Thursday, July 14, 2011

இலவச திட்டங்கள் ஒரு ஆய்வு (பாகம் 2)

2011 ஆம் வருடம், பிப்ரவரி 15 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!


சென்ற வாரம் "இலவசங்கள் இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்களா?" என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் தான் இந்த பதிவு. அதை படிக்காதவர்கள் இங்கு சென்று அதைப் படித்து விட்டு இக் கட்டுரையை வாசிக்கத் தொடங்கவும்.

முதல் பாகத்தை பல சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பி, அதற்கு விடை காணும் முயற்சியாக அடுத்தடுத்த பாகங்கள் அமையும் என்று முடித்திருந்தேன். அது ஒவ்வொன்றாக இப்பொழுது பார்க்கலாம்.

முதல் மற்றும் முக்கியமான கேள்வியே, இந்த இலவச திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு தேவையா? இல்லையா?

கண்டிப்பாக தேவையில்லை என்பது தான் எனது வாதம். எனக்குத் தெரிந்து முதல் இலவசத் திட்டம் என்றால், காமராஜர் காலத்தில் அவரால் கொண்டுவரப்பட்ட இலவச மதிய உணவு திட்டம் தான். அது ஏழை சிறுவர்களுக்கு ஒரு வேளை பசிப் பிணியை களைவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டமன்று. ஏழைச் சிறுவர்கள் கல்வியறிவு பெற்று முன்னேற, அவர்கள் கல்விச் சாலைகளுக்கு செல்வதற்கு தடையாக இருந்த பசி என்ற தடைக் கல்லை தகர்த்தெறிய கொண்டுவரப்பட்ட திட்டம் அது!

அதாவது கல்வி அறிவில்லாத, சாதி, மதங்களைக் கடந்த ஒரு மிகப் பெரிய சமுதாயம் கரை சேருவதற்கு மிகப்பெரிய கப்பலோ, உல்லாசப் படகோ தேவையில்லை, ஒரு மரக்கட்டையே போதுமானது என்பதை உணர்ந்து கொண்டுவரப்பட்ட திட்டம் தான் அது.

ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் ஓட்டரசியலுக்காக அந்த திட்டம் பல பரிமாணங்களைக் கடந்து இன்று தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான சத்துணவு அமைப்பாளர்கள் 'வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தவர்கள்' பட்டியலில் வழக்குத் தொடுக்க தகுதி வாய்ந்தவர்களாக மாறியிருப்பது தான் இந்த திட்டத்தின் பலன்!

இன்றைய தேதியில் இந்த சத்துணவு திட்டத்தை நிறுத்தினால், கல்விச் சாலைகளுக்கு வரும் ஏழை மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து விடுமா என்பதை ஒரு ஐந்து ஆண்டுகள் இத் திட்டத்தை நிறுத்தி வைத்து பரீட்சித்துப் பார்த்தால் என்ன? அதனால் மிச்சமாகும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தைக் கொண்டு, அனைத்து அரசுப் பள்ளிகளையும் அல்ட்ரா மாடர்ன் (ஹை..! ரைமிங்கா வருதுல்ல?) பள்ளிகளாக தரம் உயர்த்தி விடலாமே?! நல்ல சூழலுடன் கூடிய அழகிய கல்விக் கூடங்கள் என்றால், எந்த குழந்தை தான் பள்ளிச் செல்ல தயங்கும்?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் முதல் பாகத்தில் பட்டியலிட்ட அனைத்து இலவச திட்டங்களையும் இதேப் போன்ற நிலைகளில் பொருத்திப் பார்த்து, நல்லதொரு தீர்வினைக் கண்டுவிடலாமே? இதை அப்படியே பிடித்துக் கொண்டு தொடர்ந்து சென்றால் கடைசியில் டாஸ்மாக் வருமானம் தமிழகத்துக்கு தேவையில்லை என்ற நிலைமை வந்துவிடும்!

நாம் நமது அடுத்த கேள்வியான, இந்த இலவச திட்டங்கள் மக்களை முழுமையாகவும், சரியாகவும், சரியானவர்களுக்கும் சென்றடைகிறதா? என்பதைப் பார்ப்போம்.

மத்திய அரசின் 'ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்" என்ற ஒரு திட்டம். 'நூறு நாள் வேலை' திட்டம்னு கிராமத்து மக்கள்ட்ட ரொம்ப பிரபலம். இந்தியாவில் வேலை வாய்ப்பிற்கே வழியின்றி, வருமானம் இல்லாமல், உணவுக்கே பிறரிடம் கையேந்தும் நிலையிலுள்ள மக்கள் வாழும் பகுதிகளில் அரசாங்கமே, வேலை வாய்ப்பினை (ஏரி, குளம் தூர் வாருதல், வாய்க்கால் வெட்டுதல்,... இப்படியாக) அம்மக்களுக்காக உருவாக்கி  வருடத்திற்கு குறைந்த பட்சம் நூறு நாட்களாவது அம்மக்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதி செய்து, தினம் ரூ. 100/= கூலி தருகிறார்கள் (ரூ. 80/= என்றிருந்தது, நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் நூறு ரூபாயாக உயர்த்தப் பட்டுவிட்டது).

முதலில் இத்திட்டம் முழுமையாக பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்றால், கண்டிப்பாக இல்லை என்பது தான் எனது பதில். இதில் நேரடியான கொள்ளை என்றால் பயனாளிகளுக்கு ரூபாய் அறுபது முதல் ரூபாய் 80 வரை தான் கொடுக்கப் படுகிறது. இதனால் இத் திட்டம் ஆரம்பித்து விட்டாலே எங்கு பார்த்தாலும் சாலை மறியல் தான்! இதில் மறைமுக கொள்ளை என்றால் ஒரு பஞ்சாயத்தில் 70 நபர்கள் இந்த வேளைக்கு வருகிறார்கள் என்றால், இருபது, முப்பது பேரை அதிகப்படுத்தி பில் பண்ணிவிடுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆக இத்திட்டம் முழுமையாக மக்களுக்குச் சென்று பலனளிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

அடுத்ததாக, இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் விதத்தில், இதன் பலன்கள் சரியானவர்களுக்கு, சரியாகச் சென்றடைகிறதா? என்றால் அதற்கும் 'நோ' தான் பதில். வேலை வாய்ப்பு அறவே இல்லாத பகுதிக்கான திட்டமாக அறிவிக்கப் பட்ட இத்திட்டத்தை, நடவு காலத்திலும், அறுவடை காலத்திலும் செயல் படுத்த வேண்டாம் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் அளவிற்கு இருக்கிறதென்றால், இத் திட்டம் சரியானவர்களுக்குப் போய்ச் சேருகிறதா இல்லையா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன். மற்ற இலவச/மக்கள் நலத் திட்டங்கள் அனைத்துமே, கிட்டத்தட்ட இதே நிலையில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை இதற்கு மேலும் விளக்கத் தேவையில்லை என்று தான் நினைக்கிறேன்.

அடுத்ததாக நாம் அலசப் போவது, இந்த இலவச திட்டங்களை தனதாக்கிக் கொள்வதில் மக்கள் எந்த அளவிற்கு, நேர்மையுடனும், மனசாட்சிப்படியும் நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்விக்கான பதிலைப் பற்றித்தான்.

இதற்கும் மேற்கூறிய திட்டத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். மக்கள் தங்கள் பகுதியிலேயே வேலை வாய்ப்பு இருக்கும் பொழுது, மேலும் இத்திட்டதில் கிடைக்கும் ஊதியத்தை விட கூடுதலாக ஊதியம் கிடைக்கும் வேலையை நிராகரித்து விட்டு இந்த நூறு நாள் வேலைக்குச் செல்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?  வெறும் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் 20 சதவிகித உடல் உழைப்பிலேயே ஒரு கூலி கிடைக்கும் போது, அதிக கூலி கிடைத்தாலும் முழுநேரமும் (8 மணி நேரம்) உழைக்கும் வேலைக்குச் செல்ல மக்கள் தயாராயில்லை என்பதையே காட்டுகிறது.

இலவச ஒத்தை லைட் திட்டத்தில், தன் வீட்டிற்கு பக்கத்திலேயே ஒரு சிறு ஆட்டுக் கொட்டகை அமைத்து,  அதற்கு இலவச மின்சாரம் பெற்று, தங்கள் வீட்டிற்கு கனெக்ஷன் (டீ.வி, லைட், ஃபேன், கிரைண்டர்...) எடுத்துக் கொள்ளும் பயனாளிகள் இல்லவே இல்லை என்று மின்வாரிய அதிகாரிகளையோ, பொதுமக்களையோ நெஞ்சில் கைவைத்துச் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்?!

இவை எல்லாமே சிறு உதாரணங்கள் தான். அனைத்து இலவசத் திட்டங்களுக்குமே, இவற்றை எல்லாம் பட்டியலிட்டு விளக்கினால்... மிகுந்த ஆயாசமாகிவிடும். ஒருவித விரக்தி நிலைக்கு இதைப் படிப்பவர்கள் தள்ளப்பட்டு விடுவார்கள். அதனால் தான் ஒவ்வொரு கேள்விக்கான விளக்கத்திற்கும் ஓரிரு உதாரணங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஆகவே சென்ற பாகத்தில் எழுப்பப்பட்ட மீதமிருக்கும் சந்தேகங்கள் அல்லது கீழ்கண்ட கேள்விகளுக்கான விடைகளை அடுத்தடுத்த பாகங்களில் இன்னும் விரிவாக அலசி ஆராய்வேம்.

//இதனால் அப்பாவி நடுத்தர வர்க்கத்தினர் அடைந்த பயன் என்ன - கொடுத்த விலை என்ன? அரசியல்வாதிகள் இந்தப் போக்கை ஊக்கப் படுத்துவது நல்லதா, கெட்டதா?. இதில் ஒரு சாராருக்கு பலன்/லாபம் என்றால், இன்னொரு சாராருக்கு கண்டிப்பாக தீமை/நஷ்டம் தானே? நஷ்டம் என்றால் எந்தெந்த விதத்தில்? இதற்கான தீர்வு தான் என்ன?//

நண்பர்களே, நடுத்தர பிரிவைச் சார்ந்த ஒரு சராசரி இந்திய குடிமகனின் பார்வையிலிருந்து, அரசாங்கத்தின் இந்த இலவச திட்டங்கள் பற்றிய எனது கருத்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கு தங்கள் பார்வையில் இருந்து எதிர்மறை கருத்துக்களோ, விளக்கங்களோ, சந்தேகங்களோ..., எதுவாயினும் என் அறிவு நிலையிலிருந்து பதில் கூற முயலுகிறேன். இயலாத பட்சத்தில், தங்கள் கருத்தை எற்றுக்கொள்ளவும் தயங்கமாட்டேன்.

No comments: