Thursday, July 14, 2011

இலவசங்கள் இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்களா?? [பாகம் 1]

2011 ஆம் வருடம், பிப்ரவரி 10  ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!

சில தினங்களுக்கு முன் நமது தமிழக முதல்வர் கருணாநிதி பொதுமக்களுக்கு இலவசங்கள் கொடுப்பது சம்பந்தமாக, சமீப காலத்தில் எழுப்பப்படும் சந்தேகங்கள் அல்லது விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் தனது நிலைப்பாட்டை இவ்வாறு தெளிவு படுத்தியிருந்தார். அவர் சொன்னது இது தான், "ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்!".

மிகவும் ஆணித்தரமாக தனது கருத்தை கூறியிருந்தார் கருணாநிதி. நடுத்தர மற்றும் மேல் நடுத்தர மக்களில் அனேகம் பேர், இரண்டுக்கும் மேற்பட்டோர் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளிலோ, அலுவலகங்களிலோ, பொது இடத்திலோ, ஏன் நம் இணைய தளங்களில் கூட கூடிப் பேச முற்பட்டால், தமிழக அரசு தரும் இலவச திட்டங்களுக்கு எதிரான தங்களது விமர்சனங்களை பதிய வைத்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் இந்த இலவச திட்டங்கள் நல்லதுக்கா என்று கேள்விப் பொருளாக பேசப்பட்டு வந்த இந்த விவாதம், சமீப காலமாக இது முற்றிலும் தவறானது என்ற ரீதியில் தமிழக அரசுக்கும் கருணாநிதிக்கும் எதிரான கடும் விமர்சனங்களை வைக்கும் அளவிற்கு வலுவடைந்திருக்கிறது.

இவர்கள் இப்படிப் பேசும் அளவிற்கு அந்த இலவச திட்டங்களால் ஏதேனும் பாதிக்கப் பட்டிருக்கிறார்களா? அதேசமயம் இவர்களின் இந்த விமர்சனங்களுக்கு முற்றிலும் எதிரான தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்கு, அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் கருணாநிதிக்கு எப்படி துணிச்சல் வந்தது? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியில் சர்க்கரை குறைவாக இருந்தால் கூட கருணாநிதியை கண்டித்து அறிக்கை விடும் ஜெயலலிதா உட்பட எந்த எதிர்க்கட்சி தலைவர்களும், கருணாநிதியின் இந்த அறிவிப்புக்கு  'செலக்டிவ் அம்னீஷியா' வந்தவர்கள் போல் செயல்படுவதற்கும் என்ன காரணங்கள் என்பது தான் புதிராக இருக்கிறது.

நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வ்ர்க்கம் என்பது (இனி நடுத்தர வர்க்கம் என்றே அழைக்கலாம்) இன்றுள்ள இந்திய சமூக அமைப்பில் தவிர்கப்பட முடியாத ஒரு பெறும் கூட்டம். இவர்களைத் தவிர்த்து விட்டு எந்த அரசாங்கமும் மக்கள் நலத்திட்டங்கள் எதையும் சாத்தியப்படுத்திவிட முடியாது. இவர்கள் தான் இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேர். இவர்கள் தான் தாங்கள் சம்பாதிக்கும் கடைசி ரூபாய் வரைக்கும் ஏமாற்றாமல் வரிகட்டுகிறவர்கள், மனிதவளம் மூலம் மிகப்பெறும் அன்னியச் செலாவணி வரத்திற்கு வழி செய்பவர்கள். இவர்கள் மூளையையும் உழைப்பையும் நம்பித்தான் பெறுவாரியான சர்வதேச நிறுவனங்கள் இங்கு கடை பரப்பி அரசாங்கத்திற்கு பெறும் வரிவசூல் வருவாயைக் கொடுக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு கூட்டம் கடுமையாக எதிர்க்கும் ஒரு விஷயத்தை, ஜஸ்ட் லைக் தட் ஒரு முதல்வர் அழுத்தம் திருத்தமாக ஆதரிக்கிறார்... அதைத் தட்டிக் கேட்க வேண்டிய எதிர்க் கட்சிகளும் அமைதி காக்கின்றன!  

இதற்கெல்லாம் காரணம் என்ன? இந்த நடுத்தர வர்க்கத்தினர் அரசின் இலவசங்களை விமர்சிப்பதின் காரணம் என்ன என்பதை அடுத்தடுத்து விரிவாக அலசி ஆரய்வோம். அதற்கு முன் அரசாங்கத்தால் தவிர்க்க இயலாத நிலையிலிருக்கும் ஒரு பிரிவினரின் கருத்துக்களுக்கு  கொஞ்சமும் மதிப்பளிக்காத வகையில் ஆளும் கட்சியும், ஆளத்துடிக்கும் கட்சிகளும் நடந்து கொள்வதைப் பார்த்தால், நடப்பு அரசியலில் ஆள்வோரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நடுத்தர வர்க்கத்தினரின் தேவை என்பது அரசியல் வாதிகளைப் பொருத்தவரைக்கும் அவசியமில்லாததாக தோன்றுகிறதோ என்னும் ஐயம் ஏற்படுகிறது!!

நாட்டின் ஒரு பிரிவினரையே எதிர்த்துக் கொண்டு அரசியல்வாதிகள், மக்கள் நலத்திட்டம் என்ற பெயரில் இலவசங்களை அள்ளி விடுவது ஏன்? அதை நாம் சற்று விரிவாகவே அலசுவோம்.

நடைமுறையில் மாநில அரசு தனியாகவோ அல்லது மத்திய அரசின் நிதி உதவியோடோ செயல் படுத்திக் கொண்டிருக்கும் இலவசத் திட்டங்களின் பட்டியலை முதலில் பார்ப்போம்:

1. ஒரு கிலோ ஒரு ரூபாய் விலையில் ஒரு ரேஷன் கார்டுக்கு (கிராமப் பகுதிகளில் பல குடும்பங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகள் வைத்திருக்கின்றன!) மாதம் 20 கிலோ அரிசி.
2. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டி. (இதில் 70 க்கும் அதிகமான சதவிகித கார்டுதாரர்கள் ஏற்கனவே டீ.வி வைத்திருந்தும் இதை வாங்கியிருக்கிறார்கள். அதில் பலர் ஒன்றுக்கு மேல் உள்ள டீ.வி யை ரூ. 500/= முதல் ரூ. 1000/= விலை வைத்து விற்றிருக்கிறார்கள்)
3. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப ரேஷன் கார்டுகள் அனைத்திற்கும் இலவச காஸ் அடுப்பு, இலவச காஸ் கனெக்ஷனுடன். ( இதில் 'வறுமைக் கோடு' என்பது முக்கியமான பதம். நம் நடுத்தர வர்க்கம் தங்கள் உண்மையான வருமானத்தை காட்டி விடுவதால், அரசு அறிவிப்புகளில் 'வறுமைக்கோடு' என்று வந்தாலே அவர்களுக்கு பட்டை நாமம் தான்!)
4. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள கார்டுதாரர்களின் பெண் குழந்தைகளின் திருமணத்திற்கு ரூபாய் 20,000/= முற்றிலும் இலவசம்.
5. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள கார்டுதாரர்களுக்கு இரண்டு பெண் குழந்தகள் பிறந்தால், அந்தப் பெண்களின் 20 வது வயதில் கல்யாண செலவுக்காக ரூபாய் ஒரு லட்சம் வருவது போல வைப்புத் தொகை பத்திரம் முற்றிலும் இலவசமாக அரசாங்கம் கொடுக்கிறது.
6. கர்ப்பிணிப் பெண்களுக்கு, ஏழாம் மாதம் முதல் பிள்ளை பிறந்து மூன்றாம் மாதம் வரையிலும் மாதம் ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6000/= முற்றிலும் இலவசம்.
7. அடுத்து "வாழ்ந்து காட்டுவோம் திட்டம்". இதில் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் வருடத்திற்கு குறைந்தது மூன்று லட்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது இந்த உதவித் தொகை. இதில் அந்த பயனாளிகலான பெண்களுக்கு மூன்று நாட்கள் அந்த ஊரில் ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்து திட்டம் பற்றி மூன்று நாட்களும் நல் விருந்துடன் கூடிய பயிற்சி அளிக்கப் படுகிறது. சில சமயங்களில் வேன் வாடகைக்கு எடுத்துக் கொண்டு சுற்றுலா தலங்களுக்கும்(ஊட்டி, கொடைக்கானல் உட்பட) சென்று பயிற்சி பெறுகிறார்கள்! மீதமிருக்கும் தொகையில் அந்தந்த பஞ்சாயத்தில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மேற்படிப்பு செலவு, வேலைவாய்ப்பு பயிற்சிகள், இலவச தையல் மெஷின்கள்... இன்ன பிற இத்தியாதிகள் வழங்கப்படுகின்றன.
8. அடுத்ததாக "மகளிர் சுய உதவிக் குழுக்கள்". ஒவ்வொரு கிராமத்திலும் தலா இருபது உறுப்பினர்களைக் கொண்ட குறைந்த பட்சம் பத்து குழுக்களாவது இருக்கும். அதில் ஒவ்வொரு நபருக்கும் பத்தாயிரம் ரூபாயில் ஆரம்பித்து அவர்கள் கட்டும் நேர்மைக்கேற்ப ஐம்பதாயிரம் ரூபாய் வரை மானியத்துடன் கூடிய கடன் கிடைக்கிறது. அந்தப் பணத்தில் அவர்கள் சுய தொழில் தான் செய்ய வேண்டும். ஆனால் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் சொந்த செலவுகளுக்கோ அல்லது வட்டிக்கு விட்டு சம்பாதிக்கவோ தான் பயன் படுத்துகிறார்கள்.
9.கலைஞர் காப்பீட்டுத் திட்டம். இதைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.
10. 108 ஆம்புலன்ஸ் திட்டம். குழாயடி சண்டையில் ஏற்படும் காயங்களுக்கு மருத்துவம் பார்க்கக்கூட இத்திட்டம் பயனுள்ளதாய் இருக்கிறது.
11. அரசு, உள்ளாட்சி, அரசு மானிய்ம் பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும், 11 ஆம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவச சைக்கிள்.
12. அதே தகுதியில் உள்ள அனைத்து வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச பஸ் பாஸ்.
13. வாரம் இரண்டு முட்டையுடன் கூடிய இலவச சத்துணவு.
14. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் ஊட்டச்சத்து உருண்டைகள்.
15. கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச வளைகாப்பு திட்டம்.
16. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம் மற்றும் சீறுடைகள்.
17. அனைவருக்குமே நன்கு பரிச்சயமான "கலைஞர் காங்கிரீட் வீடு திட்டம்".
18. கூறை வீடுகளுக்கு இலவச மின்சாரத்துடன் கூடிய ஒத்தை லைட் திட்டம்.
19. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் இலவச மின் மோட்டார்.
20. இது எல்லாவற்றுக்கும் மேலாக "நூறு நாள் வேலை திட்டம்". (11.00 மணிக்குப் போய் 2.00 மணிக்கெல்லாம் வீடு திரும்பி விடுவார்கள்)
21. ஆதரவற்ற முதியவர்களுக்கு மாதம் ரூ. 500/- பென்ஷன்.
21. அவர்களுக்கு வாரம் 5 கிலோ இலவச அரிசி
22. விதவைப் பெண்கள் பென்ஷன் மாதம் ரூ. 400/- மற்றும் 5 கிலோ இலவச அரிசி.
23. திருமணமாகத பெண்களுக்கான "முதிர் கன்னி உதவித் திட்டம்.
24.வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் நிலமற்றவர்களுக்கு மாதம் 35 கிலோ ஒரு ரூபாய் அரிசி.

மன்னிக்கவும் வாசகர்களே, இந்தப் பட்டியல் இதனுடன் முடியவில்லை. இன்னும் நீண்டு கொண்டே செல்லும். இதைத் தவிர்த்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மட்டுமேயான நலத்திட்டங்கள் தனி! இக் கட்டுரையின் வாசகர்களுக்கான, மேற்கொண்டு படிக்கும் பொழுது புரிதலுக்கான அவசியம் கருதியே இவற்றைப் பட்டியலிட்டுள்ளேன். இதுவே முழுமை பெறாத பட்டியல் தான்!

ஒரு குவளை தண்ணீர் குடித்து விட்டு, மீண்டுமொருமுறை இக்கட்டுரையை ஆரம்பத்திலிருந்து படித்து வாருங்கள், நாம் எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரியும். இத் திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு தேவையா, இல்லையா? மக்களுக்கு சரியாக சென்றடைகிறதா, இல்லையா? இதன் பயனாளிகள் எந்த அளவிற்கு மனசாட்சியுனும், நேர்மையுடனும் இதை தனதாக்கிக் கொள்வதில் நடந்து கொள்கிறார்கள்?

இதனால் அப்பாவி நடுத்தர வர்க்கத்தினர் அடைந்த பயன் என்ன - கொடுத்த விலை என்ன? அரசியல்வாதிகள் இந்தப் போக்கை ஊக்கப் படுத்துவது நல்லதா, கெட்டதா?. இதில் ஒரு சாராருக்கு பலன்/லாபம் என்றால், இன்னொரு சாராருக்கு கண்டிப்பாக தீமை/நஷ்டம் தானே? நஷ்டம் என்றால் எந்தெந்த விதத்தில்? இதற்கான தீர்வு தான் என்ன?

இதையெல்லாம் விரிவாக அடுத்தடுத்த பாகங்களில் அலசுவோம்.

திஸ்கி: தேர்தல் நெருங்கும் சமயத்திலாவது, ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கையை தயார் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலாவது இப்பிரச்சினையைப் பற்றி முழுமையான புரிதலுடன் நாம் விவாதம் நடத்தாவிட்டால், மற்ற நேரத்தில் பேசி என்ன பயன்?

   

No comments: