனமான கருணாநிதி எதிர்ப்புக்கு வித்திட்டு விட்டது.

அடுத்தது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வறலாற்றின் இரண்டாவது அத்தியாயம் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலோடு ஆரம்பமாகிறது. இதில் தான் நம்முடைய முதல் பாரா கேள்விகளுக்கு காரணமான நிகழ்வுகள் தொடங்குகிறது. இந்த அத்தியாயத்தின் 'காமெடி ஹீரோ' தான் ராகுல். அவரைச் சொல்லி குற்றமில்லை, அவருடைய ராசி அப்படி! அவருக்கு நன்றாக விபரம் தெறிய ஆரம்பித்த போது அதுவரை அசுர பலத்துடன் ஆட்சி செய்த ராஜீவ் காந்தியின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி! ராகுல் நல்ல வாலிபனாகி ராஜீவுடன் சேர்ந்து வெளிவர ஆரம்பிக்கும் போது ராஜீவின் ஆயுளுக்கே முற்றுப்புள்ளி!!

கடந்த முறை அதிகமான கட்சிகளின் துணை மற்றும் வெளி ஆதரவோடு கடும் நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ், இந்த முறை குறைந்த அளவிலான நல்ல (நெருக்கடி கொடுக்காத) கட்சிகளுடைய ஆதரவோடு நிம்மதியான ஆட்சி செய்ய முற்படும் நிலையில் தான் நம்ம ராகுலுக்கு முக்கிய பொறுபுகள் (கட்சியை வளர்க்கத்தான்) கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு இவரது ஆட்டம் ஆரம்பமாக... காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் அதகளப்பட்டு, பீகாரில் புரட்டி எடுக்கப்பட்டு, கேரளாவில் கலகலத்து, குஜராத்தில் கொஞ்சம் கூட முன்னேராமல்... இப்படியே இது ஒரு தொடர் கதையாகிவிட்டது.

ஆனால் தமிழகம் வந்தால் கருணாநிதியை அவர் சந்திப்பதில்லை அதனால் கூட்டணிக்குள் குழப்பம் என்கிறார்கள் - அது தவறு. அவர் கருணாநிதியை ச்ந்திக்காததால் தான் கூட்டணி இன்னமும் உடையாமல் இருக்கிறது! தமிழகத்தில் இந்த வெற்றி கூட்டணியை விளங்காத கூட்டணி லெவலுக்கு கொண்டு சென்றதில் ராகுல் காந்தியின் பங்கு அளப்பரியது. 2008 பாராளுமன்ற தேர்தலில் இக் கூட்டணி 60 சதவீத வெற்றி மட்டுமே பெற்றதற்கு காரணம் இலங்கை பிரச்சினையில் மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசின் பழிக்குப் பழி ரீதியிலான சுயநல வெளியுரவு கொள்கை தான். கூட்டணி தர்மம் மற்றும் இன்னபிற கருமாந்திர காரணங்களுக்காக இப்பிரச்சினையில் மெளனம் காத்ததற்கான விலையை தி.மு.க வும் கொடுத்தது.

இதன் பிறகு ஆரம்பித்து இன்று வரை தமிழக காங்கிரஸ்  (தரு)தலைகள் அடித்துக் கொண்டிருக்கும் கூத்துக்கள் தான் வரும் தேர்தலில் இக் கூட்டணியின் வெற்றியை பதம் பார்க்க காத்திருக்கின்றன. காமெடி அல்லக்கை இளங்கோவனில் ஆரம்பித்து, தனித்து ஒரு தேர்தலில் நின்றால் டெப்பாசிட் கூட வாங்க அருகதையற்ற தமிழக காங்கிரஸ் பிரதான கோஷ்டியின் தலைவர் வாசன், அவருடைய அடிப்பொடி இளைஞ்சர் காங்கிரஸ் யுவராஜ், குபீர் குபீர் என பொங்கி அடங்கும் கார்த்திக் சிதம்பரம் இப்படியாக இன்னும் பல கோமாளிக் கூட்டம் வரை அடித்த கூத்துக்கள் தனக்குத் தானே குழிபறித்துக் கொள்ளும் விபரீத நிலையை இக் கூட்டணிக்கு ஏற்படுத்தி விட்டன.

சீமான் என்ன காரணத்திற்காக தி.மு.க வை எதிர்த்து அ.தி.மு.க வை ஆதரிக்கிறார் என்ற அடிப்படை ஞானம் கூட இல்லாமல் இந்த த(வளை)லைகள் காங்கிரஸை அ.தி.மு.க அணிக்கு கொண்டு செல்ல முனைவது அகில இந்திய காங். க்கு பலம் பொருந்திய தலைமை ஒன்று இருக்கிறதா? என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. தென் தமிழகத்தில் தமது கட்சியின் மூன்றாம் மட்ட பேச்சாளர் ஒருவர் காங்கிரஸ் தலைவர்களை குறை கூறி பேசினார் என்பதற்காக கட்சியிலிருந்து கட்டம் கட்டிய தி.மு.க தலைமை எங்கே.. தமக்குத்தாமே குழி பறிப்பவர்களை தும்பை விட்டு வாலை கூட பிடிக்க முற்படாத காங்கிரஸ் தலைமை எங்கே?!

கடந்த ஓராண்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் கொடுத்த அறிக்கையை விட பேசிய பேச்சுக்களை விட இந்த கோஷ்டி தலைவர்களின் கூச்சல் தான் தமிழக அரசியலில் பிரதானமாக இருந்தது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை வரும் தேர்தலில் தி.மு.க வுடன் தான் கூட்டணி என்பதை உறுதி செய்து விட்டது என்பது, இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா மத்திய அரசை காட்டமாக விமர்சித்து வெளியிட்ட அறிக்கையின் மூலம் தான் மக்களுக்கு.., ஏன் இளங்கோவனுக்கே கூட உறுதியாக தெறிய வந்தது!

இப்பொழுது ஓரளவிற்கு புரிந்திருக்கும், இக் கூட்டணியின் வெற்றிக்கு ஆப்பு வைத்துக் கொண்டிருப்பவர்கள் யார் யார் என்று. இனி இக் கூட்டணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டுவர யார் யார் என்ன செய்ய வேண்டும்?

இரண்டே இரண்டு பேர் தான். ஒருவர் சோனியா இன்னொருவர் கருணநிதி!  சோனியா என்ன செய்ய வேண்டும் என்பது இக் கட்டுரையை படிக்கும் பொழுதே தெறிந்திருக்கும். கருணநிதி செய்ய வேண்டியது - தான் மட்டும் தான் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்காமல் எதிர்ப்பக்கமும் அதை கடைபிடிக்க முயற்சி எடுக்க வேண்டும். வெற்றிகரமான எம்.ஜி.ஆர். பார்முலா படி அனைத்து திட்டங்களையும் கச்சிதமாக செயல்படுத்தி விட்டு கூட்டணி கட்சிகள் என்பது உதவிக்கு தான், உபத்திரவத்திற்கு அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்த தவறினால் ஐந்து வருடமாக அடித்தட்டு மக்களுக்கு செய்த திட்டங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.

No comments: