Friday, July 15, 2011

தி.மு.க. வை கரை சேர்க்குமா - இலவச திட்டங்கள்? (நிறைவுப் பகுதி)

2011 ஆம் வருடம், பிப்ரவரி 17  ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!


தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளால் நிறைவேற்றப்படும் இலவசத் திட்டங்களைப் பற்றித் தொடர் அலசலை இரண்டு பாகங்களாக, கீழ்கண்ட தலைப்புகளில் பதிவிட்டேன்.

1. இலவசங்கள் இருக்கும் வரை ஏழைகளும் இருப்பார்களா? [பாகம் 1],  2. இலவச திட்டங்கள் ஒரு பார்வை (பாகம் 2).

இதன் தொடர்ச்சியான மூன்றாம் பாகத்தை இப்பொழுது படிக்கும் முன், முனிரண்டு பாகங்களையும் படிக்காதவர்கள், அவற்றையும் படித்துவிட்டு வந்தால் வசதியாக இருக்கும்.முதல் பாகத்தில் சில சந்தேகங்கள்/கேள்விகளை எழுப்பி, அதற்கு விடை காணும் நோக்கில் இந்த அலசலை கொண்டு செல்லலாம் என்று திட்டம். அதில் பாதி கேள்விகள் அல்லது சந்தேகங்களைப் பற்றி இரண்டாம் பாகத்தில் பார்த்தோம். மீதமிருப்பதை இங்கு விவாதிப்போம்.

இந்த இலவச/மக்கள் நலத்திட்டங்களால், அப்பாவி நடுத்தர வர்க்கத்தினர் அடைந்த பயன் என்ன? - கொடுத்த விலை என்ன? இதில் ஒரு சாராருக்கு பலன்/லாபம் என்றால், இன்னொரு சாராருக்கு கண்டிப்பாக தீமை/நஷ்டம் தானே? நஷ்டம் என்றால் எந்தெந்த விதத்தில்? இது தான் நமது அடுத்த கேள்வி.

இந்த கேள்விக்கு 2008 பாராளுமன்ற தேர்தலில் நமது அரசியல்வாதிகள் நிகழ்த்திக் காட்டிய ஒரு சம்பவத்தைச் சொன்னாலே போதும், விடை தானாக கிடைத்துவிடும்! அந்த தேர்தல் பிரச்சாரங்களில், 'நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 80 ரூபாயாக இருக்கும் நூறு நாள் வேலை திட்ட சம்பளத்தை 100 ரூபாயாக உயர்த்துவோம்' என்று ஆளுங்கட்சியினர் உறுதியளித்திருந்தனர்.

அதேப்போல் ஆட்சிக்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே அத்திட்டத்தின் சம்பளத்தை 100 ரூபாயாக உயர்த்தியும் அறிவித்து விட்டார்கள். ஆனால் அதே நாளில் வந்த மற்றொரு அரசு அறிவிப்பு தான் நடுத்தர வர்க்கத்தினரின் வயிற்றில் புளியைக் கரைப்பதாக அமைந்தது. அதாவது 'இனி பெட்ரோல், சமையல் எரிவாயு விலைகள் சர்வதேச கச்சா எண்ணை விலை ஏற்றத்திற்கு தகுந்தாற்போல மாதம் இருமுறை மாற்றி அமைக்கப்படும்' என்பது தான் அந்த அறிவிப்பு.

அதிலிருந்து இன்றுவரை, அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 65 சதவிகிதத்திற்கும் அதிகமான விலையேற்றத்தை, தனது அன்றாட வாழ்வில தவறாமல் தினமும் பெட்ரோலை உபயோகப்படுத்தும் நடுத்தரப் பிரிவைச் சார்ந்த ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தான் பெறுமளவில் சுமந்து கொண்டிருக்கிறான். "இவர்களின் 65 சதவிகித சுமை அவர்களின் 20 ரூபாய் ஊதிய உயர்வாக.. இந்த ஆட்சியாளர்களின் சாதனையாக பரைசாற்றிக் கொள்ளப்படுகிறது" இதையே நடுத்தர வர்கத்தினரின் வாய்ஸாக சொல்ல வேண்டுமானால் "We are tax payer, they are benefit enjoyers" என்று தான் கூறவேண்டும்!!!

இதுவும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில் தான் வருகிறது. அரசு அலுவலகங்கள், நீதிமன்ற வளாகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிக்கூடங்கள், சாலைகள், மேம்பாலங்கள், மின்சார உற்பத்தி திட்டங்கள், கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்கள், ...இப்படியாக இன்னபிற அனைத்து அரசு சம்பந்தப்பட்ட, ஒரு அரசாங்கம் என்பது செய்யவேண்டிய அனைத்து மக்களுக்கும் தேவையான அடிப்படை விஷயங்கள் முழுவதுமே, இன்றைய நிலையில் துறுப்பிடித்து, அவலமான நிலையில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

பணக்காரர்களாகவும் இல்லாத, அதேசமயம் தகுதியற்றவைகளை சமாதானம் செய்து கொண்டு வாழ இயலாத..., அரசாங்கம் போடும் அனைத்து வரிகளையும் க்யூவில் நின்று கட்டும் அப்பாவி நடுத்தர மக்கள், அரசாங்கத்திடம் இலவசத் திட்டங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. மாறாக மேற்கூறிய அவசியத் தேவைகள் அல்லது அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை, தாங்களும் நிறைவாக அனுபவிக்க வேண்டுமென்று நினைப்பதில் என்ன தவறிருக்கிறது?

இந்த விஷயத்தில் நம்முடைய இன்னுமொரு கேள்வி, அரசியல்வாதிகள் இந்தப் போக்கை ஊக்கப்படுத்துவது நல்லதா? கெட்டதா? என்பதுதான்.

கண்டிப்பாக இது தவறான போக்குதான் என்பது என் அபிப்பிராயம். சமூகத்தில் அடிமட்டத்தில் இருக்கும் ஒரு சாராரை கைதூக்கி விடுவதில் எந்த சிறு தவறும் இல்லை. அதற்காக தன் கையிலுள்ள கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், குறிப்பிட்ட காலத்திற்கு அம்மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதைக் கூட தவறு என்று சொல்லமுடியாது. ஆனால் ஓட்டரசியலுக்காக இதுவும் காலம் கடந்தும் கொடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கூட இன்னொரு சாரார் ஜீரணிக்கப் பழகிக் கொண்டுவிட்டனர்.

ஆனால் அதன் தொடர்ச்சியான, பரவாயில்லை, கொடுக்கலாமே என்று நினைத்த இலவசத் திட்டங்களில் ஆரம்பித்து, அதன் பரிணாம வளர்ச்சியாக இலவச டீ.வி, ஒரு ரூபாய் அரிசி வரை வந்துவிட்ட நிலையில்... இனி அடுத்தடுத்து அறிவிக்கப் படவிருக்கும் இலவசத் திட்டங்கள் அனைத்திற்குமே.. இன்னொரு சாரார் முட்டி தேய, முதுகு கூன்விழும் அளவிற்கு உழைக்கும் ஒரு நவீன அடிமைத்தனமான போராட்ட வாழ்வை எதிர்காலத்தில் தவிர்க்க முடியாததாகிவிடும் ஆபத்திருக்கிறது.

ஆண்டு வரவு-செலவு திட்டத்தில், மிச்சமிருக்கும்(!) பணத்தில் வேண்டுமானால் அரசாங்கம் இந்த இலவச திட்டங்களை செயல்படுத்தலாம். அதை விடுத்து அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை, இந்த மாதிரியான இலவசத் திட்டங்களுக்கு செலவிட்டால், ஒரு "சமச்சீரற்ற சமூக அமைப்பு" (Social imbalance) நாட்டில் உருவாகிவிடும் அபாயம் இருக்கிறது! இது மதத்தீவிரவாதம், வெளிநாட்டுத் தீவிரவாதம் இவற்றையெல்லாம் விட மிகவும் ஆபத்தானது. இதை உடனடியாக அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் உணரவேண்டிய தருணம் வந்துவிட்டது.

ஒரு உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், நமது சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களுமே, சாலை வரிகளை கட்டிவிட்டுத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறு சாலைகளில் தற்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் டாடா வின் 'சின்ன யானை' என்ற வாகனத்திற்காக, அதன் உரிமையாளர்கள் செலுத்திய ஆயுள் சாலைவரியை மட்டுமே வைத்துக் கொண்டு, சராசரியாக 4000 கி.மீ. சாலைகளை தமிழ் நாட்டில் பக்காவாக போட்டிருக்கலாம். சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் மற்ற வகை வாகனங்கள் கட்டியிருக்கும் வரியினைக்கொண்டு, அந்த நாலாயிரம் கிலோ மீட்டருக்கும், மேலே கூறையே போட்டிருக்கலாம் போலிருக்கிறது!!!

இந்தப் பணமெல்லாம் எங்கே போனது என்று ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து மக்கள் கேட்க ஆரம்பித்தால்...?, மகாத்மா காந்தியைப் போல் வரிகொடா இயக்கம் ஆரம்பித்தால்...? அரசாங்கத்தின் நிலை என்ன???!!

இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன?

இந்த இலவச திட்டங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய அளவுக்கதிகமான விற்பனை வரி, (அதிலும் கடைசி உபயோகிப்பாளர் வரை), சேவை வரி, வருமான வரி, மத்திய அரசு வரி, மாநில அரசு வரி, சுங்க வரி, கலால் வரி,.... இப்படி நடுத்தர வர்கத்தினரின் முதுகில் வரிவரியாக கோடு போட்டுக் கொண்டே சென்றால், "எங்கே சுற்றினாலும் ரங்கனைத் தான் சேவிக்க வேண்டும்" என்பது போல், கடைசியாக தாங்கமுடியாத அளவிற்கான விலைவாசி ஏற்றத்தில் தான் கொண்டுவிடும் என்பதை அனைத்து ஆட்சியாளர்களும், ஆளத்துடிப்பவர்களும் உணர வேண்டும். அடுத்து, மாவட்டவாரியாக நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கும் சிறிய, நடுத்தர, மற்றும் பெரிய உற்பத்தி தொழில் திட்டங்களை உருவாக்கி, மக்கள் தங்கள் தேவையை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் வேளாண்மை மற்றும் பண்ணைத் தொழிலுக்கு வாய்ப்பிருக்கும் பகுதிகளில், முற்றிலும் நவீன முறைகளை அரசாங்கம் பயிற்றுவித்து, அதற்கு தேவையான அனைத்தும், விதை முதற்கொண்டு, உபகரணங்கள் வரை அனைத்தையுமே ஒரு பொதுநல அமைப்பை ஏற்படுத்தி, முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்து, விளை பொருட்களை அரசாங்கமே, விவசாயிகளுக்கான உடல் உழைப்பிற்கான சம்பளம், விளை நிலத்திற்கான வாடகை, அதற்கு மேல் ஒரு நல்ல லாபம் என்று சேர்த்து விலையாக நிர்ணயம் செய்து வாங்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் இலவசம் என்பது, விவசாயத்திற்கு மட்டுமே, அதுவும் இதேப் போன்று நெறிப்படுத்தப்பட்ட வகையில் மட்டுமே என்று இருக்க வேண்டும். இவ்வாறு செய்வது இலவசமாக இருக்காது. மாறாக அதுவே லாபமாகவும், இன்னும் சொல்லப்போனால் இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய காரணியாகவும் கண்டிப்பாக அமையும்.

இதெல்லாம் நடக்குமா? சாத்தியமா? அரசியல் சாக்கடையாகி விட்டதே? என்றெல்லாம் 'என்னத்த கண்ணையா' போல அங்கலாய்த்துக் கொண்டிருக்காமல், இதையெல்லாம் செயலாக்க என்னென்ன செய்யலாம் என்பதை... இன்னும் பலர் கூடி விவாதிக்கலாமே?!

தி.மு.க. கரையேறுமா? என்று தலைப்பில் கேட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமல் போனால் இது நிறைவடையாது. நான் இருக்கும் நாகை மாவட்டத்தில் சுமார் 27 கிராமங்களைச் சேர்ந்த 212 கூலி வேலைக்குச் செல்லும் பெண்களிடம் பேசிய பொழுது தெரிந்து கொண்டது இது தான். "இலவசங்கள் எல்லாம் சரிதான், இனிமே யார் வந்தாலும் அத கொடுத்துதான் ஆகணும், அதனால் அது ஒரு மேட்டர் இல்லை. ஆனால் கலைஞர் விலைவாசியை கண்ணாபின்னான்னு ஏத்திட்டார், அம்மாதான் அதிகாரிகளை அடித்து உதைத்து விலையை குறைப்பார்" என்று ஒரு பகீர் கருத்தை கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர் சொல்கிறார்கள்.

ஆகவே, அவர்களிடம் பேசிய வகையில் எனது புரிதலின் படி கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணத்தை வைத்துக் கொண்டு தி.மு.க. கரையேறினால் தான் உண்டு!

Thursday, July 14, 2011

இலவச திட்டங்கள் ஒரு ஆய்வு (பாகம் 2)

2011 ஆம் வருடம், பிப்ரவரி 15 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!


சென்ற வாரம் "இலவசங்கள் இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்களா?" என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் தான் இந்த பதிவு. அதை படிக்காதவர்கள் இங்கு சென்று அதைப் படித்து விட்டு இக் கட்டுரையை வாசிக்கத் தொடங்கவும்.

முதல் பாகத்தை பல சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பி, அதற்கு விடை காணும் முயற்சியாக அடுத்தடுத்த பாகங்கள் அமையும் என்று முடித்திருந்தேன். அது ஒவ்வொன்றாக இப்பொழுது பார்க்கலாம்.

முதல் மற்றும் முக்கியமான கேள்வியே, இந்த இலவச திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு தேவையா? இல்லையா?

கண்டிப்பாக தேவையில்லை என்பது தான் எனது வாதம். எனக்குத் தெரிந்து முதல் இலவசத் திட்டம் என்றால், காமராஜர் காலத்தில் அவரால் கொண்டுவரப்பட்ட இலவச மதிய உணவு திட்டம் தான். அது ஏழை சிறுவர்களுக்கு ஒரு வேளை பசிப் பிணியை களைவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டமன்று. ஏழைச் சிறுவர்கள் கல்வியறிவு பெற்று முன்னேற, அவர்கள் கல்விச் சாலைகளுக்கு செல்வதற்கு தடையாக இருந்த பசி என்ற தடைக் கல்லை தகர்த்தெறிய கொண்டுவரப்பட்ட திட்டம் அது!

அதாவது கல்வி அறிவில்லாத, சாதி, மதங்களைக் கடந்த ஒரு மிகப் பெரிய சமுதாயம் கரை சேருவதற்கு மிகப்பெரிய கப்பலோ, உல்லாசப் படகோ தேவையில்லை, ஒரு மரக்கட்டையே போதுமானது என்பதை உணர்ந்து கொண்டுவரப்பட்ட திட்டம் தான் அது.

ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் ஓட்டரசியலுக்காக அந்த திட்டம் பல பரிமாணங்களைக் கடந்து இன்று தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான சத்துணவு அமைப்பாளர்கள் 'வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தவர்கள்' பட்டியலில் வழக்குத் தொடுக்க தகுதி வாய்ந்தவர்களாக மாறியிருப்பது தான் இந்த திட்டத்தின் பலன்!

இன்றைய தேதியில் இந்த சத்துணவு திட்டத்தை நிறுத்தினால், கல்விச் சாலைகளுக்கு வரும் ஏழை மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து விடுமா என்பதை ஒரு ஐந்து ஆண்டுகள் இத் திட்டத்தை நிறுத்தி வைத்து பரீட்சித்துப் பார்த்தால் என்ன? அதனால் மிச்சமாகும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தைக் கொண்டு, அனைத்து அரசுப் பள்ளிகளையும் அல்ட்ரா மாடர்ன் (ஹை..! ரைமிங்கா வருதுல்ல?) பள்ளிகளாக தரம் உயர்த்தி விடலாமே?! நல்ல சூழலுடன் கூடிய அழகிய கல்விக் கூடங்கள் என்றால், எந்த குழந்தை தான் பள்ளிச் செல்ல தயங்கும்?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் முதல் பாகத்தில் பட்டியலிட்ட அனைத்து இலவச திட்டங்களையும் இதேப் போன்ற நிலைகளில் பொருத்திப் பார்த்து, நல்லதொரு தீர்வினைக் கண்டுவிடலாமே? இதை அப்படியே பிடித்துக் கொண்டு தொடர்ந்து சென்றால் கடைசியில் டாஸ்மாக் வருமானம் தமிழகத்துக்கு தேவையில்லை என்ற நிலைமை வந்துவிடும்!

நாம் நமது அடுத்த கேள்வியான, இந்த இலவச திட்டங்கள் மக்களை முழுமையாகவும், சரியாகவும், சரியானவர்களுக்கும் சென்றடைகிறதா? என்பதைப் பார்ப்போம்.

மத்திய அரசின் 'ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்" என்ற ஒரு திட்டம். 'நூறு நாள் வேலை' திட்டம்னு கிராமத்து மக்கள்ட்ட ரொம்ப பிரபலம். இந்தியாவில் வேலை வாய்ப்பிற்கே வழியின்றி, வருமானம் இல்லாமல், உணவுக்கே பிறரிடம் கையேந்தும் நிலையிலுள்ள மக்கள் வாழும் பகுதிகளில் அரசாங்கமே, வேலை வாய்ப்பினை (ஏரி, குளம் தூர் வாருதல், வாய்க்கால் வெட்டுதல்,... இப்படியாக) அம்மக்களுக்காக உருவாக்கி  வருடத்திற்கு குறைந்த பட்சம் நூறு நாட்களாவது அம்மக்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதி செய்து, தினம் ரூ. 100/= கூலி தருகிறார்கள் (ரூ. 80/= என்றிருந்தது, நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் நூறு ரூபாயாக உயர்த்தப் பட்டுவிட்டது).

முதலில் இத்திட்டம் முழுமையாக பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்றால், கண்டிப்பாக இல்லை என்பது தான் எனது பதில். இதில் நேரடியான கொள்ளை என்றால் பயனாளிகளுக்கு ரூபாய் அறுபது முதல் ரூபாய் 80 வரை தான் கொடுக்கப் படுகிறது. இதனால் இத் திட்டம் ஆரம்பித்து விட்டாலே எங்கு பார்த்தாலும் சாலை மறியல் தான்! இதில் மறைமுக கொள்ளை என்றால் ஒரு பஞ்சாயத்தில் 70 நபர்கள் இந்த வேளைக்கு வருகிறார்கள் என்றால், இருபது, முப்பது பேரை அதிகப்படுத்தி பில் பண்ணிவிடுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆக இத்திட்டம் முழுமையாக மக்களுக்குச் சென்று பலனளிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

அடுத்ததாக, இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் விதத்தில், இதன் பலன்கள் சரியானவர்களுக்கு, சரியாகச் சென்றடைகிறதா? என்றால் அதற்கும் 'நோ' தான் பதில். வேலை வாய்ப்பு அறவே இல்லாத பகுதிக்கான திட்டமாக அறிவிக்கப் பட்ட இத்திட்டத்தை, நடவு காலத்திலும், அறுவடை காலத்திலும் செயல் படுத்த வேண்டாம் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் அளவிற்கு இருக்கிறதென்றால், இத் திட்டம் சரியானவர்களுக்குப் போய்ச் சேருகிறதா இல்லையா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன். மற்ற இலவச/மக்கள் நலத் திட்டங்கள் அனைத்துமே, கிட்டத்தட்ட இதே நிலையில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை இதற்கு மேலும் விளக்கத் தேவையில்லை என்று தான் நினைக்கிறேன்.

அடுத்ததாக நாம் அலசப் போவது, இந்த இலவச திட்டங்களை தனதாக்கிக் கொள்வதில் மக்கள் எந்த அளவிற்கு, நேர்மையுடனும், மனசாட்சிப்படியும் நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்விக்கான பதிலைப் பற்றித்தான்.

இதற்கும் மேற்கூறிய திட்டத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். மக்கள் தங்கள் பகுதியிலேயே வேலை வாய்ப்பு இருக்கும் பொழுது, மேலும் இத்திட்டதில் கிடைக்கும் ஊதியத்தை விட கூடுதலாக ஊதியம் கிடைக்கும் வேலையை நிராகரித்து விட்டு இந்த நூறு நாள் வேலைக்குச் செல்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?  வெறும் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் 20 சதவிகித உடல் உழைப்பிலேயே ஒரு கூலி கிடைக்கும் போது, அதிக கூலி கிடைத்தாலும் முழுநேரமும் (8 மணி நேரம்) உழைக்கும் வேலைக்குச் செல்ல மக்கள் தயாராயில்லை என்பதையே காட்டுகிறது.

இலவச ஒத்தை லைட் திட்டத்தில், தன் வீட்டிற்கு பக்கத்திலேயே ஒரு சிறு ஆட்டுக் கொட்டகை அமைத்து,  அதற்கு இலவச மின்சாரம் பெற்று, தங்கள் வீட்டிற்கு கனெக்ஷன் (டீ.வி, லைட், ஃபேன், கிரைண்டர்...) எடுத்துக் கொள்ளும் பயனாளிகள் இல்லவே இல்லை என்று மின்வாரிய அதிகாரிகளையோ, பொதுமக்களையோ நெஞ்சில் கைவைத்துச் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்?!

இவை எல்லாமே சிறு உதாரணங்கள் தான். அனைத்து இலவசத் திட்டங்களுக்குமே, இவற்றை எல்லாம் பட்டியலிட்டு விளக்கினால்... மிகுந்த ஆயாசமாகிவிடும். ஒருவித விரக்தி நிலைக்கு இதைப் படிப்பவர்கள் தள்ளப்பட்டு விடுவார்கள். அதனால் தான் ஒவ்வொரு கேள்விக்கான விளக்கத்திற்கும் ஓரிரு உதாரணங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஆகவே சென்ற பாகத்தில் எழுப்பப்பட்ட மீதமிருக்கும் சந்தேகங்கள் அல்லது கீழ்கண்ட கேள்விகளுக்கான விடைகளை அடுத்தடுத்த பாகங்களில் இன்னும் விரிவாக அலசி ஆராய்வேம்.

//இதனால் அப்பாவி நடுத்தர வர்க்கத்தினர் அடைந்த பயன் என்ன - கொடுத்த விலை என்ன? அரசியல்வாதிகள் இந்தப் போக்கை ஊக்கப் படுத்துவது நல்லதா, கெட்டதா?. இதில் ஒரு சாராருக்கு பலன்/லாபம் என்றால், இன்னொரு சாராருக்கு கண்டிப்பாக தீமை/நஷ்டம் தானே? நஷ்டம் என்றால் எந்தெந்த விதத்தில்? இதற்கான தீர்வு தான் என்ன?//

நண்பர்களே, நடுத்தர பிரிவைச் சார்ந்த ஒரு சராசரி இந்திய குடிமகனின் பார்வையிலிருந்து, அரசாங்கத்தின் இந்த இலவச திட்டங்கள் பற்றிய எனது கருத்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கு தங்கள் பார்வையில் இருந்து எதிர்மறை கருத்துக்களோ, விளக்கங்களோ, சந்தேகங்களோ..., எதுவாயினும் என் அறிவு நிலையிலிருந்து பதில் கூற முயலுகிறேன். இயலாத பட்சத்தில், தங்கள் கருத்தை எற்றுக்கொள்ளவும் தயங்கமாட்டேன்.

இலவசங்கள் இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்களா?? [பாகம் 1]

2011 ஆம் வருடம், பிப்ரவரி 10  ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!

சில தினங்களுக்கு முன் நமது தமிழக முதல்வர் கருணாநிதி பொதுமக்களுக்கு இலவசங்கள் கொடுப்பது சம்பந்தமாக, சமீப காலத்தில் எழுப்பப்படும் சந்தேகங்கள் அல்லது விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் தனது நிலைப்பாட்டை இவ்வாறு தெளிவு படுத்தியிருந்தார். அவர் சொன்னது இது தான், "ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்!".

மிகவும் ஆணித்தரமாக தனது கருத்தை கூறியிருந்தார் கருணாநிதி. நடுத்தர மற்றும் மேல் நடுத்தர மக்களில் அனேகம் பேர், இரண்டுக்கும் மேற்பட்டோர் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளிலோ, அலுவலகங்களிலோ, பொது இடத்திலோ, ஏன் நம் இணைய தளங்களில் கூட கூடிப் பேச முற்பட்டால், தமிழக அரசு தரும் இலவச திட்டங்களுக்கு எதிரான தங்களது விமர்சனங்களை பதிய வைத்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் இந்த இலவச திட்டங்கள் நல்லதுக்கா என்று கேள்விப் பொருளாக பேசப்பட்டு வந்த இந்த விவாதம், சமீப காலமாக இது முற்றிலும் தவறானது என்ற ரீதியில் தமிழக அரசுக்கும் கருணாநிதிக்கும் எதிரான கடும் விமர்சனங்களை வைக்கும் அளவிற்கு வலுவடைந்திருக்கிறது.

இவர்கள் இப்படிப் பேசும் அளவிற்கு அந்த இலவச திட்டங்களால் ஏதேனும் பாதிக்கப் பட்டிருக்கிறார்களா? அதேசமயம் இவர்களின் இந்த விமர்சனங்களுக்கு முற்றிலும் எதிரான தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்கு, அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் கருணாநிதிக்கு எப்படி துணிச்சல் வந்தது? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியில் சர்க்கரை குறைவாக இருந்தால் கூட கருணாநிதியை கண்டித்து அறிக்கை விடும் ஜெயலலிதா உட்பட எந்த எதிர்க்கட்சி தலைவர்களும், கருணாநிதியின் இந்த அறிவிப்புக்கு  'செலக்டிவ் அம்னீஷியா' வந்தவர்கள் போல் செயல்படுவதற்கும் என்ன காரணங்கள் என்பது தான் புதிராக இருக்கிறது.

நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வ்ர்க்கம் என்பது (இனி நடுத்தர வர்க்கம் என்றே அழைக்கலாம்) இன்றுள்ள இந்திய சமூக அமைப்பில் தவிர்கப்பட முடியாத ஒரு பெறும் கூட்டம். இவர்களைத் தவிர்த்து விட்டு எந்த அரசாங்கமும் மக்கள் நலத்திட்டங்கள் எதையும் சாத்தியப்படுத்திவிட முடியாது. இவர்கள் தான் இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேர். இவர்கள் தான் தாங்கள் சம்பாதிக்கும் கடைசி ரூபாய் வரைக்கும் ஏமாற்றாமல் வரிகட்டுகிறவர்கள், மனிதவளம் மூலம் மிகப்பெறும் அன்னியச் செலாவணி வரத்திற்கு வழி செய்பவர்கள். இவர்கள் மூளையையும் உழைப்பையும் நம்பித்தான் பெறுவாரியான சர்வதேச நிறுவனங்கள் இங்கு கடை பரப்பி அரசாங்கத்திற்கு பெறும் வரிவசூல் வருவாயைக் கொடுக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு கூட்டம் கடுமையாக எதிர்க்கும் ஒரு விஷயத்தை, ஜஸ்ட் லைக் தட் ஒரு முதல்வர் அழுத்தம் திருத்தமாக ஆதரிக்கிறார்... அதைத் தட்டிக் கேட்க வேண்டிய எதிர்க் கட்சிகளும் அமைதி காக்கின்றன!  

இதற்கெல்லாம் காரணம் என்ன? இந்த நடுத்தர வர்க்கத்தினர் அரசின் இலவசங்களை விமர்சிப்பதின் காரணம் என்ன என்பதை அடுத்தடுத்து விரிவாக அலசி ஆரய்வோம். அதற்கு முன் அரசாங்கத்தால் தவிர்க்க இயலாத நிலையிலிருக்கும் ஒரு பிரிவினரின் கருத்துக்களுக்கு  கொஞ்சமும் மதிப்பளிக்காத வகையில் ஆளும் கட்சியும், ஆளத்துடிக்கும் கட்சிகளும் நடந்து கொள்வதைப் பார்த்தால், நடப்பு அரசியலில் ஆள்வோரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நடுத்தர வர்க்கத்தினரின் தேவை என்பது அரசியல் வாதிகளைப் பொருத்தவரைக்கும் அவசியமில்லாததாக தோன்றுகிறதோ என்னும் ஐயம் ஏற்படுகிறது!!

நாட்டின் ஒரு பிரிவினரையே எதிர்த்துக் கொண்டு அரசியல்வாதிகள், மக்கள் நலத்திட்டம் என்ற பெயரில் இலவசங்களை அள்ளி விடுவது ஏன்? அதை நாம் சற்று விரிவாகவே அலசுவோம்.

நடைமுறையில் மாநில அரசு தனியாகவோ அல்லது மத்திய அரசின் நிதி உதவியோடோ செயல் படுத்திக் கொண்டிருக்கும் இலவசத் திட்டங்களின் பட்டியலை முதலில் பார்ப்போம்:

1. ஒரு கிலோ ஒரு ரூபாய் விலையில் ஒரு ரேஷன் கார்டுக்கு (கிராமப் பகுதிகளில் பல குடும்பங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகள் வைத்திருக்கின்றன!) மாதம் 20 கிலோ அரிசி.
2. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டி. (இதில் 70 க்கும் அதிகமான சதவிகித கார்டுதாரர்கள் ஏற்கனவே டீ.வி வைத்திருந்தும் இதை வாங்கியிருக்கிறார்கள். அதில் பலர் ஒன்றுக்கு மேல் உள்ள டீ.வி யை ரூ. 500/= முதல் ரூ. 1000/= விலை வைத்து விற்றிருக்கிறார்கள்)
3. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப ரேஷன் கார்டுகள் அனைத்திற்கும் இலவச காஸ் அடுப்பு, இலவச காஸ் கனெக்ஷனுடன். ( இதில் 'வறுமைக் கோடு' என்பது முக்கியமான பதம். நம் நடுத்தர வர்க்கம் தங்கள் உண்மையான வருமானத்தை காட்டி விடுவதால், அரசு அறிவிப்புகளில் 'வறுமைக்கோடு' என்று வந்தாலே அவர்களுக்கு பட்டை நாமம் தான்!)
4. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள கார்டுதாரர்களின் பெண் குழந்தைகளின் திருமணத்திற்கு ரூபாய் 20,000/= முற்றிலும் இலவசம்.
5. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள கார்டுதாரர்களுக்கு இரண்டு பெண் குழந்தகள் பிறந்தால், அந்தப் பெண்களின் 20 வது வயதில் கல்யாண செலவுக்காக ரூபாய் ஒரு லட்சம் வருவது போல வைப்புத் தொகை பத்திரம் முற்றிலும் இலவசமாக அரசாங்கம் கொடுக்கிறது.
6. கர்ப்பிணிப் பெண்களுக்கு, ஏழாம் மாதம் முதல் பிள்ளை பிறந்து மூன்றாம் மாதம் வரையிலும் மாதம் ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6000/= முற்றிலும் இலவசம்.
7. அடுத்து "வாழ்ந்து காட்டுவோம் திட்டம்". இதில் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் வருடத்திற்கு குறைந்தது மூன்று லட்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது இந்த உதவித் தொகை. இதில் அந்த பயனாளிகலான பெண்களுக்கு மூன்று நாட்கள் அந்த ஊரில் ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்து திட்டம் பற்றி மூன்று நாட்களும் நல் விருந்துடன் கூடிய பயிற்சி அளிக்கப் படுகிறது. சில சமயங்களில் வேன் வாடகைக்கு எடுத்துக் கொண்டு சுற்றுலா தலங்களுக்கும்(ஊட்டி, கொடைக்கானல் உட்பட) சென்று பயிற்சி பெறுகிறார்கள்! மீதமிருக்கும் தொகையில் அந்தந்த பஞ்சாயத்தில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மேற்படிப்பு செலவு, வேலைவாய்ப்பு பயிற்சிகள், இலவச தையல் மெஷின்கள்... இன்ன பிற இத்தியாதிகள் வழங்கப்படுகின்றன.
8. அடுத்ததாக "மகளிர் சுய உதவிக் குழுக்கள்". ஒவ்வொரு கிராமத்திலும் தலா இருபது உறுப்பினர்களைக் கொண்ட குறைந்த பட்சம் பத்து குழுக்களாவது இருக்கும். அதில் ஒவ்வொரு நபருக்கும் பத்தாயிரம் ரூபாயில் ஆரம்பித்து அவர்கள் கட்டும் நேர்மைக்கேற்ப ஐம்பதாயிரம் ரூபாய் வரை மானியத்துடன் கூடிய கடன் கிடைக்கிறது. அந்தப் பணத்தில் அவர்கள் சுய தொழில் தான் செய்ய வேண்டும். ஆனால் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் சொந்த செலவுகளுக்கோ அல்லது வட்டிக்கு விட்டு சம்பாதிக்கவோ தான் பயன் படுத்துகிறார்கள்.
9.கலைஞர் காப்பீட்டுத் திட்டம். இதைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.
10. 108 ஆம்புலன்ஸ் திட்டம். குழாயடி சண்டையில் ஏற்படும் காயங்களுக்கு மருத்துவம் பார்க்கக்கூட இத்திட்டம் பயனுள்ளதாய் இருக்கிறது.
11. அரசு, உள்ளாட்சி, அரசு மானிய்ம் பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும், 11 ஆம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவச சைக்கிள்.
12. அதே தகுதியில் உள்ள அனைத்து வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச பஸ் பாஸ்.
13. வாரம் இரண்டு முட்டையுடன் கூடிய இலவச சத்துணவு.
14. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் ஊட்டச்சத்து உருண்டைகள்.
15. கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச வளைகாப்பு திட்டம்.
16. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம் மற்றும் சீறுடைகள்.
17. அனைவருக்குமே நன்கு பரிச்சயமான "கலைஞர் காங்கிரீட் வீடு திட்டம்".
18. கூறை வீடுகளுக்கு இலவச மின்சாரத்துடன் கூடிய ஒத்தை லைட் திட்டம்.
19. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் இலவச மின் மோட்டார்.
20. இது எல்லாவற்றுக்கும் மேலாக "நூறு நாள் வேலை திட்டம்". (11.00 மணிக்குப் போய் 2.00 மணிக்கெல்லாம் வீடு திரும்பி விடுவார்கள்)
21. ஆதரவற்ற முதியவர்களுக்கு மாதம் ரூ. 500/- பென்ஷன்.
21. அவர்களுக்கு வாரம் 5 கிலோ இலவச அரிசி
22. விதவைப் பெண்கள் பென்ஷன் மாதம் ரூ. 400/- மற்றும் 5 கிலோ இலவச அரிசி.
23. திருமணமாகத பெண்களுக்கான "முதிர் கன்னி உதவித் திட்டம்.
24.வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் நிலமற்றவர்களுக்கு மாதம் 35 கிலோ ஒரு ரூபாய் அரிசி.

மன்னிக்கவும் வாசகர்களே, இந்தப் பட்டியல் இதனுடன் முடியவில்லை. இன்னும் நீண்டு கொண்டே செல்லும். இதைத் தவிர்த்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மட்டுமேயான நலத்திட்டங்கள் தனி! இக் கட்டுரையின் வாசகர்களுக்கான, மேற்கொண்டு படிக்கும் பொழுது புரிதலுக்கான அவசியம் கருதியே இவற்றைப் பட்டியலிட்டுள்ளேன். இதுவே முழுமை பெறாத பட்டியல் தான்!

ஒரு குவளை தண்ணீர் குடித்து விட்டு, மீண்டுமொருமுறை இக்கட்டுரையை ஆரம்பத்திலிருந்து படித்து வாருங்கள், நாம் எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரியும். இத் திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு தேவையா, இல்லையா? மக்களுக்கு சரியாக சென்றடைகிறதா, இல்லையா? இதன் பயனாளிகள் எந்த அளவிற்கு மனசாட்சியுனும், நேர்மையுடனும் இதை தனதாக்கிக் கொள்வதில் நடந்து கொள்கிறார்கள்?

இதனால் அப்பாவி நடுத்தர வர்க்கத்தினர் அடைந்த பயன் என்ன - கொடுத்த விலை என்ன? அரசியல்வாதிகள் இந்தப் போக்கை ஊக்கப் படுத்துவது நல்லதா, கெட்டதா?. இதில் ஒரு சாராருக்கு பலன்/லாபம் என்றால், இன்னொரு சாராருக்கு கண்டிப்பாக தீமை/நஷ்டம் தானே? நஷ்டம் என்றால் எந்தெந்த விதத்தில்? இதற்கான தீர்வு தான் என்ன?

இதையெல்லாம் விரிவாக அடுத்தடுத்த பாகங்களில் அலசுவோம்.

திஸ்கி: தேர்தல் நெருங்கும் சமயத்திலாவது, ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கையை தயார் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலாவது இப்பிரச்சினையைப் பற்றி முழுமையான புரிதலுடன் நாம் விவாதம் நடத்தாவிட்டால், மற்ற நேரத்தில் பேசி என்ன பயன்?

   

அந்த முப்பது எங்கய்யா இருக்கு ராகுலு?

2011 ஆம் வருடம், பிப்ரவரி 8  ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!

ஒரு நாலு நாளா இந்த சந்தேகம் என் மண்டைய போட்டு குடைஞ்சிகிட்டு இருக்கு. கடைசியாக வந்த வாரப் பத்திரிகைகள், இணைய ஊடகங்கள், சில தினசரிகள் கொளுத்திப் போட்ட செய்தி தான் அது.

நம்ம கருணாநிதி டில்லி போனப்ப தாங்கள் நிற்க விரும்பும் தொகுதிகள்னுட்டு நம்ம பீகார் புகழ்(!) ராகுல் காந்தி 90 தொகுதிகள் அடங்கிய லிஸ்ட் ஒன்றை கொடுத்தாராம். அதில் ஒன்றும் கருத்து சொல்ல நமக்கு வழியில்லை! 'கேட்பது அவர்கள் உரிமை கொடுப்பது எங்கள் கடமை' என்ற வசனத்தைப் பேசிவிட்டு கருணாநிதியும் கொடுத்து விடலாம்!. அது இல்லை எனது பிரச்சினை.

ராகுல் கொடுத்த அந்த லிஸ்ட்டை ஏ, பி, சி என்று மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவின் கீழும் முப்பது தொகுதிகளின் பெயர்களை எழுதிக் கொடுத்திருக்கிறாராம். அது என்ன ஏ, பி, சி என்று புரியவில்லையா?

'ஏ' பிரிவின் கீழ் வரும் தொகுதிகளில் காங்கிரஸ் தனித்து நின்றாலே ஈஸியாக வென்று விடுமாம்.

 'பி' பிரிவின் கீழ் வரும் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் துணையிருந்தால் வென்றுவிடுவார்களாம்.

 'சி' பிரிவின் கீழ் வரும் தொகுதிகளில் கூட்டணியில் இருந்தாலும் தேறுவது சிரமம் என்று ஒத்துக் கொண்டுமிருக்கிறார்.

இங்கு தான் என்னுடைய பிரச்சினையே ஆரம்பித்தது. பி, சி எல்லாம் சரிதான். அந்த ஏ - பிரிவு 30 தொகுதிகள் தமிழகத்தில் எங்கிருக்கிறது என்று யாரவது தெரிந்தவர்கள் சொல்ல முடியுமா? இப்பொழுது சொல்லுங்கள் என்னுடைய சந்தேகம் நியாயமானது தானே?

கருணாநிதியிடம் சாதாரணமாக 90 சீட் வேண்டும் என்று கேட்டிருந்தால், சொந்தக் கதை, சோகக் கதையை எல்லாம் மனதில் வைத்து அலசி ஆராய்ந்து, மேல பத்து சீட் சேர்த்து போட்டு, ரவுண்டாக நூறு சீட் கூட கொடுத்திருப்பார். அத வுட்டுட்டு, அதென்ன தனியா நின்னாலும் ஜெயிக்கும் தொகுதின்னு சொல்றது?

ஏதோ அவரோட போதாத காலம், நீங்க எதக்கேட்டாலும் விட்டுக் கொடுக்கிறார்! ஒரு மந்திரி போனதுக்கு பதிலா இன்னொன்னு நீங்க தரணும் அதக் கேட்டாரா? இந்த மந்திரிய ஜெயிலுக்கு அனுப்புனதுக்கு ஏன்னு ஒரு வார்த்த உங்கள கேட்ருப்பாரா? அரை நாள் காகக வச்சிங்களே அதக் கூட பெரிசா எடுத்துக்கலியே. ஏன் தமிழ் நாட்டுல போற வர காங்கிரஸ் காரன்லாம் (இன்னும் புதுசா தேர்வாகியிருக்கிற மாணவர் காங்கிரஸ் தல தான் பாக்கி) கண்ட மேனிக்கு அவர திட்டினீங்களே.. ஒரு.. ஒரு வார்த்த்த்..த ஏன்னு உங்கள பார்த்து கேட்ருப்பாரா?

இதெல்லாம் சாதாரணம், இப்ப சொல்லுங்க நேத்திக்கு வெளியான இரண்டு லட்சம் கோடி ஊழலுக்கும் தி.மு.க தான் காரணம்னு. நெஞ்ச நிமிர்த்தி அந்தப் பழிய தான் ஏற்றுக் கொண்டு உங்கள காக்க தயாராயிடுவார்! ஏன்னா உங்க பாட்டியே சொல்லியிருக்காங்க கருணாநிதி எதிர்த்தாலும் அப்படி எதிர்ப்பார், ஆதரித்தாலும் கண்மூடித்தனமா ஆதரிப்பார்னுட்டு! அத சொல்லி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அவரையும் தி.மு.க வையும் ரணகளமாக்கிட்டீங்களே ராகுல்!! இது நியாயமா?

சரி அவராச்சு நீங்களாச்சு, ஏதோ பண்ணிட்டுப் போங்க. ஆனா என்ன நெனப்புல நீங்க தனியா நின்னாலும் 30 தொகுதில ஜெயிப்போம்னு சொன்னீங்க? இது கருணாநிதி, தி.மு.க வையும் தாண்டி, வெகுஜன தமிழக வாககாளர்களை நையாண்டி செய்யும் விதமாக இருக்கிறது என்பதையாவது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? இளங்கோவன் பூண்டானது, சிதம்பரம் மயக்க நிலையில் கரை ஒதுங்கியது எல்லாம் மறந்து போய் விட்டீர்களா?

அத விடுங்க 30 தொகுதில நீங்க தனியா நின்னா, இந்த சீமான் வகையறாவுக்கெல்லாம், "கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா..." ன்னு கேட்ட மாதிரி ஆகிடும்ணு உங்களுக்கு தோனலியா? சும்மா காமெடி பண்ணாதிங்க சார்..! போய் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்னிகிட்டு, பொருப்பா நடந்துக்கற வழிய பாருங்க!!! 

சிதம்பர ரகசியமாவே இருக்கு, உங்கள பாத்துட்டு வந்த ராதா ரவியும், விஜய்யும் அடுத்தடுத்து அம்மாட்ட சரண்டர் ஆனது ஏன் என்பது! ஆனா அடுத்த நடிகர் திலகம்! எஸ்.வி. சேகர் மட்டும் உங்களோடயே ஐக்கியமாயிட்டார். இதில் தி.மு.க, அ.தி.மு.க ரெண்டு கட்சி காரங்களுக்குமே ரொம்ப சந்தோஷம்!!!

சரி அதை விடுங்கள் நீங்கள் தனியா வரும்பொழுது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் இந்த சந்தேகத்திற்கு மட்டும் விடை சொல்லுங்கள், ஒருவேளை கருணாநிதியை பொதுக்குழு உறுப்பினர்கள், ஒரு மாதிரியாக உசுப்பேற்றி விட, அவரும் அதே சூட்டோடு உங்களிடம் 90 சீட் தருகிறோம் ஆனால் நீங்கள் தனியாக நின்று ஜெயிக்க வாய்ப்பிருக்கும் அந்த 30 தொகுதிகளில், நாங்களும் வேட்பாளர்களை நிறுத்தலாமா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்....?!

திஸ்கி: ராகுல் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதில்லை. யாருக்கு பதில் தெரிந்தாலும் கொஞ்சம் சொல்லுங்களேன்... ப்ளீஸ்!!!


  

"என்னய வச்சி காமடி கீமடி பண்ணலயே"...? இப்படிக்கு ராமதாஸ்.

2011 ஆம் வருடம், பிப்ரவரி 4  ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!


'போகணும்னு தோன்றது... எங்க போறதுன்னு தோனலயே...' இப்படித்தான் இருக்கு நம்ம பாமக ராமதாஸோட நிலைமை. ஒரு ஆறு மாசமா திமுக வுக்கு நூல் நூலா விட்டு, ஒரு ஃபார்ம் -ல இருந்த திமுக - பாமக கூட்டணிய 'வாயில வாஸ்த்து சரியில்லாம'! பேசி தனக்குத் தானே ஆப்படிச்சிகிட்டார் நம்ம ராமதாஸ்.

அப்படி என்ன சொல்லிட்டேன், கலைஞரோட சொந்த கருத்து அது-ன்னு சொன்னது ஒரு தப்பா? எனக்கு அப்படி கலைஞர்ட்ட பேச உரிமையில்லையா? அப்டின்னு இந்தியன் பட கமல்ஹாசன் ரேஞ்சுக்கு முந்தா நாள் பூரா ராமு ஃபீல் வுட, இங்க ஒரு மானஸ்தன் இருந்தானே என்று காடுவெட்டியார், கவுண்டமணி ஸ்டைலுல சுத்திமுத்தி பார்க்க ஆரம்பிச்சிட்டார்.

இதுக்கு மத்தில கோ.க. மணியும், வேல்முருகனும், ஐயா.. இதுக்கு மேல வேண்டாம்.., முடியல... தாங்காது!......அவ்வ்வ்வ்... என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். பின்ன இருக்காதா, ஆறு மாசமா எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாங்க! தூதுவர்கள் ன்னுட்டு திமுக பக்கம் போனாலே முதல்ல இந்த துரைமுருகன் பிடிச்சிப்பார். அவரு நக்கல் இருக்கே... வேண்டாம் அதுக்கு காதுல விஷத்த ஊத்திகிட்டு செத்துடலாம்! அவரு எங்கள முடிச்சிட்டு அப்படியே ஆற்காடு ரூமுக்கு அனுப்பி வைப்பார். அவரு மாதிரியெல்லாம் இவரு நக்கல் அடிக்க மாட்டாரு, ரொம்ப தன்மையா பேசுவாரு.... பேசிட்டு கெலம்பும் போது தான் அந்த சந்தேகத்த கேப்பாரு.. 'ஏம்பா இப்ப நாம பேசுனது இரண்டாயிரத்து பதினாறுக்கா இல்ல இருவத்தியொன்னுக்கா?' ன்னு. யோவ் இப்புடி வர்றவனுக்கெல்லாம் டன்னு டன்னா ஷாக் கொடுத்துகிட்டிருந்தா பின்ன எப்படிய்யா நாட்டுல கரண்ட் இருக்கும்.. னு நெனச்சிகிட்டு இருக்கும் போதே ஸ்டாலின பாத்து ஒரு வார்த்த சொல்லிட்டு போயிடுங்கம்பாரு.

அவரு ரொம்ப நல்லவரு தான். ஒக்கார சொல்வாரு, காப்பி வரவழிச்சி குடிக்க சொல்வாரு, ஆனா பேச மாட்டாரு! அவ்ளோ பிஸி, ஐ.ஏ.எஸ் ஆபீஸர்ஸ் வந்துட்டும் போயிட்டும் இருப்பாங்க, நடு நடுவுல வெள்ளகாரங்க கூட்டமா வந்து எங்கள ஓரமா நிப்பாட்டி வச்சிட்டு பேசிட்டு போவாங்க. அவங்க போனவுடனே நிக்க வச்சதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு எங்கள ஒக்கார சொல்வாரு, தங்கமான மனுஷன். இப்புடியே ஒரு அரை நாள் காலியாகிடும், ஆனா நல்லா பொழுது போவும். அப்புறம் சாப்பாட்டு கேரியர தூக்கிகிட்டு துர்காம்மா வந்துடுவாங்க. சாப்பாட்டு நேரத்துல வந்துட்டிங்க, கண்டிப்பா சாப்டுட்டுதான் போகணும்னு ரெண்டு பேருமே சொல்வாங்க. இல்ல... கூட்டணி முடிவாகாம எப்படி கைய நனைக்கிறதுன்னு மணி ஒரு மாதிரியா விஷயத்துக்கு வர, அதுனால என்ன சாப்பாட்டுல கூட்டு இருக்கு, ஆனியன் பச்சடி இருக்கு (வெளில போனா கிடைக்காது), நல்லா சாப்புடுங்க, புடிச்சிருந்தா திரும்பவும் வாங்க சாப்பிடலாம், இல்லன்னா ஒங்க விருப்பம்னு சொல்வார்.

ஒரு வழியா சாப்ட்டு முடிச்சி வந்துடுவோம். இதே போல ஒரு ஆறு மாசமா போயிட்டு போயிட்டு வந்து, இவங்க ரொம்ப நல்லவங்க எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்கன்னு மனசு இறங்கி, கலைஞர் டில்லில வச்சி நம்ம கூட்டணி பத்தி பேட்டி கொடுத்தா.., நாங்க ஆனந்தத்துல கண்ணுல ஜலம் வச்சிட்டிருக்கும் போதே, நீங்க பீத்த லாத்தலா இப்டி ஒரு பேட்டி குடுத்துடீங்களே... இது நியாயமான்னு, ரெண்டு பேரும் கோரஸா அழ ஆரம்பிச்சிட்டாங்க.

இப்ப வீரபாண்டியாருட்ட வேற தூது போக சொல்றிங்க. துரைமுருகனாவது வெறும் நக்கல் தான் அடிப்பார், ஆனா இவரு ஆளயே அடிச்சாலும் அடிச்சிடுவார்..! வேணாம்... வலிக்குது... அழுதுடுவோம்னு....  ஆர்ப்பாட்டம் பண்ணிகிட்டிருக்கப்போ, ஐயா, வேண்டாம்யா, இவங்கள பாக்கவே பாவமா இருக்குய்யா என்று, ஏ.கே. மூர்த்தி சொல்ல...  'நமக்கு வாய்த்த அடிமைகள் ரொம்ப நல்லவர்கள்' என்று, ராமதாஸ் அவரை அன்போடு பார்க்க, மூர்த்தி ஆடிப்போய் தள்ளாட, பக்கத்தில் நின்றிருந்த முன்னால் இஆப வேலு அவரை அப்படியே தாங்கிக் கொண்டார்.

இதுவரைக்கும் காமெடியாக சென்று கொண்டிருந்த இந்த விஷயம் இனிமேல் சீரியஸ் டிராக்கில் செல்ல வேண்டிய நிலை.

அந்த நேரம் பார்த்து செல்லும் கையுமாக அங்கு வந்து சேர்ந்த அன்புமணி, ராமதாஸைப் பார்த்து ஏதோ கோபமாக பேச எத்தனித்து, பிறகு எல்லோரையும் ஒருமுறை பார்த்துட்டு, கொஞ்சம் உள்ள வாங்க தனியா பேசணும்னு சொல்ல, நான் வேற, கட்சி வேற இல்ல, அதுனால எதுவா இருந்தாலும் இங்கயே பேசு என்று பம்ம... இது குடும்ப பிரச்சினை புள்ள கூப்புடுறான்ல கொஞ்சம் உள்ள வந்துட்டு போங்க என்று சரஸ்வதி அம்மாளின் குரல் உள்ளிருந்து வர, எழுந்து சட்டையை இழுத்து விட்டு சரி செய்து கொண்டு ...தோ வந்துடறேன்னுட்டு உள்ளே போனார். பின்னாலேயே அன்புமணியும்  உள்ளே போக, இங்கிருப்பவர்களுக்கெல்லாம், பட்ட காயத்திற்கு மருந்து போட்டது போன்ற ஒரு குளுமை மனதுக்குள் குடி கொண்டது...!
  

ராஜாவா?... தி.மு.க வா? - என்ன செய்யப் போகிறார் கருணாநிதி?!

2011 ஆம் வருடம், பிப்ரவரி 2 - ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!


சென்னை ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணாதுரை யால் 1949, செப்டம்பர் 17 ம் தேதி அன்று முறைப்படி தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். அறுபத்தியோறு  ஆண்டுகளைக் கடந்தும், வரும் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் கட்சிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதே அதன் பலத்தைப் பறை சாற்றும்.

அண்ணாதுரையால் ஆரம்பிக்கப் பட்ட கட்சி என்றாலும், கடந்த 42 வருடங்களாக தொடர்ந்து அக் கட்சியின் தலைவராக இருந்து, இன்று வரை தி.மு.க பலம் வாய்ந்த கட்சியாக தமிழகத்தில் இருப்பதற்கு கருணாநிதி மட்டுமே காரணம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

ஆனால் சற்றுமுன் வந்துள்ள செய்தி, கருணாநிதியின் இந்த பெருமையை அவர் காலத்திலேயே அழித்து விட்டும் சென்று விடுவார் என்பதாகத்தான் உணர்த்துகிறது. "முன்னால் மத்திய தகவல் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராஜா, இந்தியாவில் இதுவரை நடந்த அனைத்தையும் விட பெரிய தொகை கொண்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மத்திய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்". இது தான் அந்த செய்தி.

தி.மு.க வை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர், பெறும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டால் தி.மு.க வே அழிந்து விடுமா - என்ன?

நல்ல கேள்வி தான். ஆனால் அவருக்கு கட்சியும், கட்சித்தலைமையும் இன்று வரை உறுதுணையாக இருப்பது தான் பிரச்சினையே. தன் கட்சியின் அமைச்சர் மேல் ஒரு குற்றச்சாட்டு வெறுமனே வந்தால் கூட பரவாயில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது, குற்றம் சுமத்தப்பட்டவர் மேல் கடுமையான விமர்சனம் நீதிபதிகளால் வைக்கப்படுகிறது, பிறகு அவர் பேசியதாகச் சொல்லப்படும் (இவ்விஷயத்தில் அவருக்கு எதிரான) தொலைபேசி உரையாடல் பதிவு வெளிவருகிறது, அதன் பிறகு இந்திய பாராளுமன்றமே இரு வாரங்களுக்கு மேல் இவ்விஷயத்திற்காக ஸ்தம்பிக்கிறது... இதற்கெல்லாம் ஒரே தீர்வாக அவரது ராஜினாமா மட்டுமே இதுவரை பெறப்பட்டிருக்கிறது!!

தி.மு.க வின் அடுத்த தலைமுறை வாரிசுகளாக தொண்டர்களால் பார்க்கப்படும், அழகிரி, ஸ்டாலின், தயாநிதி மாறன் மற்றும், கட்சியின் முன்னனி தலைவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக கட்சியின் அனைத்து மட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள் அனைவருமே இந்த ஊழல் பிரச்சினையில் ராஜாவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகத்தான் தெரிகிறது.

கருணாநிதியின் இன்னுமொரு வாரிசான கனிமொழியும் அவர் தாயாரும் மட்டுமே இப்பிரச்சினையில் ராஜாவுக்கு ஆதரவான மனநிலையில் இருப்பதாக தெரிய வருவதோடு, அவர்கள் பேசியதாக சொல்லப்படும் தொலைபேசி உரையாடல் பதிவுகளும் வெளிவந்து, தி.மு.க தொண்டர்கள் அனைவருக்குமே மாற்றுக் கட்சியினரிடம் தலைகுனிவை உண்டாக்கி இருக்கின்றன.

இந்நிலையில் தான் இந்தக் கைது!!!.

இதற்கு மேலும் யாரைக் காப்பாற்றுவதற்காக கருணாநிதி மௌனம் காக்கிறார் என்பது தான் புரியவில்லை. ஏற்கனவே இந்த பிரச்சினையில் அழகிரி பெரிய போராட்டம் நடத்தி, வெறுத்துப் போய் ஒதுங்கிவிட்டதாகத் தெரிகிறது. ஸ்டாலினோ 'போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கருணாநிதிக்கே' என்ற மனநிலையில் இருப்பதாக தோன்றுகிறது.

கருணாநிதி தன்னுடைய "ஒரே ஒரு வாரிசுக்காக" தி.மு.க வின் வருங்கால தளபதிகள், முன்னனி தலைவர்கள், லட்சக்கணக்கான பொறுப்பாளர்கள், கோடிக்கணக்கான உறுப்பினர்கள்... ஆக ஒட்டுமொத்த தி.மு.க -வையே பலி கொடுக்கப் போகிறாரா? அல்லது கோடிக்கணக்கான தொண்டர்களின் சொல்லொனா தியாகத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் தி.மு.க என்ற கட்சிக்காக ராஜாவை பலிகொடுக்கப் போகிறாரா.....?

பொறுத்திருந்து பார்ப்போம்.

மீனவ நண்பனாக என்னென்ன செய்யலாம், கருணாநிதி?

2011 ஆம் வருடம், பிப்ரவரி 1  ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!


கடந்த 35 வருடங்களாக சுமார் 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அதாவது ஒரு மீனவ கிராம்த்தில் சராசரியாக 200 குடும்பங்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், சுமாராக மூன்று மீனவ கிராமங்களே தமிழகத்தில் அழிக்கப்பட்டிருக்கின்றன!

தான் சுட்டதாக இலங்கை ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் சுடப்பட்டு இறந்தது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றதொரு நிஜம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று கபில் சிபல் போன்றோர்கள் கூறுவதை புறம் தள்ளிவிட்டு அப்பிரச்சினையை அணுகுவது போல், இவ்விஷயத்தில் செத்து மடிவது நம் இனம் மட்டுமே என்பதால், இலங்கை சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொண்டு, இலக்கில்லாமல் கூப்பாடு போடுவதை நிறுத்திவிட்டு, இனி ஒரு சாவு கூட இங்கு விழக்கூடாது என்ற எண்ணத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய அவசர அவசியம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மிக நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு. இந்திய இலங்கை கடல் எல்லையில் தான் இப்பிரச்சினை நடக்கிறது. ஆக இப் பிரச்சினையின் முழுப்பொறுப்பும் மத்திய அரசாங்கத்தையே சார்ந்தது. மாநில அரசு தனது காவல் துறையை அனுப்பி மீனவர்களுக்கு பாதுகாப்பாக எல்லையில் நிறுத்த முடியாது. அதேபோல் தமிழக முதல்வர் இலங்கை அதிபரை அழைத்தோ அல்லது அங்கு சென்று பேசியோ இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது - உண்மை தான் ஏற்றுக் கொள்வோம். அதனால் தமிழக முதல்வர் கருணாநிதி இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை, பாவம் அவர் என்ன செய்வார்? என்று கேட்பது - சரியல்ல!

சரி இதற்கு விடிவு காண என்ன தான் செய்ய வேண்டும் கருணாநிதி?

* இந்தியாவிலேயே மிக நீண்ட கடற்கரை மற்றும், சுமார் 18 மைல் தொலைவிலேயே அண்டை நாட்டை கொண்டிருக்கும் ஒரு மாநிலத்திற்கு அதன் மக்களை, குறிப்பாக மீனவர்களை பாதுகாக்க இரு நாட்டு கடல் எல்லையில் நிரந்தர கடல் பாதுகாப்பு படையை நிறுத்த் வேண்டும்.

* அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் உள்ள நாடு இந்தியா என்று உலக நாடுகளுக்கு காட்டிக் கொள்ள வேண்டிய இக்கட்டான கால கட்டத்தில் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை ஒரு நொடியும் தாமதிக்காமல் மீட்டெடுக்க வேண்டும்.

* அண்டை நாட்டின் ஆபத்து உள்ள எல்லையோர மாநிலம் என்ற அடிப்படையில், காஷ்மீரைப் போன்று (அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும்) சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக தமிழகத்தை அறிவித்து, அதற்கான சிறப்பு நிதியைப் பெற வேண்டும்.

* அந்த நிதியைக் கொண்டு சிறியதும், பெரியதுமான உலகத்தரத்திலான இருபது மீன்பிடி துறைமுகங்களை அமைத்து, ஒவ்வொரு நாளும் கிடைக்கும் கடல் உணவுப் பொருட்களை, ஓரிடத்தில் சேமிக்கும் கடல் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி, அங்கிருந்து வாரத்திற்கு மூன்று நாட்கள் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும்.

* ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் மீனவர்கள் எல்லை தாண்டும் நிலை ஏற்பட்டால், அதற்கு நீதிமன்ற விசாரணையின் மூலம் தான் தண்டனை அளிக்கப்பட வேண்டுமே தவிர, எக்காரணம் கொண்டும் 'ஒரு' தமிழக மீனவனின் உயிர் பறிக்கப்பட்டால் கூட இலங்கையை எதிரி நாடாக அறிவித்து, சர்வதேச அரங்கில் இதற்கான தீர்வைக் காண வேண்டும்.

இவ்வளவுதான்! மீனவர்கள் பாதுகாப்பு பற்றி பேசும் பொழுது மீன்பிடி துறைமுகம், ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதி, ஏற்றுமதி எல்லாம் எங்கு வருகிறது? ஏன் வருகிறது? என்ற கேள்வி எழலாம். ஆனால் மத்திய அரசு நிதி உதவியில், கண்காணிப்பில் கிழக்கு கடற்கரை முழுதும் அடுத்தடுத்து நவீன மீன்பிடி துறைமுகங்கள், அவற்றையெல்லாம் இணைக்கும் நீண்ட தூர கடல் போக்குவரது செயல்பாடுகள், அதற்கும் மேலாக கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கென்றே பிரத்தியேகமான துறைமுகம்..... நினைத்துப் பாருங்கள், இதில் ஒரு அன்னிய நாட்டவன் உள்நுழைந்து தாக்குவது என்பது இந்திய தொழிற்துறையையே தாக்கியதாகாதா...?!

எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இதெல்லாமே மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய விஷயமாயிற்றே, இதை கருணாநிதியால் எப்படி சாத்தியமாக்க முடியும் என்பது தானே கேள்வி? அதையும் பார்ப்போம்.

எதை வைத்துக் கொண்டு மத்திய அரசில், மூன்று கேபினெட், நான்கு இணை அமைச்சர் பதவிகளைப் பெற்றார்? எதை வைத்துக் கொண்டு லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழலை ஒன்றுமில்லாமல் செய்து கொண்டிருக்கிறார்? அதே மந்திரத்தை வைத்துக் கொண்டுதான் மேற்கூறிய அனைத்தையும் சாத்தியமாக்க வேண்டும்.

தமிழகம் மற்றும் பாண்டியை சேர்த்து மொத்தம் 40 பாரளுமன்ற உறுப்பினர்களில், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இரு கம்யூனிஸ்டுகளை தவிர்த்து, மீதமுள்ள 29 எம்.பி களும் ஓரணியில் நின்றாலே போதும் - மேற்சொன்ன விஷயங்கள் சாத்தியம் தான். அதற்கு கருணாநிதி செய்ய வேண்டியது ஒன்று தான். மேற்கூறிய ஐந்து கோரிக்கைகள் அடங்கிய ஒரே மனு. அதை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஒரு குழு. அதற்கு தலைமையேற்க வேண்டியது எதிர்கட்சி தலைவி ஜெயலலிதா. போராட்டத்தை வடிவமைப்பது வைகோ மற்றும் நெடுமாறன். மேற்படி போராட்டத்தில் எடுக்கப்படும் எந்த விதமான முடிவுகளுக்கும் தி.மு.க வின் 18 எம்.பி களும் கட்டுப்படுவார்கள்! இதை கருணாநிதியே பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்!

அவ்வளவு தான்(!). இப்படி ஒரு நிலைப்பாடு எடுக்கப் பட்டால், மீதமுள்ள தேசிய கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.பி களும் போராட்டக்குழுவின் முடிவுகளுக்கு உடன்பட்டாக வேண்டும். அப்படி உடன்படாதவ்ர்கள், அவர்கள் மட்டுமன்றி அவர்கள் பரம்பரையைச் சேர்ந்த எவருமே தமிழகத்தில் இனி ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற இயலாத நிலையை உருவாக்க வேண்டியது, வைகோ, நெடுமாறன், சீமான் வகையறாக்களின் பொறுப்பு!

இது நடந்தால் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வருமா? வராதா? -  கண்டிப்பாக வரும். ஆனால் பிரச்சினையே, மேற்சொன்ன மாதிரி ஒரு ஒற்றுமையான சூழ்நிலை உருவாக வேண்டும். அதை உருவாக்கும் பொறுப்பை முன்னெடுக்க வேண்டியது யார்? கருணாநிதியா? வைகோ வகையறாவா? அல்லது பொது மக்களா?

பொது மக்கள் எக்காலத்திலும் இதை முன்னெடுக்க மாட்டார்கள். பின்ன கருணாநிதியா? இப்பிரச்சினை தனக்கு விழும் ஓட்டை எந்த விதத்திலும் பாதிக்காது என்கிற போது அவரும் இதை முனெடுக்க மாட்டார். அப்படியானால் இவ்விஷயத்தில் அதிக பிரயத்தனப்படும் வைகோ உள்ளிட்டவர்கள் தான் இதை முன்னெடுக்க வேண்டும். சாத்வீகமான முறையில் கருணாநிதியை சம்மதிக்க வைக்க தொடர்ந்து முயல வேண்டும். வெற்றி கிட்டும் வரை முயல வேண்டும்.

ட்விட்டரில் எழுதுவது, வலைப்பூவில் திட்டுவது - இதெல்லாம் வேலைக்கு ஆகாது. மக்கள் எழுச்சியுற வேண்டும், தமிழகத்தின் அனைத்துக் கட்சி தலைவர்களும், எம்.பி களும் ஒன்றிணைய வேண்டும்...!


திஸ்கி: ஏய்... ஏய்... யாரப்பா...?  நல்ல கனவு, திடீர்னு எழுப்பி கெடுத்திட்டியே.. பாவி! ...ஏய் என்ன ஏம்ப்பா திட்டுற? நல்ல கனவுன்னா.. அடிக்கடி இதே மாதிரி கனவு காணு, உனக்கு தெரிஞ்சவங்கள எல்லாம் இதே போல கனவு காண சொல்லு. நெசத்துலயே நடக்காமயா போயிடப் போவுது?!

Wednesday, July 13, 2011

வரலாறு காணாத விலையேற்றத்தை வாழ்த்தி வரவேற்போம்..!!

இந்த நிதியாண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இன்னும் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதற்கான தேதியும் கூட இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. எப்படியானாலும் இன்னும் பத்துப் பதினைந்து நாட்களுக்குள் அந்த பட்ஜெட் வெளியிடப்பட்டுவிடும். அதற்குள்ளாகவே பல பத்திரிகைகள், இந்த பட்ஜெட்டில் பல நல்ல சலுகைகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் முதல்வர் அறிவிக்கப் போகிறார் என்று கட்டியம் கூறிக்கொண்டிருக்கின்றன.

ஆனால் நேற்றுமுன் தினம் அதாவது 11 ஆம் தேதி இரவே அனைத்து வணிகவரி அலுவலகங்களுக்கும் அரசு தாக்கீது ஒன்று வருகிறது. அதில் நாளை முதல் அதாவது 12 ஆம் தேதிமுதல், "வாட்" எனப்படும் மதிப்புக்கூட்டு வரியில் சில மாறுதல்கள் செய்யப்படுகிறது என்றும், அதன் படி இது வரையிலும் 4 சதவிகித வாட் வரி கட்டிய பொருட்களுக்கு எல்லாம் இனி 5 சதவிகிதமாகவும், 12.5 சதவிகித வரி கட்டிய பொருட்களுக்கு இனி 14.5 சதவிகிதமாகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
 
இதில் இன்னும் ஒரு கொடுமையாக, ஏற்கனவே 4 சதவிகிதம் வரி கட்டப்பட்ட சில பொருட்களுக்கு இனிமேல் 12.5 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது! இந்த அபார வரி உயர்வு நேற்றைய தேதியிலிருந்தே நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்படுகிறது. அதாவது பட்ஜெட்டிற்கு முன்னதாகவே இந்த வரிகள் மிகக் கடுமையாக உயர்த்தப்படுகின்றன. ஆனால் எந்தப் பத்திரிக்கையிலும் இதைப் பற்றி விரிவான செய்திகள் இல்லை!

இருப்பினும் வரும் பட்ஜெட்டில், புதிதாக எந்த வரியும் உயர்த்தப்படாது!! அதேசமயம் ஃபேன், கிரைண்டர், மிக்ஸி, லேப்டாப், ஆடு, மாடுகள், அதிக பொருட்செலவில் காப்பீட்டுத்திட்டம் இவையெல்லாம் அறிவிக்கப்படும். அடுத்த ஒரு மாதத்திற்கு பத்திரிகைகளும், நம் இணையதளங்களும் அவற்றை பல்வேறு கோணங்களில் செய்தியாக வெளியிட்டு புலகாங்கிதம் அடைந்து கொள்ளும்.

சரி விஷயத்திற்கு வருவோம். சராசரியாக் மூன்றிலிருந்து ஆறு சதவிகிதம் வரையிலான இந்த வரி உயர்வு என்பது, நாம் தினசரி அத்தியாவசியமாக பயன்படுத்துகின்ற பேஸ்ட், சோப் வகையறாகளிலிருந்து மளிகை மற்றும் உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஸ்டேஷனரீஸ்.... இத்தியாதிகள் உட்பட அனைத்து விதமான உபயோகப் பொருட்களிலும் பிரதிபலிக்கும்.

சராசரியில் குறைந்தபட்ச உயர்வான 3 சதவிகிதத்தை எடுத்துக் கொண்டாலே, மதிப்புக் கூட்டு வரியில் அந்தப் பொருள் உற்பத்தி இடத்திலிருந்து, மொத்த விற்பனையாளர், விநியோகஸ்தர், கடைக்காரர் என்று பல படிகளைத் தாண்டி மக்கள் கைக்கு வந்து சேரும் பொழுது வரியாக மட்டுமே 5 சதவிகித உயர்வைக் கண்டிருக்கும்! இந்த நிலையில் எந்தவொரு வியாபாரியுமே வரி எவ்வளவு உயர்கிறதோ அதே அளவிற்கு மட்டும் விலையை ஏற்ற மாட்டார்கள். மாறாக அதிகச் செலவினம் என்ற அடிப்படையில் இன்னுமொரு 5 சதவிகிதத்தை சேர்த்து தான் விலையை ஏற்றுவார்கள்.

உதாரணத்திற்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5/= ஏறுவதாக வைத்துக் கொண்டால், ஆட்டோ சார்ஜ் எவ்வளவு ஏற்றலாம்? ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20 கி.மீ. தூரம் செல்லும் ஆட்டோவுக்கு கிலோ மீட்டருக்கு 25 காசுகள் மட்டுமே ஏற்றலாம். ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது? அது உங்களுக்கே தெரியும். அதேப்போலத்தான் மற்ற பொருட்களிலும் விலையேற்றம் நடக்கும்.

இப்படியொரு வரி உயர்வு என்பது அசாதாரணமானது என்று வியாபாரிகளே தலைசுற்றித்தான் போயிருக்கின்றார்கள்.  நேற்று போட்ட பில் எல்லாமே பழைய வரியில் போட்டு விற்றுவிட்டோமே என்று புலம்புகிறார்கள். அதை யார் ஈடுசெய்வது? எடுத்த ஆர்டரை பழைய விலைக்கே எப்படித் தருவது என்றும் குழம்பிப்போயுள்ளனர்.

கடந்த ஆட்சியில் அத்தியாவசியமற்ற அலங்கார இலவசமான ஒரு கலர் டீவிக்கே, அங்கலாய்த்தவர்கள்.., ஒரு லட்சம் கோடி கடன், பத்தாயிரம் கோடி ஆண்டு வட்டி என்று பெரிய பெரிய ஆடிட்டர்களையெல்லாம் பேட்டி எடுத்து, புள்ளி விவரங்களுடன் சாடியவர்கள்.... இன்று ஒன்றுக்கு பதில் மூன்று அத்தியாவசியமற்ற இலவசப் பொருட்கள், பள்ளி மாணவர்களுக்கே லேப்டாப், ஆடுகள், மாடுகள்,  ஒரு லட்சத்திற்கு பதிலாக நான்கு லட்சம் பெறுமானமுள்ள காப்பீட்டுத் திட்டம்... என்று அறிவிப்புகளை அடுக்கிக்கொண்டே செல்வதைப் பார்த்து..., இதற்கும் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டுப் பத்திரம் எழுதுகின்றார்கள்!!!

அத்தகையவர்கள், தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் செய்கிறார்களா? அல்லது தெரிந்து கொண்டே புரியாதவர்கள் போல நடிக்கிறார்களா? என்றே நம்மைப் போன்றவர்களுக்கு குழப்பமாக இருக்கின்றது!

ஆனால் எத்தனை காலத்திற்கு தான் தூங்குவது போலவே நடிக்க முடியும்?! இன்று முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மக்கள் கழுத்தை பெறுமளவில் நெறிக்கப்போகிறது. அது முதல் மக்கள் பேச ஆரம்பிப்பார்கள், பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் பெண்களுக்கு, அடுத்த மாதம் ஒன்றாம் தேதி ரோக்காவுடன் கடைக்குச் செல்லும் பொழுதே விபரீதம் புரிந்துவிடும்!!

அப்பொழுது இவர்களெல்லாம் சொல்வதற்கு என்ன பதில் வைத்திருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை. நமக்குத்தேவை பதில் இல்லை. நிவாரணம் தான். கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறுகளுக்குத்தான் தண்டனை கொடுக்கப்பட்டு தூக்கியெறியப்பட்டிருக்கின்றார்கள். அது முடிந்த கதை. இன்னமும் அதைப்பற்றியே பிரஸ்தாபித்துக் கொண்டு காலம் கடத்துவதும், புது ஆட்சியாளர்கள் செய்யும் சாதாரண நடைமுறை செயல்பாடுகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருப்பதும் மட்டுமே நமது வேலை என்று நினைத்துக் கொண்டிருந்தால்....,

புதிய ஆட்சியின் ஆரம்பமே முன்னைவிட பலமடங்கு அதிக இலவசங்கள், அதன் காரணமாக மிகக்கடுமையான விலைவாசி ஏற்றம் என்று எகிற ஆரம்பித்தால், ஐந்து ஆண்டுகளில் தமிழகம் என்ன மாதிரியான கடன்சுமையிலும், விலையேற்றத்திலும் சிக்குண்டு தவிக்கும் என்பதை உண்மையான நடுநிலைவாதிகளும், மக்கள் நலன் மட்டுமே பேணும் உள்ளம் கொண்டோரும் உணர வேண்டும். ஆட்சியாளர்களின் தவறுகளை முளையிலேயே கண்டித்து கிள்ளி எறிந்து தமிழக மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். செய்வார்களா??!!

Tuesday, July 12, 2011

"வாருங்கள் ஸ்டாலின்.... பதவி ஏற்க!!!

2011 ஆம் வருடம், ஜனவரி 17 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!

தமிழக அரசியலை, ஆட்சி பீடத்தை அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஆக்கிரமிக்கப் போகும் புதிய தலைமுறை அரசியல்வாதிகளை இனம் காணும் ஒரு நேர்மையான அலசல் தான் இந்தப் பதிவு.  வேறு எந்த விதமான சார்பு நிலையோ, உள்குத்தோ. நுண்ணரசியலோ இதில் இல்லை என்று அடித்துக் கூவு(று)கிறேன்.

இந்தியா குடியரசு ஆன பிறகு, கடந்த 60 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றை உற்று நோக்கினால், வெறும் ஐந்து பேர் மட்டுமே (இதில் ஜானகி, ஓ.பி.எஸ் இவர்களை சேர்க்கவில்லை)  'முதல்வர்' பதவியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்லப் போனால் அடுத்த ஐந்து ஆண்டுக்கான போட்டியில் கூட இந்தப் பட்டியலில் இருந்து தான் இருவர், முதல் இரண்டு ரேங்க்கில் இருக்கிறார்கள்.

கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரம், சூழ்நிலை, இன்னபிற எல்லாம் உயர்ந்திருக்கிறதா அல்லது தாழ்ந்திருக்கிறதா என்று பார்த்தால், இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது உடனடியாக மோசம் என்றும் கூறிவிட முடியாது, அதே சமயம் நற்சான்றிதழும் அளித்து விட முடியாது என்பது தான் நிதர்சனம்.

ஆக தமிழக மக்கள் அனைவருக்குமே கொஞ்சம் அலுப்பு தட்டியிருக்கிறது. ஏதோ ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. கொஞ்சம் இளமையாக, சுறுசுறுப்பாக, நீண்ட ஆட்சி முறை அனுபவம் உள்ளவராக, படிப்படியாக எல்லா நிலைகளையும் கடந்து அந்தந்த நிலைகளில் அனுபவம் பெற்றவராக,  இதுவரை கொடுக்கப்பட்ட பொறுப்புகளை முழுமையாகவும், திறமையாகவும், மக்கள் பாராட்டும் படியாகவும், ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இதுவரை எழாத வகையில் செயல்பட்டிருப்பவராகவும், மக்களோடு மக்களாக கீழிறங்கி.. திட்டங்களை குறித்த காலத்திற்கு முன்னதாகவே நிறைவேற்றும் சாதுர்யம் கொண்டவராகவும், மக்கள் பிரதிநிதிகள் சபையில் தன் துறை சார்ந்த கேள்விகளுக்கு புள்ளி விபரங்களுடன் உடனுக்குடன் பதில் சொல்லும் ஆற்றல் பெற்றவராகவும், எதிர்க்கட்சியினரை வார்த்தைகளால் நோகடிக்காமல் தனிநபர் தாக்குதலின்றி பேசும் தன்மை கொண்டவராகவும்.... இப்படியே இதே ரீதியிலான இன்னும் பல 'வும்' முக்கு சொந்தக்காரராக தள்ளாட்டமின்றி சுறுசுறுப்புடன் நடக்ககூடிய, ஓடக்கூடிய ஒருவர் முதல்வரானால் எப்படியிருக்கும் என்ற ஏக்கம் தமிழக மக்கள் அனைவருக்குமே வந்திருப்பது உண்மை தான்.

இது தான் சரியான தருணம். நடந்து முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழகத்தை, படிகளில் ஏற்றி மேலே கொண்டுவரும் சக்தி கொண்ட ஒருவரை முதல்வராக அடையாளம் காணவேண்டிய காலகட்டத்தில் தான் இப்பொழுது நின்று கொண்டிருக்கிறோம். சரி இப்படிப்பட்ட ஒருவரை தேர்ந்தெடுக்கும் போட்டிக் களத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்று இப்பொழுது பார்ப்போம்.

இன்றைய நிலையில் இந்தப் போட்டியில் சில முக்கியமான கட்டங்களை தாண்டி, ஆட்டத்தில் இருப்பதாக மக்களால் உணரப்படுகிறவர்கள் துரதிருஷ்டவசமாக இருவர் மட்டுமே. ஒன்று விஜயகாந்த், மற்றொன்று ஸ்டாலின். இந்த ஆட்டத்தில் மிக முக்கிய போட்டியாளராக இருந்திருக்க வேண்டிய வைகோ, ஏதோ ஒரு பிடிவாதத்தில் தன்னைத்தானே புதை குழிக்குள் சிக்கவைத்துக் கொண்டு தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும், ஏன் அடைய விரும்பிய ஒரு லட்ச்சியத்திற்கு கூட விடியலை இன்னும் கானல் நீர் தூரத்திலேயே வைத்திருக்கிறார். பல நாட்டு அறிஞர்களின் புத்தகங்களையும், தத்துவங்களையும் கரைத்துக் குடித்திருக்கும் வைகோ, இந்த வலைப்பூவின் தலைப்புக்கு கீழே உள்ள பில் கேட்ஸின் வார்த்தைகளை படித்து நடந்திருந்தால், இன்று வெற்றிக் கோட்டையின் நுழைவாயிலில் முதல் ஆளாக நின்றிருந்திருப்பார்!

மேற்சொன்ன இருவரை தவிர்த்து வருங்கால இளம் தலைமுறை தமிழக முதல்வர் போட்டிக்கு 'நானும் ரௌடி தான்' ஸ்டைலில் சக போட்டியாளராக களத்தில் நிற்பவர்கள் என்று பார்த்தோமானால், டாக்டர் அன்புமணி ராமதாஸ், சீமான், கனிமொழி, நடிகர் விஜய், சரத்குமார், கார்த்திக் சிதம்பரம், யுவராஜ், கார்த்திக், ... இப்படியாக சொல்லும் போதே வாயை மூடிக்கொண்டு சிரிக்கும்படியான பட்டியல் தான் நினைவுக்கு வருகிறது!

எனவே இன்றைய நிலவரத்தை வைத்துப் பார்த்தோமானால், விஜயகாந்த் மற்றும் ஸ்டாலின் இருவர் மட்டுமே, அடுத்த 20 ஆண்டுகளுக்கு தமிழக முதல்வர் பதவியை ஆக்கிரமிக்கப் போகும் போட்டிக் களத்தில் நிற்கிறார்கள். மேற்சொன்ன பட்டியலில் இருந்தோ அல்லது புதிதாக முளைத்தோ ஓரிருவர் வருங்காலத்தில் (இன்னும் 5 வருடத்தில்) இந்தப் போட்டிக்கு தகுதியானவர்களாக வருவார்களேயானால், அது ஆரோக்கியமான தமிழக அரசியலுக்கு வழிவகுக்கும் என்றே நினைக்கிறேன்.

சரி இப்பொழுது உள்ள போட்டியாளர்களில் முதலாவதாக விஜயகாந்த் ஐ பார்ப்போம். தமிழக வாக்காளர்களில் பெறும்பான்மையானவர்கள், கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிற்கு மாற்றாக ஒரு பலம் வாய்ந்த தலைமையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, சென்ற தேர்தலில் வாராது வந்த மாமணி போல் வந்தவர் தான் விஜயகாந்த். அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து சராசரியாக எட்டு சதவிகித வாக்குகளைப் பெற்று, அவர் மட்டும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார்.

அது வரை எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அதன் பிறகு அடுத்த அடிக்கு அவர் முன்னேறினாரா என்று கேட்டால் அவரே கூட இல்லை என்று தான் சொல்வார். இப்பொழுது கூட சென்ற தேர்தலில் தான் பெற்ற வாக்கு சதவிகிதத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறாரே தவிர, வரும் தேர்தலில் தன் கட்சிக்கு கூடுதலாக இவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்று பேசவில்லை. தன் கட்சி சார்பாக தனக்கு கிடைத்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை கொஞ்சம் கூட மதிக்காமல் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஓரிரு முறை மட்டுமே சட்டசபைக்கு சென்றுள்ளார்.

கேட்டால் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா இவர்கள் எல்லாம் இதே தவறை செய்யவில்லையா? என்று கேட்பார். உண்மை தான். அவர்கள் யாருமே முதல் முறை எம்.எல்.ஏ ஆன போது இந்த தவறை செய்யவில்லை. மேலும், குறைந்த பட்சம் அவர்கள் கட்சிக்காரர்களாவது ஒத்துக் கொள்ளும் வகையில் அதற்கான ஒரு நியாயத்தை கற்பித்துச் சொன்னார்கள். ஆனால் விஜயகாந்த் அப்படி என்ன சாதித்து விட்டதாக நினைத்துக் கொண்டு சட்டசபை செல்வதை தவிர்த்தார்? சரி ஒரு ஒழுங்கான எதிர்க்கட்சி தலைவராகவாவது நடந்து கொண்டாரா? ஜெயலலிதா செய்வதைப் போல் ஒரு எதிரிக் கட்சி தலைவராகத்தான் இதுவரை நடந்து கொண்டிருக்கிறார்!

இவர் செய்ததை எல்லாம் தான் ஏற்கனவே ஜெயலலிதா செய்து கொண்டிருக்கிறாரே. அந்த இருவருக்கும் மாற்றாகத்தானே மக்கள் இவரைப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவர் செய்வதையே இவரும் செய்தால் மாற்றத்தை விரும்பும் மக்கள் எங்கனம் மீண்டும் இவரை ஆதரிப்பார்கள்? சரி எம்.ஜி.ஆர். -ன் பிரதிபிம்பமாக தன்னை காட்டிக்கொள்ள விரும்பும் இவர், அவரைப் போன்ற மேடை நாகரீகத்தையோ, கட்சித் தொண்டர்களிடமுமான அணுகுமுறையையோ கடைபிடிக்கிறாரா?

இதே ரீதியில் தனிப் பதிவே போடும் அளவிற்கு, விஜயகாந்த் தனது கட்சியின் வாக்கு வங்கியை அதிகப்படுத்துவதை தவிர்த்து வீழ்ச்சியை நோக்கி அழைத்துச் சென்ற விஷயங்களைப் பட்டியலிடலாம்.

அடுத்த போட்டியாளரான ஸ்டாலினைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம். இந்தப் பதிவின் நான்காம் பத்தியை மீண்டும் ஒருமுறை படித்தாலே பாதி விஷயங்கள் விளங்கிவிடும். அடுத்த 20 வருடங்களுக்கான தகுதியான தமிழக முதல்வர் போட்டியின் முதலிடத்தில் இருப்பவர் இவர் தான் என்று! இதைப் படிக்கும் பொழுது இது ஒரு 'சார்புநிலை' வாதம் என்று எண்ணுபவர்கள், இந்த இடத்திற்கு தற்பொழுதைய நிலையில் வேறு ஒருவரை பொறுத்தி வாதிட்டால் பதில் கூற நானும் தயாராயிருக்கிறேன்.

எமர்ஜென்ஸிக்கு முன்னதாகவே ஆரம்பித்து, சற்றேரக்குறைய 37 வருட கால முழுநேர அரசியல் அனுபவம்; ஒரு புது கட்சியை ஆரம்பித்து நடத்துவது போல தி.மு.க வின் இளைஞர் அணியை ஆரம்பித்து, கட்டமைத்து, அதற்கென்று தனி அலுவலக கட்டிடம், அணிவகுப்பு, மாநாடு, இத்தியாதி, இத்தியாதி என்றெல்லாம் வளர்த்து, அதன் பொருப்பாளர்கள் பலரும் இன்று ஆட்சிப் பொருப்பிலும் பங்கேற்கும் நிலையினை ஏற்படுத்தி, சுதந்திர இந்தியாவில் அறுபது ஆண்டுகால பழமையான பிராந்திய கட்சி இன்றைக்கும் மங்காத பொலிவுடன் செயல்படுவதற்கான காரணங்களில் மிக முக்கியமானது ஸ்டாலின் ஈன்றெடுத்து வளர்த்த அந்த இளைஞரணி தான் என்பதை தி.மு.க தலைவர் முதல் அடிமட்டத் தொண்டர்வரை எவரும் மறுப்பதற்கில்லை.

கருணாநிதியின் மகன் என்ற காரணத்தால் தான் இப்படி வளர்ந்தார் என்பவர்களுக்கு, கருணாநிதியின் மற்ற பிள்ளைகளுக்கு இப்படியொரு பொறுமையும், நிதானமும் இருந்ததில்லை என்பதோடு இப்பொழுது களத்தில் நிற்பவர்கள் எப்படி வளர்ந்தார்கள் என்பதைப் பற்றிய பதிவல்ல இது என்பது தான் என் பதில்.

தான் சென்னை மாநகர மேயராக பொறுப்பிலிருந்த போதாகட்டும், உள்ளாட்சித்துறை அமைச்சராக ஆற்றும் பணியாகட்டும், துணை முதல்வராக அனைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தும் பாங்காகட்டும், இதில் எங்குமே தாந்தோன்றிதனமாக நடந்து கொண்டதான குற்றச்சாட்டோ, ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொண்டதாக பேச்சோ அடிபடவில்லை. சென்னையில் கட்டிய மேம்பாலங்களில் ஊழல் நடந்ததாக ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்து, கட்டிய பாலங்களை உடைத்து பரிசோதித்தும் குற்றம் நிரூபிக்கப்படாமல் திருவாளர் பரிசுத்தமாக விடுதலை ஆனார்.

வெளிநாட்டு தொழிற் குழும பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பெரிய பெரிய தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு கொண்டுவர அவர் காட்டும் ஆர்வம், அவர் ஆளுகையின் கீழ் தமிழகம் வந்தால் தொழில் துறையில் தமிழகம் தன்னிறைவடையும் என்பது திண்ணம். 'சிங்காரச் சென்னை' என்ற வார்த்தைப் பிரயோகத்தை பிரபலமாக்கிய அவர் ஆட்சிப் பொறுப்பேற்றால் கூவம் ஆற்றில் குட்டிக் கப்பல் ஓடலாம், மெட்ரோ ரயில் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே நிறைவேற்றப் படலாம்,.... இப்படியே இன்னும் பல 'லாம்' கள் சேர்ந்து சென்னை சொர்க்கமாக மாறுமா? மாறாதா? என்பதை... ஸ்டாலின் மனோநிலையை நன்கு அறிந்த சென்னை வாசிகளின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்!

ஏனென்றால் கே.ஏ.கே. மறைவிற்குப் பின் நடந்த ஒரு தேர்தலில், ஆயிரம் விளக்கு தொகுதி வாக்காளர் என்ற முறையில் 'சோ' அவர்களிடம் பேட்டி கண்ட பொழுது, கருணாநிதியை முழுமையாக எதிர்த்தாலும், எங்கள் தொகுதிக்கான சிறந்த மக்கள் பிரதிநிதி என்ற வகையில் ஸ்டாலினை ஆதரிப்பதாக சொல்லியிருந்தார். அதேப்போல் சுனாமி நிவாரண நிதியை வீண் கௌரவம் பார்க்காமல், நேரில் சென்று, காத்திருந்து ஜெயலலிதாவை சந்தித்து கொடுத்தது... இவை எல்லாமே எதிர்ப்பாளர்களிடமும், எதிரிகளிடமும் தன்னுடைய நிதானமான, தெளிவான செயல்பாடுகளால், தமிழகத்தின் பொது பிரச்சினைகளான இலங்கை, காவிரி, முல்லைப் பெரியாறு, போன்ற இன்னபிற பிரச்சினைகளில், முக்கிய எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தமிழக கட்சியினருடனும் ஒன்றிணைந்து செயல்பட்டு, கோரிக்கைகளை ஒரே குரலாக தமிழகத்திலிருந்து எழுப்பி தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் உண்மையான நியாயம் கிடைக்கப் போராடும் தலைவராக திகழ்வார் என்பதை காட்டுகிறது.

கருணாநிதியால் தான் ஸ்டாலின் வளர்ந்தார் என்பது ஒரு கோணத்தில் உண்மை என்றாலும், அதுவே தான் அவரது அடுத்தகட்ட வளர்ச்சிக்கான முட்டுக்கட்டை என்பதையும் மறுப்பதற்கில்லை. இப்பொழுது கருணாநிதி அமைச்சரவையில் ஒரு மந்திரி என்ற வகையில் அவர் தன்னுடைய கடமைகளை உள்ளாட்சியில் மிகத்திறமையாகவும், எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக, கிராமத்துப் பெண்களிடம் பெரிய அளவிற்கு அபிமானத்தையும், ஆதரவையும் பெற்ற நபராகத் திகழும் அளவிற்குமாகவும் செயல்படுகிறார்.

வறுமையில் பிறந்து, வளர்ந்த கருணாநிதிக்கு பணமும், பதவியும் ஒரு லட்சியக் கனவாக இருந்து, அதற்காக பல சமயங்களில் மக்கள் நலனுக்கு எதிராக சமாதானங்களை செய்து கொண்டிருந்திருக்கலாம். ஆனால் செல்வத்தில் பிறந்து, முழுநேர அரசியலுக்கு வந்தபின்பும், எம்.எல்.ஏ வாக இருந்தும்,  12 ஆண்டுகள் கருணாநிதி முதல்வராக இருந்தும், கடந்த ஐந்து வருடங்களாக மட்டுமே அமைச்சர் பதவியில் இருக்கும் ஸ்டாலின், அதற்கெல்லாம் மசிபவராகத் தெரியவில்லை. அவருக்குத் தேவை பேர், புகழ் அவ்வளவுதான். இதுவரைக்குமான அவரது செயல்பாடுகள் இதைத்தான் பிரதிபலிக்கின்றன.

மேலும் சில தினங்களுக்கு முன் கருணாநிதி, அடுத்த முதல்வராக வர தனக்கு விருப்பமில்லை என்று சற்றுத் தெளிவாகவே அறிவித்து விட்டார். வரும் தேர்தலில் வெல்லப்போவது யார் என்று தெரியவில்லை.என்றாலும் 'இது ஒன்று மட்டுமே களம் இல்லை',  நிறையவே இருக்கின்றன, ஆதலால் "வாருங்கள் ஸ்டாலின்..... பதவி ஏற்க!!!

"இதற்கும் தானே ஆசைப்பட்டாய் கொக்கரக்கோ..."!!!

2011 ஆம் வருடம், ஜனவரி 26 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!

முன் குறிப்பு: தலைப்பை பார்த்தவுடன், நான் வலைப்பதிவாளர் ஆன பின்னர் நேற்று முதல் முறையாக தமிழ்மண சூடான இடுக்கை பகுதியில் வந்தமைக்கான பதிவு என்று நினைத்து வந்திருப்பவர்களுக்கு... மன்னிக்கவும், இது வேறு ஒரு விஷயத்திற்கான சுய சொறிதல் பதிவு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

                           *****************

இன்னைக்கு குடியரசு தினம், ஒரு முபபது முப்பத்தியஞ்சு வருஷத்துக்கு முன்ன இதே நாள்ல என்கிட்ட கேட்டா, இத கொடி ஏத்தி மிட்டாய் குடுக்குற நாள்னு தான் சொல்வேன்!

அப்பல்லாம் குடியரசு தினம், சுதந்திர தினம்னா உடனே மனசுக்குள்ள துள்ளலான சந்தோஷம் ஆரம்பிக்கும். பின்ன அது கொஞ்சம் கொஞ்சமா மாறி, ஒருவித வருத்தத்துடன் கூடிய ஏக்கமாக அந்த நாள் முடிவுக்கு வரும்.

சந்தோஷத்துக்கான காரணம் சொல்லவே வேண்டாம், எல்லாருக்குமே கிட்டத்தட்ட அது வாய்த்திருக்கும். முதல் காரணம்னா, அன்னிக்கு ஸ்கூல் லீவு, இரண்டாவது காரணம் அன்னிக்கு ஸ்கூலுக்கு போனா அரை மணி நேரத்திற்கு யார் யாரோ பேசிவிட்டு, மிட்டாய் வேறு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்!

வீட்டுக்கு வரும் வழியில் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றால் அங்கும் கொடி ஏற்றி விட்டு 'சாக்லெட்' தந்து கொண்டிருப்பார்கள். அங்கு சாக்லெட் வாங்க வேண்டும் என்றால் சில பல உள்ளடி அரசியல்(!) வேலைகள் செய்ய வேண்டும். அது என்னன்னா ஸ்கூல்ல மிட்டாய் கொடுத்த அடுத்த வினாடியே அங்கிருந்து 'எஸ்' ஆக வேண்டும். கிராஃட் சார், பி.டி சார் இருவர் கண்களிலும் மண்ணை தூவி விட்டு வருவதில் தான் த்ரில்லே இருக்கு. அதிலிருந்து  இரண்டாவது நிமிடத்தில் முனுசிபாலிட்டி என்று அழைக்கப் படுகிற நகராட்சி அலுவலகத்தில் ஆஜராகி விட வேண்டும். அங்கு ஒரு சின்ன அரசியல் வேலையை கச்சிதமாக செய்தால் வெற்றி நிச்சயம். அது என்னன்னா, எங்கள் வார்டு கவுன்சிலர் தங்கவேல் தேவர் நிற்கிற இடத்திற்கு வேகமாக முன்னேறி(!) அவர் அருகில் நின்று கொண்டால் போதும். பிறகு எல்லாமே தானாக நடந்துவிடும்!! இதுக்கு ஏன் இவ்வளவு முன்னெடுப்புன்னா, ஸ்கூல்ல எல்லாம் வெறும் ஒத்த காசு சாக்லெட் தான். ஆனால் இங்கு பத்து காசு சாக்லெட்! இப்ப சொல்லுங்க இதுக்கெல்லாமா இவ்வளவு கஷ்டப்படுவாங்களான்னு நீங்க நெனச்சது தப்பு தான?!

சந்தோஷத்துக்கான காரணம் எல்லாம் சரிதான். இங்க எப்படி வருத்தம் கலந்த ஏக்கம் எல்லாம் வந்ததுன்னு நெனக்கிறிங்களா? வரேன்! எங்களது ஒரு மிடில் கிளாஸ் குடும்பம். கடைக்குட்டியான என்னையும் சேர்த்து நான்கு பிள்ளைகள். தினமும் மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் போது 'வாங்கி தின்பதற்காக' அம்மா கொடுத்தனுப்புவது 5 பைசா! குடியரசு / சுதந்திர தினம் என்றால் முதல் நாள் 5 பைசாவையும் மறுநாள் 5 பைசாவையும் சேர்த்து 10 காசுக்கு ஒரு கொடி வாங்கி சட்டைப் பையில் குத்திக் கொண்டு செல்வோம். இங்கு தான் பிரச்சினையே. கொஞ்சம் வசதியான வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் துணிக்கொடி வாங்கி குத்திக்கொண்டு வருவார்கள். அது  20 பைசா!

நான்கு நாள் மாலை தின்பண்டத்தை தியாகம் செய்து துணிக்கொடி வாங்கும் அளவிற்கு தியாக மனப்பான்மையும் இல்லை, அதே சமயம் துணிக்கொடி ஆசையையும் மனம் விட்டுத்தருவதாயில்லை. பள்ளியிலும், நகராட்சியிலும் மிட்டாய், சாக்லெட் எல்லாம் வாங்கிய மகிழ்ச்சியில் அடுத்த வருடமும் கொஞ்சம் கூட பிளான் மிஸ் ஆகாமல் இதே போல் இரண்டு இடத்திலும் வாங்கிவிட வேண்டும் என்று சக நண்பர்கள் பேசியபடி வந்து கொண்டிருக்க... என் மனம் மட்டும் அடுத்த வருடம் துணிக்கொடி தான், என்பதில் லயித்திருக்கும். அடுத்தடுத்த வருடங்களில் அதற்கான முன்னெடுப்பைக் கூட்டி அதுவும் சாத்தியமாக, அடுத்ததாகத்தான் அந்த விபரீதமான ஆசை மனதில் ஊற்றெடுக்க ஆரம்பித்தது...

அப்படியே பிளாக் & ஒயிட் படத்தை கட் பண்ணிவிட்டு, கலர் படத்திற்கு வாங்க மக்கா..! சென்ற ஆகஸ்டு மாதத்தில் ஒரு நாள், மாயவரத்தில் தற்பொழுது பிரபலமான A.R.C. விஸ்வநாதன் கல்லூரியின் ஆட்சிமன்ற குழு செயலரும் அக்கல்லூரியின் முன்னால் முதல்வருமான, Dr. இளங்கோவன் அவர்களிடம் இருந்து எனக்கு செல்பேசி அழைப்பு. "நீங்கள் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவிற்கு எங்கள் கல்லூரியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறீர்கள், நீங்கள் தான் கொடி ஏற்றி பேச வேண்டும் - சம்மதமா?" என்றார்.

ஆடுகளம் படத்தில் அந்த அழகுப் பெண் தனுஷைப் பார்த்து காதலிப்பதாக சொன்னவுடன், கைலியை தூக்கி விட்டு போடுவார் பாருங்கள் ஒரு ஆட்டம்... அதே நிலை தான் எனக்கும். சரி சார் கண்டிப்பாக வந்துவிடுகிறேன் என்று ஒற்றை வரியில் சம்பாஷணையை உடனடியாக முடித்துக் கொண்டேன்.

அந்த நாள் முதல் எம்.எஸ் அம்மாவின் பிரபலமான "அந்த நாளும் வந்திடாதோ" பாடல் மட்டுமே எனக்கு பிடித்த பாடலாகி விட்டது. 'அந்த' நாளும் வந்தது. இந்த சந்தோஷம் எல்லாம் ஓக்கே தான், ஆனால் மனதிற்குள் ஏனோ ஒரு நெருடல். "இதற்காகத்தானே ஆசைப்பட்டாய்" பாணியில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒரு குடியரசு தினத்தன்று மனதில் எடுத்துக் கொண்ட வைராக்கியம் நிறைவேறும் மகிழ்ச்சி ஒருபுறம் என்றாலும், இந்த மரியாதைக்கு நான் முழு தகுதி உடையவன் தானா என்ற கேள்வியும் மனதின் ஒரு பக்க மூலையில் நிலை கொண்டிருந்தது.

என்.சி.சி மாணவர்களால் மேடைக்கு அழைத்துவரப்பட்டு, பின்பு கொடிமர மேடைக்கு சென்று அந்த என்.சி.சி தலைவர் கொடிக்கயிற்றைப் பிரித்து என் கைகளில் தந்து, அதை நான் கீழே இறக்க இறக்க நம் தேசிய கொடி மேலே.. மேலே எழுந்த கம்பீரம் இருக்கிறதே...! அதோடு சேர்த்து என்னையும் தான் அந்த பாரத மாதா உயரே.. உயரே... கொண்டு செல்கிறாள்.

அதன் பிறகு எல்லாமே தன்னிச்சையாக நடப்பது போன்ற உணர்வு. மனதுக்குள் ஒரு அமைதி.., பூரணம்...!

அந்த நிலையிலேயே மேடையில் நின்று மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, இதற்கெல்லாம் நான் எந்த விதத்தில் தகுதியானவன் என்ற கேள்வியோடு மேடையில் அமர்ந்திருக்க, கல்லூரி குழுமத்தின் தாளாளரும், முதல்வரும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் என்னை ஏன் சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள் என்ற காரணத்தை எடுத்துரைத்த பொழுது, என் மனதில் இருந்த நெருடல் கொஞ்சம் கொஞ்சமாக விலகி, இதைக் காப்பாற்றி, அடுத்த நிலைக்கு செல்ல வேண்டுமே என்ற பயமும் ஜாக்கிரதை உணர்வும் என்னை தொற்றிக் கொண்டது.

நான் பேச வேண்டிய நேரம், அழைப்பும் வந்து விட்டது. ஒரு பத்து நிமிடம் பேசலாம் என்று தான் வ்ந்திருந்தேன். ஆனால் என் மனதிற்குள் ஏற்பட்டிருந்த ஒரு பூரணம், மனப்பாடப் பகுதியை எல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு, மனதில் தோன்றியதை நேர்மையாகப் பேச வைத்தது. பேச்சை முடித்த போது 40 நிமிடங்கள் ஓடியிருந்தன.

வெளியே வரும் பொழுது, பிளாக் & ஒயிட் காலத்தில், துணிக்கொடி ஆசையும் நிறைவேறிய பிறகு, ஒரு காலத்தில் நானும் ஒரு நாள் தேசியக் கொடி ஏற்றுவேன், அதற்கு என்னென்ன தகுதி தேவையோ அவை அனைத்தையும் உருவாக்கிக் கொள்வேன் என்று மனதிற்குள் உறு ஏற்றிக் கொண்டது நிறைவேறிய திருப்தி.

இந்த விஷயங்களை நான் வலைப்பதிவராக ஆகியிருக்கும் இந்த வருட குடியரசு தினத்தில், உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன். திரும்பவும் சொல்கிறேன் இது ஒரு சுயபுராண பதிவு தான். மன்னிக்கவும்.

கருணாநிதியை திட்டினால் என்ன கிடைக்கும்?!

2011 ஆம் வருடம், ஜனவரி 25 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!

யார் பற்ற வைத்த வதந்தி இது என்றே தெரியவில்லை. ஒரு வேளை கேரள நம்பூதிரி அல்லது பணிக்கர் யாராவது கிளப்பி விட்டிருக்கலாம் என்று கூட தோன்றுகிறது.

என்னன்னு புரியலையா?.. கொஞ்ச காலமாக தமிழக அரசியல் அல்லது ஊடகங்களை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்குப் புரிந்திருக்கும். அதாவது அரசியல், சினிமா, ஊடகம்... இப்படி முக்கியமான துறைகளில் ஒருவர்  தான் இருக்கும் நிலையிலிருந்து முன்னேற நினைத்தால்..., உடனடியாக அவர் செய்யும் காரியம், கருணாநிதியை ஒரு பிடி பிடித்து அறிக்கை விடுவது அல்லது (கொஞ்சம் பயம் மாதிரி ஏதாவது இருந்தால்) கருணாநிதிக்கு எதிரானவர்களிடம் போய் சரணடைவது, இல்லையேல் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிடுவது, இப்படி ஏதாவது ஒன்றை செய்வது வழக்கமாகி விட்டது!

இது கொஞ்சம் ஓவரா தெரியுதா? சமீபத்திய தமிழக -அரசியல்- பிரபலங்களை எல்லாம் கணக்கெடுங்கள் புரியும். விஜயகாந்த், விஜய், அஜித், சீமான், இளங்கோவன், இளைஞர் காங்கிரஸ் யுவராஜ், பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத்,.... என்று இந்தப் பட்டியல் நீ..ண்டு கொண்டே செல்லும்.

நம் வலைப்பதிவாளர்களில் கூட சிலர் கருணாநிதியை திட்டியே பிரபலமடைந்துள்ளனர். இதற்காக உண்மை தமிழன் கருணாநிதிக்கு 1008 தேங்காய் உடைக்கும் அளவிற்கு கடமைப் பட்டுள்ளார்! (நான் கூட அந்த நினைப்பில் தான் இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன்! ஹி..ஹி...!)

இதெல்லாம் கூட பரவாயில்லை, நீரா ராடியாவிடம் கனிமொழி, கருணாநிதி பற்றி அடித்ததாக சொல்லப்படும் கமெண்ட் இருக்கிறதே... ஆஹா இதை விடவா ஒரு உதாரணம் தேவை.? மற்ற பிள்ளைகள், துணை முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் ஆவதற்கு என்னென்ன திட்டினார்களோ தெரியவில்லை. இப்பொழுதாவது இரண்டாம் பத்தியில் எழுதியிருப்பது உண்மை என்று புரியும் சரியா?

விஜயகாந்த் தான் இதில் ரொம்ப சூப்பர்! அவரை தூக்கத்தில் எழுப்பி நீங்கள் ஏன் கருப்பாக இருக்கிறீர்கள் என்று கேட்டால் கூட, டக்கென்று கருணாநிதி தான் காரணம் என்பார்! அவர் இப்படி நடந்து கொள்வதற்கு நியாயமான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. எம்.ஜி.ஆர். செய்த அத்தனையும் தானும் செய்தால், முதல்வராகி விடலாம் என்று அவர் மனதில் அழுத்தமாக பதிய வைக்கப் பட்ட ஏதோ ஒன்று தான் இப்படி அவரை ஆட்டிப் படைக்கிறது. பிரேமலதா தான் பார்த்து சூதானமா நடந்துக்கனும்!

இதில் விஜய் செய்வது தான் ஓவர் நக்கல். உளியின் ஓசை, இளைஞன்... இதெல்லாம் ஓடாம போனதற்கு என்னைக்காவது விஜய் தான் காரணம் என்று கருணாநிதி சொல்லி இருக்காரா?! பின்ன ஏன் விஜய் மட்டும் அவர் படம் ஓடாததுக்கு கருணாநிதி தான் காரணம் என்கிறார்?

ஆனால் அஜித் கொஞ்சம் ரீஜெண்ட். அங்க இங்க சுத்தி வளைக்காம, கருணாநிதிய நேராவே திட்டிட்டார். பட் இந்த 'தில்' கருணாநிதிக்கு புடிச்சி போய்ட்டதால, இன்னும் வேணும்னா ரெண்டு சேர்த்து திட்டிட்டு 'மாவீரன்' பட்டத்தை நீ வாங்கிக்க, மங்காத்தா லாபத்தை (படத்தை தயாரித்து) என் பேரன் வாங்கிகட்டும்னு சொல்லிட்டார்!!

இப்பொழுது ஊடக வெளிச்சத்தில் இருக்கும் அரசியல்வாதிகளைப் பார்த்தால் எதிரணியில் இருக்கும் பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத் பேசுவதை தவறாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏன் இளங்கோவன் கூட பழைய பகையில் பேசுவதாக எடுத்துக் கொள்ளலாம், ஆனால் கார்த்திக் சிதம்பரம், யுவராஜாவுக்கெல்லாம் என்ன வந்தது? மற்றவர்கள் கூட கருணாநிதியை திட்டுகிறார்கள், ஆனால் யுவராஜ் ஒரு படி மேலே போய் கருணாநிதி பதவி விலகி ஸ்டாலினுக்கு வழிவிட வேண்டும் என்கிறார்!

இந்த கருமாந்திர பதவிக்காகத்தானே, தன் இன அழிப்பையே கண்டும் காணாமல் இருந்து, தீராத பழியை எல்லாம் தன் தலையில் ஏற்றுக் கொண்டு எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்டா.. ஸ்டைலில் நின்று கொண்டிருக்கிறார்! அவரைப் போய் பதவியை விட்டுத் தரச் சொல்கிறாரே இந்த யுவராஜ். கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டாரோ..?!

இது எதுக்குமே கொஞ்சம் கூட அசராமல், ஏன் அதற்கெல்லாம் பதில் கூட சொல்லாமல், கல்லுலி மங்கனாட்டம் கருணாநிதி இருப்பதைப் பார்த்தால், வசைபாடுபவர்கள் அனைவருமே, முன்னதாக கருணாநிதியைப் பார்த்து திட்டுக்கு தகுந்தாற் போல் தட்ச்சிணை வைத்து விடுவார்கள் போலிருக்கிறது!

ஆனால் இவர்கள் பேசுவதை எல்லாம் பார்த்தால் ஒரு நியாயம் இருப்பதாக கூட தோன்றுகிறது. கர்ம வீரர் காமராஜரில் ஆரம்பித்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று தமிழக முன்னால் முத்ல்வர்கள் அனைவருமே கருணாநிதியை கடுமையாக எதிர்த்து தாக்கிப் பேசியவர்கள் தான். அதனால் தான் விஜயகாந்த் முதல், முதல்வர் கனவில் இருக்கும் அனைவருமே, முதல் வேலையாக கருணாநிதியை எதிர்த்துப் பேச, ஸாரி திட்டிப்பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், தமிழக அரசியலில் கருணாநிதி என்ற பாத்திரம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், பத்திரிகையாளர் 'சோ'  இத்தனை நாள் எப்படி வண்டி ஓட்டியிருப்பார்?! கருணாநிதியைப் பற்றி எழுதாமல் ஒரு மண்டலம்.. அதாங்க எட்டு வர்ரம் துக்ளக்கை வெளியிடச் சொல்லுங்கள், அதன் பிறகு துக்ளக்கிற்கு சங்கு தான்!

இதெல்லாம் ஓக்கே தான், கருணாநிதியை எதிர்த்து முன்னேறியவர்கள் ஒரு பக்கம் இருப்பது கூட உண்மை தான். அதே போல் தற்பொழுது கருணாநிதியை திட்டிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த செண்டிமெண்ட் வேலை செய்யுமா?

ஒரு படத்தில் செந்தில் முகத்தில் விழித்து விட்டுப் போனால் நல்லது நடக்கும் என்று ஒரு ஜோசியக்காரன் சொன்னதை நம்பி கவுண்டமணியும் செய்து படிப்படியாக அடிபட்டு நொந்து போவது... ஏனோ நினைவுக்கு வருகிறது...!

ஏனென்றால், கருணாநிதியை எதிர்த்து வென்றவர்கள் அனைவருமே, கருணாநிதிக்கு சற்றும் குறையாத உழைப்பு, அனுபவம், புத்திசாலித்தனம், இன்ன பிற நற்குணங்களையும், அதற்கெல்லாம் மேலாக உண்மையான் பொது நல சிந்தனையும், தொலை நோக்குப் பார்வையும், அவரை விட கூடுதலான நேர்மையோடும் விளங்கியவர்களாக இருந்தார்கள் என்பது தான் உண்மை.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு புதிதாக அரசியல் களத்திற்கு வருபவர்கள் எதிர்ப்பு அரசியலை கையிலெடுக்காமல், அனைத்து துறைகளிலும் நாட்டிற்கும், மக்களுக்கும் தொலை நோக்கில் பயன் தரக்கூடிய கொள்கைகளையும், திட்டங்களையும் வடிவமைத்து, அதன் அடிப்படையில் போராடி, மக்களுக்கு புரியவைத்து, நேர்மையோடும் - ஒழுக்கத்தோடும் செயல்பட்டால் வெற்றி ஒரு நாள் நிச்சயம் கைகூடும்!

வேதாரண்யத்து வலைஞனே...!

2011 ஆம் வருடம், ஜனவரி 23 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!
 

 வேதரண்யத்து வலைஞனே!
வீழ்ந்து பட்டாயே (குரல்)வளையில்...!

வெந்து தணிந்தாயே, சந்தனமாக;
வருந்தி தவிக்கிறோம் (ஜ)சட(ல)மாக.

மாற்றுத் திறனாளி நீ... உடலாலே!
மாறாத தியாகியானாய்... உலகிலே..!

உன் ஒரு உயிருக்கு ஓராயிரம் பலி வாங்கியிருக்கும் - பழைய சோழர் படை..!
பல்லாயிரம் உயிர்களை பலி கொண்டவருக்கு உன்னை - படையலிட்டிருக்கிறது வீணர் படை..!

பக்கத்து ஊர் பாண்டியனுக்காக
போய் விட்டாயா பாதுகாப்பாக...!?

பார்த்துப் பார்த்துப் பழகி மட்டுமே போய்விட்ட - எங்களுக்கு
பயந்து பயந்து வாழ மட்டுமே - இனி விதி போலும்!

பக்கத்து வீட்டில் தானே பாடை என்று தேமேயிருந்தோமே - இன்று
பத்து நாளைக்கு ஒரு பாடை தேடி வருகிறதே - இங்கு!

இப்படியே விட்டால் இது நாளுக்கு பத்து என்று ஆகிவிடாதோ?
இனியொரு விதி செய்யாவிட்டால் நாளும் பொழுதும் - இங்கு அழுகுரல் தானோ!?

ஒரு சொடுக்கில் மாற்றி இருக்கலாம்,  இக் கொடுமையை - ஆனால்
வெறும் சம்பிரதாய நிவாரணங்களால், மறக்கடிக்கின்றனர் - ஆட்சியாளர்கள்! 

என்ன செய்யப் போகிறாய் இந்திய தமிழினமே?
எழுந்து ஒன்றிணைந்து போராடு - உலகத் தமிழனோடு...!


திஸ்கி: பத்து நாட்களுக்கு முன் பாண்டியன் என்ற மீனவர், இன்று ஜெயக்குமார்...  ஒரு மாற்றுத் திறனாளி என்று கூட பாராமல் கழுத்தறுத்திருக்கிறார்கள்...  நெஞ்சம் பொறுக்கவில்லை. அவர்களை அழிக்கச் செல்வதற்கு பாலம் கட்ட உதவிய ஒரு அணிலின் நிலையிலிருந்து, சிறு கல்லை எடுத்து வைத்திருக்கிறேன். அவ்வளவே!

ஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக....! (ஒரு ஆன்மீக / கலை பயண அனுபவம்)

2011 ஆம் வருடம், ஜனவரி 20 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!

கடந்த மாட்டுப் பொங்கல் அன்று தமிழ் கூறும் நல்லுலகினர் அனைவரும் மாட்டை விரட்டி (மாடு இல்லாதவர்கள் டீ.வி. சேனல்களை விரட்டி) பொங்கலை கொண்டாட தயாராக, நான் எனது மனைவி, மகன் சகிதம் ஒரு நண்பர் கம் ஆடிட்டர் (35 வயது மட்டுமே என்னை விட மூத்தவர்) உடன் வர காரை விரட்டிக் கொண்டிருந்தேன் - "ஸ்ரீ ஆத்மநாத சுவாமி" அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஆவுடையார் கோவிலுக்கு.

மாயவரத்திலிருந்து அதிகாலை 4.45 க்கு புறப்பட்ட நாங்கள் புதுக்கோட்டையில் காலை டிபன் முடித்து, அறந்தாங்கி வழியாக "ஸ்ரீ யோகாம்பிகை சமேத ஆத்மநாத சுவாமி" ஆலயத்திற்கு வந்து சேர்ந்த பொழுது மணி சரியாக மணி 10- ஐ தொட்டிருந்தது.

சாதாரணமாக எல்லா கோவில்களிலும் ராஜ கோபுரத்தை தாண்டியதுமே கொடிமரம், நந்தி, அதைப்பிடித்து நேர் கோட்டில் முன்னேறினால் பலி பீடம் பின்பு மூலவர் என்றிருக்கும். இந்த கோவிலில் அது எல்லாமே மிஸ்ஸிங்..!

உள்ளே நுழைந்த உடனேயே எல்லா கோவில்களிலும் நாம் பார்த்துப் பார்த்து பழகிப்போன இந்த ஆன்மீக அடையாளச் சின்னங்கள், இங்கு விடுபட்டிருப்பதே... நமது "எண்ண அலைக்கற்றைகள்" அனைத்தையும் ஒன்று திரட்டி அக் கோவிலின் ஊடே வலு கூட்டப்பட்ட ஒரே கீற்றாகப் பரவி, நான்.., நாம்..., நமது... எல்லாம் மாறி 'அது - இது' என்ற ஜீவனாகி "இது" அங்கு ஏற்கனவே பல்கிப் பெறுகி முழுமையாக வியாபித்து இருக்கும் ஸ்ரீ ஆத்மநாத சுவாமி என்று அழைக்கப்படுகின்ற "அரூப ஆவியின்" அதாவது "பர{ம்}த்தின்" ஒரு அங்கம் தான், அதன் ஒரு பகுதி தான் 'இது' என்ற 'பொருள்' விளங்கப் பெற்று, மரத்துப் போயிருந்த இதற்கும் - அதற்குமான உறவுப் பாலம், உணர்ச்சியூட்டப்பட்டு, இரண்டும் ஒன்று தான் - அனேகமும் ஏகம் தான்!! என்ற விழிப்பு நிலையை இது அடைந்து... அடடா அற்புதம்!

கோவிலை விட்டு வெளியே வரும் வரை கிட்டத்தட்ட இதே நிலை தான்!

சமயக்குறவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீ மாணிக்க வாசகர் கட்டிய கோவில் அது. இங்கு உற்சவர், நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர் உட்பட பெறுவாரியான பாத்திரங்களை அவரே ஏற்றிருக்கிறார். அனைத்து விதமான மரியாதைகளையும் "சுவாமி" அவரே ஏற்றுக் கொள்கிறார்.

உலகின் பெறும்பான்மையான மக்களால் (மதங்களால்) ஏற்றுக் கொள்ளப்பட்ட "இறைவன் ஒருவனே" அதுவும் உருவம் இல்லாதவன் (எந்த உருவமாகவும் இருக்கக்கூடியவன்) என்ற தத்துவத்தை பரை சாற்றுகின்ற இடமாகவே இத் திருக்கோவில் அமைந்திருக்கிறது.

மூலவரை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட அரூபத்தின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கின்றது. எல்லா சிவன் கோவில்களிலும் இருப்பது போன்ற வடிவிலான லிங்கம் இங்கு காணப்படவில்லை. கிட்டத்தட்ட நம் கண்ணுக்கோ அல்லது அறிவிற்கோ கணிக்க முடியாத 'வடிவம்' தான் அங்கு!. படையல் கூட தினமும் ஆறு காலமும் மூலவர் முன் உள்ள பெரிய படைக்கல்லில் சுடச்சுட வடித்த சாதத்தைக் கொட்டி அதில் பாகற்காய் குழம்பை ஊற்றி, அதிலிருந்து வரும் ஆவி கருவரை முழுக்க வியாபித்த பின் தீப ஆராதனை எடுக்கப்படுகின்றது. "அந்த ஆவிக்குத் தான் ஆராதனையே"..!

ஆவி வடிவுடையார் என்பதால் தானோ என்னவோ திருப்பெருந்துறை என்ற அந்த ஊருக்கு ஆவுடையார் கோவில் என்ற பெயர் வந்தது போலும்.

ஆராதனை முடிந்த பின் சோற்றையும், குழம்பையும் படைக்கல்லிலேயே கலந்து, அங்கு வரும் பக்தர்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்கப்படுகின்றது. இது தினமும் ஆறு காலமும் தவறாமல் நடைபெறுகிறது.

இறைவன் ஏகன் - அரூபன்; அண்டி வருபவர்களுக்கு உடனடியாக ஆகாரம் அளித்து பசிப்பிணி போக்குபவன். இவை அனைத்தும் அங்கே தினமும் நிகழ்த்திக் காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அடுத்து உடையவரின் சரிநிகர் சமபாதியாக விளங்கக் கூடிய உமையவள் "ஸ்ரீ யோகாம்பிகை" என்ற பெயருடன், உடையவர் அரூபனுடன் இரண்டற கலந்து பிரித்துப் பார்க்க முடியாதவளாய் எப்பொழுதும் யோக நிலையிலேயே இருப்பதான ஒரு தோற்றம். அதுவும் நம் கண்களுக்கு புலப்படாது! நாற்பது துளைகள் கொண்ட கருங்கல் ஜன்னல் ஊடாக மட்டுமே தரிசிக்க இயலும். அதுவும் ஒரு உருவத்தை காண வழியில்லை. ஏனென்றால் இத் திருத்தலத்தில் எங்கும் வியாபித்திருக்கும் அரூபம் தானே --- இறை என்பது?!

இனிமேல் தான் நம் ஹீரோ! பொன்னியின் செல்வன் நாவலில் உண்மையான நாயகன் அருண்மொழித் தேவர் என்றால், மக்களின் நாயகன் வந்தியத்தேவன் என்பது போல், இத் திருத்தலத்தில் அனைத்தும் "ஆத்மநாத சுவாமி" என்றாலும் மக்களோடு தொடர்புடைய மற்ற லௌகீக  விஷயங்கள் எல்லாமே மாணிக்க வாசகருடையதுதான்.

திருவாதவூரர் என்ற இயற்பெயருடன் பாண்டிய நாட்டில் முதல் மந்திரியாக இருந்தவர், குதிரைகள் வாங்குவதற்காக பணத்துடன் கிழக்குக் கடற்கரை (ECR) பகுதிக்கு மன்னனால் அனுப்பப்பட, அவர் அந்த பகுதிக்கு வரும் பொழுது ஸ்ரீ ஆத்மநாத சுவாமியால் ஆட்கொள்ளப் பட்டு, ஆண்டவன் முன்னே ஆள்கிறவன் எம்மாத்திரம்?! என்று எதைப் பற்றியும் கவலைப் படாமல் குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தில் இத் திருக்கோவிலை கட்டி முடிக்கிறார். அது மட்டுமில்லாமல் அங்கேயே அமர்ந்து "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று போற்றப்படும் 'திருவாசகத்தை' இயற்றி இறைப் பணியோடு தமிழ் பணியும் ஆற்றினார்.

இத் திருக்கோவிலின் அமைப்பே வேறெங்கும் கண்டிராத வகையில் (நான் பார்த்த வரை) வித்தியாசமாகத்தான் அமைந்திருக்கிறது. இங்கு வருபவர்களுக்கு பக்தி மார்க்கத்தில் உருவ வழிபாட்டின் மூலம் சித்தி கிடைக்கும் என்ற ஆயாசமான, கிட்டத்தட்ட யாருக்குமே சித்தி கிடைக்காத நிலையை தவிர்த்து, தியான மார்க்கத்தில் ஞானத்தை அடைகின்ற உத்தியை தான் காட்டுகின்றது.

இப் பிறவியில் முக்தி கிட்டக் கூடிய யோக (தியான) மார்க்கத்தில் ஒவ்வொருவரும் கடக்க வேண்டிய ஆறு நிலைகளான மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி மற்றும் ஆக்ஞை ஆகியவற்றை கடந்து ஞானத்தைப் பெறுவது போல இங்கும் ராஜ கோபுரத்தின் உள் நுழைந்தால் ஆறு நிலைகளான கனக சபை, திருமாளிகைப் பத்தி மண்டபம், சுந்தர பாண்டியன் மண்டபம், தில்லை மண்டபம், அமுது மண்டபம் மற்றும் அர்த்த மண்டபத்தை கடந்து தான் பேரானந்தத்தை கொடுக்கக் கூடிய மூலவரை தரிசிக்க இயலும்!.

இக் கோவிலின் சிற்பங்கள் உலக பிரசித்தி பெற  தகுதி உடையனவாக இருந்தும் ஏனோ இன்னும் உள்நாட்டுப் பிரசித்தம் கூட முழுமையாக அடைந்ததாக தெரியவில்லை. இங்கு கற்பகிரஹம், அர்த்த மண்டபம், அமுது மண்டபம் நீங்கலாக மற்ற நிலைகள், மண்டபங்கள் அனைத்துமே மாணிக்கவாசகரின் ஆக்ஞை படி வெவ்வேறு கால கட்டங்களில் வேறு வேறு அரசர்களாலும், மடாதிபதிகளாலும் கட்டப்பட்டதாக தெரிகிறது.

அப்படி கட்டப்பட்ட ஒவ்வொரு மண்டபத்திலும் அல்லது நிலைகளிலும், வேறு எங்குமே காணப்படாத அமைக்கப்பட முடியாத சிறப்பம்சம் பொருந்தியதாக திகழ்வது தான் "கொடுங்கை" எனப்படும் வடிவத்திலான தேர்ச்சுற்று போன்ற மண்டப அமைப்பு. முழுவதும் மரத்தினாலேயே வேயப்பட்டது போன்ற தோற்றம். மேற்கூரைக்கு உட்புறமாக வரிசையான சரங்கள், இரண்டுக்கும் நடுவே சட்டங்கள். அந்த சரங்களை கோற்பது போல் திருகு ஆணி, அதற்கு நெட், வாஷர் எல்லாமே நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிறது.

இவை அனைத்துமே "கருங்கல்"!!. இது தான் இதன் சிறப்பே. பார்தவுடன் கருங்கல் என்றே நம்ப முடியாது. ஆங்கிலேயர்கள் கூட அதை துப்பாக்கியால் சுட்டுப் பார்த்து தான் 'கருங்கல்' என்று உறுதி செய்தனர். அந்த் காலத்தில் ஒரு மன்னன் கோவில் கட்ட கல் தச்சரிடம் சிற்பங்கள் செய்ய ஒப்பந்த ஓலை எழுதிக் கொடுக்கச் சொன்னால், "ஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக"! என்று எழுதித் தான் தாங்கள் செய்யப் போகும் சிற்பங்களை பட்டியலிட்டு எழுதித் தருவார்கள்.

இது எதைக் காட்டுகிறது? இந்தக் கோவிலின் சிற்பச் சிறப்பையா? அல்லது அதைப் பராமரிக்க இயலாத, ஏன்...? உலகம் முழுவதும் பரைச் சாற்றி அதன் பெருமையை எடுத்துக் கூற கூட வக்கற்ற நம்முடைய கையாலாகாத தனத்தை காட்டுகிறதா?

இந்த 'கொடுங்கை மட்டுமல்ல இங்குள்ள குதிரைச்சாமி சிலையின் குதிரை வீரனின் கைகளிலும், கால்களிலும் புடைத்திருக்கும் நரம்பு கூட துள்ளியமாக தெரியும் அளவிற்கு செதுக்கப்பட்டுள்ளது. உலகின் வேறு எந்த பாகத்திலும் இது போன்றதொரு நுணுக்கமான சிலையை காண்பதரிது என நினைக்கிறேன். அது மட்டுமன்றி கல்லிலேயே செதுக்கித் தொங்கும் சங்கிலி வளையங்கள், அதன் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக் கொண்டு தலையைக் காட்டுவது (எல்லாமே  கல்லில் தான்), 27 நட்சத்திரங்களின் உருவச் சிற்பங்கள், தத்ரூபமான ரதி - மன்மதன் சிலை -- அதில் மன்மதனின் கையில் உள்ள கரும்பில் வேர் கூட தெரியும்படியான ஒரு நுட்பம், தற்கால பட்டுப்புடவையில் உள்ள பார்டர் டிசைன்கள் செதுக்கப்பட்ட தூண்கள், 1008 லிங்கங்கள் செதுக்கப்பட்ட இரு பெரும் தூண்கள், இவை எல்லாம் வெறும் 10 சதவீதம் தான் கூறியிருக்கின்றேன்! 90 அங்கு இருக்கின்றது. எழுதி பயன் இல்லை. சென்று பார்த்தால் தான் பரவசம்!!

ஆன்மீக நாட்டமில்லாதவர்கள் கூட ஒரு தாஜ்மஹாலையும், எல்லோரா - அஜந்தாவையும் பார்ப்பது போல் இங்கு வரலாம். அதற்கெல்லாம் எள்ளளவும் குறையாத கலை விருந்து இங்கு கிடைக்கும். ஆன்மீக பயணத்தினால், பக்தியினால் பணம் வேண்டும், பலன் வேண்டும் என்று எண்ணாமல் முக்தி வேண்டும், ஞானம் வேண்டும் என்று எண்ணுகிறவர்கள் தவறாமல் வந்து செல்ல வேண்டிய திருத்தலம் இதுவாகும்.

உள்ளே நுழையும் போதே, பேரானந்த பெருவெளியில் நம்மை இழுத்துச் சென்ற இத் திருத்தலம், வெளியே வரும் போது அதன் ஈடு செய்ய இயலாத சிற்பக்கலை நுணுக்கங்களை நம் மனதிலேயே நிலை நிறுத்தி கல்லில் செதுக்கிய எழுத்துப் போல் நம் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது.

மாயவரம் வந்து சேரும் வரை நாங்கள் யாருமே தேவைகளுக்குத் தவிர பெரிதாக பேசிக் கொண்டதாகத் தெரியவில்லை. இதை எழுதி முடித்து பதியவிருக்கும் இந்த நேரத்தில் ஏதோ ஒரு கடமையை செய்தது போன்ற திருப்தியில் மனம் இலேசாவது போல் ஒரு உணர்வு!

   

Monday, July 11, 2011

நடுத் தெரு வர்க்கமாக ஆகும் நடுத்தர வர்க்கம்!!

2011 ஆம் வருடம், ஜனவரி 17 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!


"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்"....., "வரப்புயர.....குடிஉயரும்" என்ற பழம் பெறும் கவிஞர்களின் பாடல்களையும், "பசியோடு இருப்பவனுக்கு மீனை தருவதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுக்க" சொன்ன புதுமை சிந்தனையளர்களின் எண்ண்ங்களை போற்றி அதற்கு மாற்றுக் கருத்து கொண்டிராத தலைவர்களை, ஆட்சியளர்களை பெற்றிருந்த.., பெற்று இருக்கின்ற நம் தமிழகத்தின் தற்பொழுதைய நெற் கள்ஞ்சியமாம் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களின் உழவும், தொழிலும் படும் பாடு இருக்கின்றதே...!

ஏன்..? அங்கு விளைச்சலுக்கு என்ன பஞ்சம்?

முன்பு போல் இல்லை என்றாலும்   ஸ்டைலில் கர்நாடகா காரனை மிரட்டி.! உருட்டி..! கெஞ்சி...! கடைசியாக அழுது..! கொஞ்சம் தண்ணீரும்; ஐந்தாறு வருடங்களாக பொய்க்காமல் பெய்யும் வானத்தின் தயவில் கொஞ்சம் தண்ணீரும்; உடனடி மின் இணைப்பு மற்றும் நூறு சதவீத இலவச மின்சாரம் காரணமாக இரண்டு ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயி கூட போர் செட் வைத்துக் கொண்டு துண்டு விழாத தண்ணீர் பட்ஜெட் போட்டு விவசாயம் செய்கிறார்களே... பிறகென்ன குறைச்சல் இந்த மாவட்ட உழவுக்கும், அதைச்சார்ந்த தொழிலுக்கும்..!?

யார் செய்த புண்ணியமோ, தற்பொழுது தமிழகத்தில் சரியாக இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களும் இடையிடையே உள்ளாட்சி தேர்தல்களும் வருவதால், சராசரியாக ஒரு விவசாயி வாங்கும் நான்கு விவசாய கடன்களில் ஒன்று ஓட்டு அரசியலுக்காக தள்ளுபடி செய்யப்பட்டு விடுகின்றது. இந்த ஆண்டு முதல் வட்டியே இல்லாத கடனும் கொடுக்கப்படுகின்றது.

ஒரு விவசாயி சொந்தமாக நிலம் வைத்திருந்தாலே போதும், அந்த சிட்டாவை (Kissan credit card) வைத்து எந்த ஒரு தேசிய வங்கியிலும் அல்லது கூட்டுறவு வங்கியிலோ "கைமாற்றாக" (வட்டி இல்ல எனும் பொழுது 'கடன்' என்று எப்படி சொல்ல முடியும்) பணம் பெற்று விவசாயம் செய்து, மகசூல் நெல்லை விற்று தன்னுடைய லாபத்தை எடுத்துக் கொண்டு "கைமாற்றை" திரும்ப செலுத்தி விடலாம்.

இயற்கை இடற்பாடுகள் (அதிக மழை-வெள்ளம் அல்லது வறட்சி) நடுவில் வந்து பயிருக்கு குந்தகம் ஏற்பட்டால்..?

...இருக்கவே இருக்கிறது வெள்ள/வறட்சி நிவாரணம்! ஏக்கருக்கு இவ்வளவு என்று ஆளும் கட்சியும், எதிர் கட்சிகளும் அறிக்கைப் போரில் பேரம் நடத்தி ஒரு நல்ல தொகை கிடைத்து விடுகிறது. போதாக்குறைக்கு பயிர் பாதுகாப்பு திட்டமும் உண்டு.

சரி... விளைச்சலுக்குப் பின் விற்பது எப்படி?

மாநில அரசே ஆங்காங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் (DPC) அமைத்து விளைந்த நெல்லை வாங்கிக்கொள்கிறது. இந்திய தொலைக்காட்சிகளிளேயே முதன் முறையாக என்பது போல்.. தமிழக அரசு இந்த வருடம் நெல்லுக்கு இது வரை இல்லாத உச்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ. 10.50 என்று நிர்ணயித்து கொள்முதல் செய்திருக்கிறது. எனவே தனியார் வியாபாரிகள் ஒரு கிலோ நெல்லுக்கு ரூ 10.50 க்கு மேல் விலை கொடுத்தால் தான் விவசாயிகளிடம் நெல் வாங்க முடியும்.

விவசாயி என்ற ஒருவருக்கு சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கோ விளை நிலம் இருந்தாலே போதும்...

வட்டியில்லாத மூலதனம் (working capital) கொடுக்க ஆள்(bank) ரெடி! வானம் பொய்த்தாலும், கர்நாடகாகாரன் கைவிரித்தாலும் சரி..! பயிர் வளர்ச்சிக்கு தேவையான "சக்தி" (supporting power) அதாவது "தண்ணீர்" - இலவச மின்சாரத்தால் இயக்கப்படும் போர்செட் மூலம் கிடைத்து விடுகிறது.இப்போது அந்த போர்செட் மோட்டாரும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தற்போதைய செய்தி. இடையில் வெள்ளம்/வறட்சி யால் பாதிப்பு ஏற்பட்டால், வெள்ளம்/வறட்சி நிவாரண நிதி மூலம் அதுவரை போட்ட பணத்திற்கு பங்கமில்லை என்ற "Lowest Risk Factor" உள்ள தொழிலாக இருக்கினறது...!

அப்படி என்றால் விவசாயத்திற்கு ஒரு விவசாயி என்னென்ன செலவு செய்ய வேண்டும்?

ரொம்ப சிம்பிள்:

1. விதை நெல் காசு கொடுத்து வாங்க வேண்டும் ( அதையும் இலவசமாக அரசே கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு விட்டது. எனவே வரும் சட்டசபை தேர்தலில் முக்கிய கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இது கண்டிப்பாக இடம் பிடித்து யார் ஆட்சிக்கு வந்தாலும் செயல் படுத்தப்பட்டு விடும்.)

2. உரம், பூச்சி மருந்து - காசு கொடுத்து வாங்க வேண்டும். (அனேகமாக அடுத்த பொதுத்தேர்தலில் இதற்கும் ஒரு விடிவு கிடைத்து விடும்).தற்போது உரமானியமும் நிலுவையில் உண்டு.

3. விதை விதைப்பில் ஆரம்பித்து அறுவடை வரை உள்ள வேலைகளை செய்யும் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும்.

இந்த மூன்று இனங்களுக்கு தான் தற்பொழுது விவசாயம் செய்ய ஒரு விவசாயி செலவிட வேண்டும். தன் கை காசையோ, உறவினர்களிடம் கடனாகவோ அதற்கு வாங்க தேவை இல்லாமல் வட்டி இல்லா கடன் வங்கிகள் கொடுத்து விடுகின்றன. நடுவில் ஏதாவது இழப்பு ஏற்பட்டாலும் நிவாரண நிதி அல்லது கடன் தள்ளுபடி என்ற பெயரில் ஈடு செய்யப்பட்டு விடுகின்றது.

இந்த மூன்று செலவினங்களில் முதல் இரண்டும் இன்னும் ஐந்தாறு வருடங்களில் கண்டிப்பாக இலவசமாக்கப்படும் வாய்ப்பு மிக அதிகம். மூன்றாவது செலவினமான விவசாய தொழிலாளர்களின் கூலி தான் தற்பொழுது அவர்களுக்கு உள்ள ஒரே பிரச்சினை!

அதில் என்ன பிரச்சினை? இது நூறு நாள் வேளை திட்டம், ஒரு ரூபாய் அரிசி மற்றும் இன்னபிறவால் ஒட்டு மொத்த தமிழகத்திற்கே ஏற்பட்டுள்ள  அதி முக்கிய பிரச்சினை. இதைப் பற்றி விலாவாரியாக வேறொரு பதிவில் பார்ப்போம்.

தற்பொழுது மிக முக்கியமான ஒரு பிரச்சினைக்கு வருவோம். பிரச்சினை என்றால் அது விவசாயிகளுக்கோ, விவசாய தொழிலாளர்களுக்கோ இருப்பது அல்ல. ...பிறகு?

விவரம் புரியாமல் இவர்களைப் பார்த்து பரிதாபபட்டுக் கொண்டு, மேலேயும் போக முடியாமல் கீழேயும் இறங்க முடியாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும், உண்மையிலே பரிதாபத்திற்குறிய நடுத்தர வர்க்க சீமான்களுக்கு (நினைப்பில்) உள்ள பிரச்சினையை தான் தற்பொழுது பேசப் போகிறோம்.

ஒரு குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் பெறும் பங்கு வகிப்பது உணவு பொருட்கள் தான். அதுவும் தென் இந்தியாவை பொருத்தவரை அரிசி மட்டும் தான். விவசாய தொழிலாளர்கள் மற்றும் பிற பாட்டாளி இனத்தவர் அனைவரும் அரசின் ஒரு ரூபாய் அரிசியையே உபயோகித்துக் கொள்கிறார்கள். விவசாயிகளோ விளைச்சலில் ஒரு பகுதியை தங்கள் தேவைக்கு ஒதுக்கிக் கொள்கிறார்கள். ஆனால் பரிதாபத்துக்குறிய மேதாவிகளான நடுத்தர வர்க்கம்....?!

ரேஷன் அரிசி நன்றாக இருந்தால் கூட அதை வாங்கி உபயோகிப்பதில் ஒரு மானப் பிரச்சினை இருக்கிறது. தன் உரிமையை தான் பெறப்போவதில் அப்படிஎன்ன மானப்பிரச்சனை என்பதே புரியாத ஒரு வர்க்கம் அந்த நடுத்தர வர்க்கம்.

ரூ 10.50 க்கு அரசினால் கொள்முதல் செய்யப்படும் ஒரு கிலோ நெல்லை அரைத்து பகுத்தால் அரை கிலோ அரிசி தான் தேறும். ஆகவே ஒரு கிலோ அரிசியின் விலை ரூ21/= ஆகிறது. நெல்லை அரிசியாக மாற்றும் பொழுது ஏற்படும் உற்பத்தி இழப்பு (depriciation), இடம் மாறும் செலவு (logistic expenses), அரவை தொழிலாளர் கூலி, பேக்கிங் செலவு, மீண்டும் சந்தைப்படுத்தும் செலவினம், அதற்கும் மேல் குறைந்த பட்சம் 2 லிருந்து 5 சதவீத லாபம் எல்லாம் சேர்த்தால் ஒரு கிலோ அரிசியின் விலை கிட்டத்தட்ட ரூபாய் 26 லிருந்து ரூ. 27/= வரை ஆகிவிடுகிறது.

இந்த அரிசியை கடைக்காரர்கள் ஒரு லாபம் வைத்து விற்கும் பொழுது ரூ. 30/= ம் அதற்கு மேலும் செல்கிறது. ஆகவே மேற்படி அறிவுஜீவி நடுத்தர சீமான்கள் இந்த அரிசியை வாங்கி உபயோகித்து விட்டு விவசாயிகளுக்காகவும், விவசாய கூலிகளுக்காகவும் பரிந்து பரிதவித்து விவாதம் நடத்திக் கொண்டிருப்பார்கள்.

தாங்கள் யார்? எந்த குழுவில் (நிலையில்) இருக்கின்றோம்? என்னென்ன கோரிக்கைகளை அரசிடம் வைக்க வேண்டும்? என்று எதுவுமே தெரியாமல், அது பற்றி எந்த முயற்சியையும் இது வரை எடுக்காமல் எல்லா வகையான கூலி தொழிலாளர்கள் மற்றும் பாட்டாளி மக்களையும் விட மிக அதிகமாக மாடு போல் உழைத்து உண்மையான பரிதபத்திற்கு உரியவர்களாக அரசாங்கத்தின் சலுகைகளுக்கும், பாதுகாப்பிற்கும் நியாயமான தகுதி உள்ளவர்களாக இருந்தும் ஏமாளிகளாகவே இருக்கின்றார்கள்.

விவசாயிகள், பாட்டாளிகள், தொழிலாளிகள் என்று விதவிதமான பெயர்களில் உள்ளவர்களுக்கு அரசாங்கம் அள்ளிவிடும் இலவச திட்டங்கள் அனைத்துமே சுற்றி வளைத்து இந்த நடுத்தர சீமான்களையே தாக்கும்.

மேலே எடுத்துக் கொண்ட "அரிசி" என்ற விஷயம் 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'  என்பது போல் தான். நியூட்டனின் முதல் விதிப்படி "சக்தி" (Energy) மட்டுமல்ல..., ஒரு நாட்டின் பொருளாதாரமும் ஆட்சியாளர்கள் நினைப்பது போல் திடீர் என்று ஏற்றவோ, இறக்கவோ முடியாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொருளாதாரப் புழக்கம் போலியாக அல்லது செயற்கையாக உருவாக்கப்ப்ட்டால் அது கண்டிப்பாக வேறொரு இடத்திலிருந்து சுரண்டி எடுக்கப்பட்டதாகத்தான் இருக்க முடியும்.

அதாவது விவசாயிகளுக்கு (1) கடன் தள்ளுபடி, (2) வெள்ள நிவாரணம், (3) வட்டி தள்ளுபடி, (4) இலவச மின்சாரம், இதற்கெல்லாம் மேலாக (5) அதிக விலை நிர்ணயித்து கொள்முதல்.... இவை அனைத்தையும் ஈடு செய்வதற்கு கலியுக கர்ணன்கள் - ஆன இந்த நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் இன்னும் அதிகமாக தன் குடும்பத்தினர் அனைவரையும் சேர்த்துக் கொண்டு உழைக்க வேண்டும். வேறுவ்ழியில்லை?

மின்சார தட்டுப்பாடு இவன் தலையில். பெட்ரோல் வாராவாரம் ஏறித்தொலைத்தால் இவன் தலையில். அதனால் ஆட்டோ கட்டணம் முதல் ஆயாக்கடை ஆப்பம் வரை விலை ஏறினால் அதுவும் இவன் தலையில். 60000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டால்  அந்த அரசு இழப்பை தன் தலையில் பகிர்ந்து கொள்வது இவன். எல்லாவற்றுக்கும் நடுத்தர வர்க ஏமாளி சுமக்கும்போது இவனுக்காக வாதாட மத்திய அரசிலோ மாநில அரசிலோ எவரும் இல்லை. மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் கார்ப்பரேட் முதலாளிகள் காபந்து செய்யப்படுவர். மாநில அரசின் நிதி நிலை அறிக்கையில்  பாட்டாளிகளுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் சாதகமான விஷயங்கள் பிரித்து மேயப்படும். பாவம் நடுத்தர வர்க்கம் அனாதை ஆனந்தன் ஆகிவிட்ட நிலை என்பது அவனுக்கே தெரியவில்லை இன்னமும்.

இது தான் சரியான நேரம்..! பொறுமையின் எல்லைக்கோட்டிற்கு வந்தாகி விட்டது. இதற்கு மேல் ஒரு அடி சென்றாலும் "ஏமாளி" என்ற முத்திரை குத்தப்பட்டுவிடும்.

"ரொம்ப நல்லவன், எவ்வளவு அடித்தாலும் தாங்குறான்டா..!" என்ற வடிவேலுவின் பிரசித்தி பெற்ற காமெடி வசனத்திற்கு சொந்த்க்கார்களாகி விடுவார்கள் இந்த அறிவுஜீவிகள்.

அறிவுஜீவிகள் என்று அடிக்கடி இவர்களை அழைப்பது கிண்டலும் அல்ல பொய்யான வார்த்தையும் அல்ல. ஏனென்றால் இவர்கள் தோளில் தான் ஒட்டு மொத்த இந்தியாவின் படைப்பாற்றலும் பொருளாதாரமும், எதிர் காலமும், இன்ன பிற இத்தியாதிகளும் ஏற்றப்பட்டிருக்கின்றன.

இலக்கில்லாமல் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் அறிவாற்றலை ஒரு சில மணித்துளிகளாவது நிதர்சன நிலையை உணர செலவிட வேண்டும். அப்பொழுது தான் இந்தியாவின் பொருளாதாரம் சமநிலையில் இல்லாமல் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு ஒரு பக்கம் சோம்பேறிகளையும் மறு பக்கம் மிக அதிக உழைப்பால் களைத்து, அதற்கேற்ற வளர்ச்சி இல்லாமையால் விரக்தி மனநிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தையும் கொண்ட ஆபத்தான இந்திய கட்டமைப்பை தவிர்க்க இயலும். 

ஆக இந்த கட்டுரையின் முக்கிய சாராம்சமே இனி நடுத்தர வர்க்கம் நடுத்தெரு வர்க்கமாக ஆகும் சூழலில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போதைய கேள்வி.அந்த கேள்விக்கான திரியை இந்த பதிவின் மூலமாக பற்றவைத்தாகிவிட்டது. இனி இதை விவாத பொருளாக்கி ஆவண செய்வது நடுத்தர வர்கத்தினரின் முக்கிய கடமையாகும். 

தி.மு.க + காங்கிரஸ் - வெற்றி கூட்டணியா? (இம்முறையும்)

2011 ஆம் வருடம் ஜனவரி 11 ஆம் தேதி என்னுடைய 6 ஆவது பதிவாக எனது பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது.  

உள்ளங்கை நெல்லிக்கனியாக இருந்த தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி என்பது இன்றைய நிலையில் சந்தேகத்திற்கு இடமானதாகவும், ஏன் கிட்டத்தட்ட கானல் நீராகவும் மாறிப்போனதன் பின்னனி என்ன? இதற்கு காரணகர்தற்கள் யார் யார்? பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார் யார்? இந்த நிலை மாறி மீண்டும் வெற்றி பாதையில் இக்கூட்டணி பயணிக்க இயலுமா?

இக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண, தற்பொழுது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இக் கூட்டணி உருவான கால கட்டத்தையும் அதிலிருந்து இன்று வரையிலான ஏழரை வருட கால சிறு வரலாற்று நிகழ்வுகளையும் சற்று உன்னிப்பாக கவனித்து அலசினாலே போதும். அதை தான் இபபொழுது நாம் செய்யப் போகிறோம்.

அது 2003 பாராளுமன்ற தேர்தலுக்கான முஸ்தீபுகளின் உச்சத்தில் தேர்தல் கமிஷன் உட்பட அனைத்து கட்சிகளும் இருந்த நேரம். காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் வேறோடும் வேறடி மண்ணோடும் இந்திய் அரசியலில் இருந்து பிடுங்கி எரியப்பட்டுவிடும் என்ற நிலை. அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்ற விவாதப் பொருளுக்குள் கூட ராகுல் வராத நேரமது. இன்னும் சொல்லப்போனால் பிரியங்கா தான் அரசியலுக்கு வருவார் என்று கூட பரவலாக எதிர்பார்க்கப்பட்ட காலம்.

தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் செல்வாக்கான கட்சிகளை கூட்டணிக்காக தேடி அலையும் பரிதாபமான நிலை காங்கிரஸுக்கு. இந்த நிலையில் தான் தமிழகத்திலிருந்து தி.மு.க வின் சார்பாக காங்கிரஸுக்கு ஆதரவாக தெள்ளத்தெளிவான குரலை அழுத்தம் திருத்தமாக எழுப்புகிறார் கருணாநிதி! அதுதான் ஆரம்பம், அதன் பிறகு எல்லாமே அமர்க்களம் தான் காங்கிரஸுக்கு - இரண்டாவது முறையாகவும் இந்திய ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறது.

2003 ல் காங். க்கு ஆதரவாக ஓங்கி ஒலித்த கருணாநிதியின் குரலாகட்டும், தேர்தலுக்குப் பின் காங். தலைமையில் ஆட்சி அமைய புதுடெல்லி சென்று தங்கி அவர் செய்த தில்லாலங்கடி வேலைகலாகட்டும், பின்னர் சில பல கூட்டணி கட்சிகளால் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது தன்னுடைய உறுதியான ஆதரவை வெளிப்படுத்தி அதை முறியடித்த பாங்காகட்டும், இவைகளெள்லாம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு சிறந்த நிலைப்புத் தன்மையை ஏற்படுத்தித் தந்ததோடு சோனியாவையும் இந்திய ஆட்சி அதிகாரத்தின் ஏக போக தலைவியாக்கியது. சோனியாவின் இந்த நிலை தான் இலங்கையில் தனித் தமிழ் ஈழம் என்ற கனவு தவிடு பொடியாக்கப்பட்டு, புலிகள் அழிப்பு, பிரபாகரன் இழப்பு என்று போய் கடைசியில் முள் வேலி சித்ரவதை வரை வந்து நிற்கிறது! இது தான் ஈழத் தமிழர்களின்/ஆதரவாளர்களின் கண்மூடித்தனமான கருணாநிதி எதிர்ப்புக்கு வித்திட்டு விட்டது.

அடுத்தது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வறலாற்றின் இரண்டாவது அத்தியாயம் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலோடு ஆரம்பமாகிறது. இதில் தான் நம்முடைய முதல் பாரா கேள்விகளுக்கு காரணமான நிகழ்வுகள் தொடங்குகிறது. இந்த அத்தியாயத்தின் 'காமெடி ஹீரோ' தான் ராகுல். அவரைச் சொல்லி குற்றமில்லை, அவருடைய ராசி அப்படி! அவருக்கு நன்றாக விபரம் தெறிய ஆரம்பித்த போது அதுவரை அசுர பலத்துடன் ஆட்சி செய்த ராஜீவ் காந்தியின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி! ராகுல் நல்ல வாலிபனாகி ராஜீவுடன் சேர்ந்து வெளிவர ஆரம்பிக்கும் போது ராஜீவின் ஆயுளுக்கே முற்றுப்புள்ளி!!

கடந்த முறை அதிகமான கட்சிகளின் துணை மற்றும் வெளி ஆதரவோடு கடும் நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ், இந்த முறை குறைந்த அளவிலான நல்ல (நெருக்கடி கொடுக்காத) கட்சிகளுடைய ஆதரவோடு நிம்மதியான ஆட்சி செய்ய முற்படும் நிலையில் தான் நம்ம ராகுலுக்கு முக்கிய பொறுபுகள் (கட்சியை வளர்க்கத்தான்) கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு இவரது ஆட்டம் ஆரம்பமாக... காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் அதகளப்பட்டு, பீகாரில் புரட்டி எடுக்கப்பட்டு, கேரளாவில் கலகலத்து, குஜராத்தில் கொஞ்சம் கூட முன்னேராமல்... இப்படியே இது ஒரு தொடர் கதையாகிவிட்டது.

ஆனால் தமிழகம் வந்தால் கருணாநிதியை அவர் சந்திப்பதில்லை அதனால் கூட்டணிக்குள் குழப்பம் என்கிறார்கள் - அது தவறு. அவர் கருணாநிதியை ச்ந்திக்காததால் தான் கூட்டணி இன்னமும் உடையாமல் இருக்கிறது! தமிழகத்தில் இந்த வெற்றி கூட்டணியை விளங்காத கூட்டணி லெவலுக்கு கொண்டு சென்றதில் ராகுல் காந்தியின் பங்கு அளப்பரியது. 2008 பாராளுமன்ற தேர்தலில் இக் கூட்டணி 60 சதவீத வெற்றி மட்டுமே பெற்றதற்கு காரணம் இலங்கை பிரச்சினையில் மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசின் பழிக்குப் பழி ரீதியிலான சுயநல வெளியுரவு கொள்கை தான். கூட்டணி தர்மம் மற்றும் இன்னபிற கருமாந்திர காரணங்களுக்காக இப்பிரச்சினையில் மெளனம் காத்ததற்கான விலையை தி.மு.க வும் கொடுத்தது.

இதன் பிறகு ஆரம்பித்து இன்று வரை தமிழக காங்கிரஸ்  (தரு)தலைகள் அடித்துக் கொண்டிருக்கும் கூத்துக்கள் தான் வரும் தேர்தலில் இக் கூட்டணியின் வெற்றியை பதம் பார்க்க காத்திருக்கின்றன. காமெடி அல்லக்கை இளங்கோவனில் ஆரம்பித்து, தனித்து ஒரு தேர்தலில் நின்றால் டெப்பாசிட் கூட வாங்க அருகதையற்ற தமிழக காங்கிரஸ் பிரதான கோஷ்டியின் தலைவர் வாசன், அவருடைய அடிப்பொடி இளைஞ்சர் காங்கிரஸ் யுவராஜ், குபீர் குபீர் என பொங்கி அடங்கும் கார்த்திக் சிதம்பரம் இப்படியாக இன்னும் பல கோமாளிக் கூட்டம் வரை அடித்த கூத்துக்கள் தனக்குத் தானே குழிபறித்துக் கொள்ளும் விபரீத நிலையை இக் கூட்டணிக்கு ஏற்படுத்தி விட்டன.

சீமான் என்ன காரணத்திற்காக தி.மு.க வை எதிர்த்து அ.தி.மு.க வை ஆதரிக்கிறார் என்ற அடிப்படை ஞானம் கூட இல்லாமல் இந்த த(வளை)லைகள் காங்கிரஸை அ.தி.மு.க அணிக்கு கொண்டு செல்ல முனைவது அகில இந்திய காங். க்கு பலம் பொருந்திய தலைமை ஒன்று இருக்கிறதா? என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. தென் தமிழகத்தில் தமது கட்சியின் மூன்றாம் மட்ட பேச்சாளர் ஒருவர் காங்கிரஸ் தலைவர்களை குறை கூறி பேசினார் என்பதற்காக கட்சியிலிருந்து கட்டம் கட்டிய தி.மு.க தலைமை எங்கே.. தமக்குத்தாமே குழி பறிப்பவர்களை தும்பை விட்டு வாலை கூட பிடிக்க முற்படாத காங்கிரஸ் தலைமை எங்கே?!

கடந்த ஓராண்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் கொடுத்த அறிக்கையை விட பேசிய பேச்சுக்களை விட இந்த கோஷ்டி தலைவர்களின் கூச்சல் தான் தமிழக அரசியலில் பிரதானமாக இருந்தது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை வரும் தேர்தலில் தி.மு.க வுடன் தான் கூட்டணி என்பதை உறுதி செய்து விட்டது என்பது, இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா மத்திய அரசை காட்டமாக விமர்சித்து வெளியிட்ட அறிக்கையின் மூலம் தான் மக்களுக்கு.., ஏன் இளங்கோவனுக்கே கூட உறுதியாக தெறிய வந்தது!

இப்பொழுது ஓரளவிற்கு புரிந்திருக்கும், இக் கூட்டணியின் வெற்றிக்கு ஆப்பு வைத்துக் கொண்டிருப்பவர்கள் யார் யார் என்று. இனி இக் கூட்டணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டுவர யார் யார் என்ன செய்ய வேண்டும்?

இரண்டே இரண்டு பேர் தான். ஒருவர் சோனியா இன்னொருவர் கருணநிதி!  சோனியா என்ன செய்ய வேண்டும் என்பது இக் கட்டுரையை படிக்கும் பொழுதே தெறிந்திருக்கும். கருணநிதி செய்ய வேண்டியது - தான் மட்டும் தான் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்காமல் எதிர்ப்பக்கமும் அதை கடைபிடிக்க முயற்சி எடுக்க வேண்டும். வெற்றிகரமான எம்.ஜி.ஆர். பார்முலா படி அனைத்து திட்டங்களையும் கச்சிதமாக செயல்படுத்தி விட்டு கூட்டணி கட்சிகள் என்பது உதவிக்கு தான், உபத்திரவத்திற்கு அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்த தவறினால் ஐந்து வருடமாக அடித்தட்டு மக்களுக்கு செய்த திட்டங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.

Sunday, July 10, 2011

புதுப்பொலிவுடன்... புதுக்குரலுடன்... கொக்கரக்கோவாகிய நான்..!!

வணக்கம் இணைய நண்பர்களே!

2006 முதல் தொடர்ந்து தமிழ் இணைய எழுத்துக்களின் வாசகனாக இருந்து வந்த சௌம்யன் என்னும் நான், இந்த ஆண்டு  ஜனவரி மாதம் முதல் "கொக்கரக்கோ" என்ற பெயரில் புதிதாக வலைப்பூ ஒன்று kokkarakko2011@gmail.com என்ற கூகுல் ஐடி யில் தொடங்கி எழுதி வந்தேன்.

அந்த வலைத்தளத்தில் மட்டுமே 40 பதிவுகள் வரையிலும் எழுதியிருந்த நிலையில், சென்ற வாரம் என்னுடைய ஐடி ஹேக் செய்யப்பட்டு, எவ்வளவு முயன்றும் இதுவரையிலும் திரும்பப் பெற இயலவில்லை. ஆகவே இதற்கு மேலும் காத்துக்கொண்டிருக்க வேண்டாம் என்று தான் kokkarakkosowmian@gmail.com என்ற புதிய ஐடி யில் "கொக்கரக்கோ..!!!" என்ற அதே பெயரில் மீண்டும் புதிய வலைப்பூவை ஆரம்பித்து உங்களை எல்லாம் இம்சை செய்ய வந்திருக்கின்றேன் (!)

பழைய கணக்கு முற்றிலுமாக முடக்கப்பட்டிருப்பதால் அதில் எழுதிய பதிவுகளை அப்படியே என்னால் மீட்டெடுக்க இயலவில்லை. எனினும் அந்த கட்டுரைகளை தனி ஃபைலில் எழுதிதான் போஸ்ட் செய்திருந்தேன். அதை ஒவ்வொன்றாக, அவைகள் எழுதப்பட்ட தேதியை மட்டும் மேலே இணைத்து இந்த தளத்தில் வெளியிடலாம் என்றிருக்கின்றேன்.

வழக்கம் போல் என்னுடைய இந்த புதிய தளத்திற்கும், தங்களது மேலான வருகையையும், கருத்துப் பரிமாற்றங்களையும் ஆவலுடன் எதிர்நோக்கும்....

வை. சௌம்யன்.