Saturday, December 9, 2017

இவர் அரசியல் சாணக்கியரா..?!இயற்கையிலேயே தந்தையாகிவிட்ட...
இவரது தலைவரிடமிருந்து....
அவரது தமிழை இவர் வரமாக கேட்டிடவில்லை...
அவரது இலக்கிய ஆற்றலை இவர் வரமாகக் கேட்டிடவில்லை...
அவரது அபரிமிதமான பேச்சாற்றலை இவர் வரமாகக் கேட்டிடவில்லை...
அவரது கவிதைகள் ஆக்கும் திறனை இவர் வரமாகக் கேட்டிடவில்லை...
அவரது எழுத்தாற்றலை இவர் வரமாகக் கேட்டிடவில்லை...
அவரது திரைக்கதை அமைத்து, வசனங்கள் ஆக்கும் திறனையும் கூட இவர் வரமாகக் கேட்டிடவில்லை...
வேறு என்ன தான் வேண்டும் தனையனே...
இல்லை இல்லை... இந்த பேரியக்கத்தின் அடுத்த தலைவனாக பொறுப்பேற்கவிருக்கும் என் ஆகச் சிறந்த சீடனே....
கேள்... என்ன வேண்டும் கேள்... உனக்கு ஏதாவது வரம் தரவேண்டிய கடமை எனக்கிருக்கிறது... கேள்....
என்று... தன் தலைவன் கேட்டதற்கு இவர் இப்படித்தான் வரம் கேட்டிருப்பார் போலும்...!
அந்த இயற்கை என்னிடம், இவர் உனக்கு தந்தையாக இருக்க வேண்டுமா? அல்லது தலைவனாக இருக்க வேண்டுமா? இரண்டில் ஒன்றினை மட்டுமே அருள முடியும் என்று கேட்டால்...
நீங்கள் என் தலைவனாக இருக்கும் பேரினை மட்டுமே கேட்டிருப்பேன்...!
காலத்தின் நீட்சியில் இயற்கையும் எனக்கு அந்த வரத்தினை நல்கி விட்டதாகவே கருதுகிறேன்...!
இப்பொழுது நீங்கள் என்னிடம் கேட்கின்ற கேள்விக்கு... நான் ஒரே ஒரு வரத்தினை மட்டுமே உங்களிடமிருந்து கேட்பேன்... அது எதுவாயின்...
தாங்கள் மேலே பட்டியலிட்டுள்ள உங்களின் ஆற்றல்கள் அனைத்தினையும் ஒருங்கே திரட்டி... அதை தங்களிடமிருக்கும் இன்னுமொரு ஆற்றலான அரசியல் சாணக்கியத்தனம் என்ற ஒன்றினோடு இணைத்துத் தாருங்கள்.. என்பேன்....!
அப்படியே ஆகட்டும்... என்று தான் அந்த தலைவரும் தந்துவிட்டார் போலிருக்கிறது...!
உண்மை தான் இந்த நேரத்தில் இதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். தமிழக அரசியலில் மட்டுமல்ல... அகில இந்திய அளவிலேயே ஆகச் சிறந்த ராஜதந்திரியாக தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றால் அது மிகையல்ல்ல. இதை வெறும் புகழ் வார்த்தைகளுக்காகச் சொல்லவில்லை...!
இரண்டே இரண்டு விஷயங்கள் போதும், இதை நிரூபிக்க...!
இந்தியாவில் எந்த மாநிலக் கட்சியானாலும், பிராந்தியக் கட்சியானாலும் சரி... தேசிய அளவில் இரண்டில் ஒரு தேசியக் கட்சியின் நட்போடு தான் செயல்பட்டாக வேண்டும், என்ற நிலையில்... அவர்களை நாடியே அல்லது சார்ந்தே தான் இருக்க வேண்டும் என்ற நிலையில்...
இத்தனைக் காலம், கூட்டணியிலும், கூட்டணி ஆட்சியிலும் இருந்த காலத்தில் கூட வந்து சந்திக்காத ராகுல் காந்தியும்,
அரசியலில் நேருக்கு நேர் எதிர்நிலை எடுத்து மிகப் பலமாக எதிர்ப்பரசியல் செய்து வரும் நிலையில்... பிரதமர் #மோடியும்...
கிட்டத்தட்ட சம காலத்தில்.... தங்கள் இயக்கத்தின் தலைமைப் பீடத்தை வந்து சந்தித்து ஆசி பெற வைக்கும் அளவிற்கு காய்களை நகர்த்தியிருக்கின்றார்... அல்லது... அந்த அளவிற்கு தனது மக்கள் செல்வாக்கினை உயர்த்தி வைத்திருக்கின்றார் என்று தானே அர்த்தம்..?!
கிட்டத்தட்ட இருபது வருடங்களாக போக்குக் காட்டிக்கொண்டு, திமுக ஆட்சிக்கு வரவிடாமல், மீண்டும் மீண்டும் ஜெயலலிதா அரியணை ஏற ராஜபாட்டை அமைப்பதையே தங்கள் கடமையாக செய்து வந்து கொண்டிருந்த, தமிழகத்தின் சிறு குறு கட்சிகள் அனைத்தினையும்.....
போட்டி போட்டுக்கொண்டு வந்து திமுகழகத்திற்கு ஆதரவளிக்கச் செய்த அந்த ராஜதந்திரம்... கிட்டத்தட்ட யாராலுமே கணிக்க முடியாத ஒன்று...!
அவர் எங்கு பேசினார்? யாரிடம் பேசினார்? எப்படிப் பேசினார்? யார் மூலமாகப் பேசினார்? இப்படி எந்த கந்தாயமுமே புரியாமல், பிடிபடாமல் அத்தனைபேரும் வரிசை கட்டி வந்து திமுகழகத்திற்கு ஆதரவளித்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள்...!


எந்த ஒரு நேர்மையான அரசியல் விமர்சகரும் இது எப்படி சாத்தியமாயிற்று என்று ஆச்சர்யத்துடன் யோசித்துக்கொண்டு தான் இருப்பார்கள். இது எப்படி சாத்தியமாகியிருப்பினும், இவ்வளவு பெரிய அரசியல் மூவ் என்பது, ஆகச் சிறந்த அரசியல் சாணக்கியர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்பதை அவர்களால் மறுக்க இயலாது.
ஒருவேளை அவர்கள் தளபதி மு.க. ஸ்ஸ்டாலின் அவர்களுடைய இந்த அற்புதமான அரசியல் நகர்வை பாராட்டாமல் கடந்து செல்வார்களேயானால்... அது நிச்சயமாக ஏதோவொரு காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ அல்லது எதாவது ஒரு பயத்தின் காரணமாகவோ இருக்கலாமே தவிர வேறொன்றுமில்லை..!
ஆனால் ஒவ்வொரு திமுகழக தொண்டனும், தங்களுக்கு ஆகச் சிறந்த தலைவன் ஒருவன் கிடைத்து விட்டான் என்று ஆனந்தக் கூத்தாட வேண்டிய தருணம் இது...!
வாழ்த்துக்கள் தளபதியாரே....!!


Wednesday, November 22, 2017

ஸ்டாலினை எப்படித்தான் வீழ்த்துவது..?!


அடுத்து தேர்தல் என்ற ஒன்று வந்தால் இவர் தான் வெல்வார் என்று எதிரிகளே ஏற்றுக்கொள்ளும் நிலை தான் இங்கிருக்கிறது..!
இவரை எப்படித்தான் வீழ்த்துவது?!
ஆட்சி அனுபவம் இல்லை என்று ஒதுக்கவும் முடியாது....
சட்டமன்ற உறுப்பினர், மாநகர மேயர், உள்ளாட்சி துறை அமைச்சர், துணை முதல்வர் என்று படிப்படியாக ஆட்சி அனுபவத்தை வசப்படுத்தியிருக்கிறார்...!

சிறந்த நிர்வாகி இல்லை என்றும் கூறிட முடியாது...
ஏற்றுக்கொண்ட அனைத்து பொறுப்புக்களையும் திறம்படச் செய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முதற்கொண்டு, பயன் பெற்ற மக்கள் வரை அனைவரும் இவரது செயல்பாடுகளை பாராட்டித் தீர்த்திருக்கின்றார்கள்..!
ஊழல் கரை படிந்தவர் என்றும் வாதிட முடியாது...
இத்தனை பெரிய பொறுப்புக்களை வகித்திருந்தும், இதுவரையிலும் ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டை இவர் மீது கூறி ஒரு சின்ன வழக்கு கூட தொடுக்க முடியாத அளவிற்கு வெளிப்படையாகவும், நேர்மையாகவுமே வாழ்ந்திருக்கின்றார்...!
உழைக்கத் தயங்குபவர்.. சோம்பேறி என்றும் யாருமே கூறிட முடியாது...
ஒரு நாள் தவறாமல் மக்கள் பிரச்சினைகளுக்காவும், தமிழக நலனுக்காகவும், தமிழகமெங்கும் மக்களோடு மக்களாக சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் ஒரே தமிழக தலைவர் இவர் தான் என்று தமிழகத்தின் சிறு குழந்தைகளுக்குக் கூட தெரியும்..!
இவர் வந்தால் தமிழகத்திற்கு நலன் பயக்கும் தொலை நோக்குத் திட்டங்கள் எதுவும் வந்திடாது என்றும் வாதிட முடியாது...
காரணம், சென்னை மெட் ரோ ரயில், நெம்மேலி கடல் நீர் குடிநீராக்கும் திட்டம், ஒக்கேனக்கல், ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டங்கள், மகளிர் சுய உதவிக்குழு சுழல் நிதி திட்டம்... இப்படியாக எண்ணற்ற சமூகநல, மக்கள் நலத்திட்டங்கள் இவரது முழு முயற்ச்சியினாலும், உழைப்பினாலுமே வந்ந்துள்ளன என்பதை நாடே அறியும்..!
சரி.. அரசியல் நாகரீகம் தெரியாதவர் என்று சொல்லலாமா என்றால், அதுவும் முடியாது...
காரணம், சமகால அரசியல் எதிரிகளாக இருந்த போதே, இருக்கும் போதே ஜெயலலிதாவிடமும், மோடியிடமும் நேரில் சந்தித்து உரையாடக் கூடியவர் என்பதுகூட அதிசயமில்லை, இவரை அரசியல் ரீதியாகவும் தனிநபர் ரீதியாகவும் மிகக் கேவலமாக விமர்சிக்கும் வைக்கோவிடமே கண்ணியத்துடன் பழகக் கூடியவர் என்பதை மக்கள் அறிவர்..!
வழவழா கொழகொழா என்று உப்புச் சப்பில்லாமல் ஆட்சியை நடத்துவார் என்று யாரேனும் சொல்வார்களேயானால்...
இவர் பொறுப்பில் இருந்த போது துவக்கிய திட்டங்கள் அனைத்தையுமே, குறிப்பாக மெகா சைஸ் பாலங்களைக் கூட குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடித்து... அதிலும் திட்ட மதிப்பீட்டை விட குறைவான செலவிலேயே முடித்து சாதனை படைத்தவர். காரணம் அந்த திட்டங்களை தினம் தினம் அதிகாரிகளை அழைத்துச் சென்று பார்வையிட்டு துரிதப்படுதியது தான் என்று அந்தந்த பகுதி மக்களே எடுத்துச் சொல்வர்...!


அதெல்லாம் கிடக்கட்டும், அவர் குடும்ப அரசியல் செய்கிறார் என்று போட்டுவிடுவோம் என்றால்...
அவர் மகனோ, மகளோ கட்சியில் எந்தவொரு சிறு பொறுப்பில் கூட இல்லாமல், கட்சி செயல்பாடுகள் எதிலும் தலையிடாமல், தன் திரைத்துறையிலேயே படு பிஸியாக ஈடுபட்டு வருகிறார். ஸோ அதற்கும் வாய்ப்பில்லை..!
யோவ்... இப்டியே சொல்லிட்டிருந்தா எப்டிய்யா...?! வேற எப்படித்தான் அவரை களங்கப்படுத்தி... அவரிடமிருந்து வாய்ப்பை தட்டிப்பறிக்கிறது..?!
சார்... அதுக்கு ரெண்டு மூனு வழி இருக்கு சார்...!
சொல்லித்தொலைய்யாஆஆஆ?!
ஏற்கனவே மக்கள் கிட்ட அப்டி இப்டி பேச்சாகி, கட்சியிலேர்ந்து கட்டம் கட்டப்பட்டுள்ள அவர் அண்ணனை பேச வச்சி, அவர் கட்சிக்குள்ளாற வர்ற மாதிரி நம்ம ஊடகங்களை எல்லாம் ஊதி பெருசாக்க வச்சி, அதை நம்ம சேனல்கள்ல விவாதப் பொருளாக்கி.... மக்கள் கிட்ட இந்த செய்தியை கொண்டு போனா... மக்களும் அதை நம்பி... இவர் கிட்ட ஆட்சியைக் கொடுத்தா, திரும்பவும் பழைய மாதிரி குடும்ப அரசியல், பவர் பாலிடிக்ஸ் நடந்து, இவர் சுதந்திரமா செயல்பட முடியாம போயிடும்ன்னு நினைச்சு.... இவர் ஆதரவு நிலையிலேர்ந்து பின் வாங்க வாய்ப்பு இருக்கு சார்...!
ஹ்ஹா... சூப்பர் ஐடியாய்யா...! உடனே நம்ம ஆளுங்களுங்க கிட்ட சொல்லி அதுக்கு ஏற்பாடு செய்யச்சொல்லுய்யா...!
சரி... வேற என்னென்னா ஐடியா இருக்கு சொல்லு...!
சார்... அவர் வேட்டிக்கு பதிலா அடிக்கடி பேண்ட்டு போடுறாருன்னு சொல்லலாம் சார்...! கலைஞர் மாதிரி கவிதை பாட தெரியலன்னு சொல்லலாம் சார்...! அண்ணா மாதிரி அடுக்கு மொழியில பேச தெரியலன்னு சொல்லலாம் சார்...! பெரியார் மாதிரி பார்ப்பனர்களை இவர் காட்டமா திட்டுறது இல்லன்னு சொல்லி சிறுபான்மையினர் ஓட்டு இவருக்கு கிடைக்காம செஞ்சுடலாம் சார்...!
பரவால்லய்யா.... இதெல்லாம் ரொம்ப மொக்கையா இருந்தாலும்... இதையெல்லாம் நம்ம மீம்ஸ் கிரியேட்டர்ங்க கிட்ட கொடுத்து அடிச்சிவிடச்சொன்னா.... இதுக்காக தொகுதிக்கு பத்து இருவது ஓட்டு அவருக்கு குறையும் தானே...!?
ஆமா சார்...!
அப்ப இதையெல்லாம் உடனே முன்னெடுக்க ஆரம்பிச்சிடுங்க....! இப்புடியெல்லாம் முக்குனாதாம்ப்பா... தொகுதிக்கு மூவாயிரம் ஓட்டாவது நமக்கு தேறும்..!


Monday, November 20, 2017

தீரன் அதிகாரம் ஒன்று... விமரசனம் மாதிரி..!


சதுரங்க வேட்டை எனக்கு பிடித்த படங்களில் ஒன்று, அதன் இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் வந்துள்ள படம் என்பதால், நேற்று குடும்ப சகிதம் மாயவரம் ரத்னா தியேட்டரில் ஆஜர்..!கடந்த சில ஆண்டுகளாக தமிழில் வெறிப்பிடித்த சினிமா ரசிகன் ஒருவனுக்கான படம் வரவேயில்லை என்பது தான் என் கருத்து. அதிலும் இப்போ ஐந்தாறு வருடங்களாக ஒரு குரூப்... சினிமான்னாலே இப்படித்தான் என்று தமிழர்களை எல்லாம் சினிமா மோகத்திலிருந்து வெளியெ இழுத்துப் போட்டுக்கொண்டிருக்கும் வேலையை கண கச்சிதமாக செய்து கொண்டிருக்கும் வேலையில்...
இதற்கு முன்பாக நான் பார்த்த சற்றேரக் குறைய 100 தமிழ் புது படங்கள் எதுவுமே அதி தீவிர சினிமா ரசிகனான என்னை முழுமையாக திருப்திப்படுத்திடாத நிலையில்... தமிழ் சினிமா உலகின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையற்ற கவலையில் இருந்த நேரத்தில் தான்...
நேற்று இந்தப்படமும் அதில் ஒன்றாகத்தான் இருக்கும் என்ற அங்கலாய்ப்போடு தான் தியேட்டரில் படம் பார்க்க ஆரம்பித்தேன்...!
என் நம்பிக்கையை பொய்யாக்கமல், படமும் முதல் கால் மணி நேரத்திற்கு வழமையான பெரிய ஈர்ப்பில்லாத காதல் காட்சிகளுடனும், மொக்கை ஜோக்குகளுடனும் கடந்த நிலையில்....
ரன்வேயில் காமாஞ்சோமான்னு உருட்டிக்கிட்டிருக்கும் விமானம், எதிர்பாராத நேரத்தில் திடுக்கென்று வேகம் கூட்டி டேக் ஆஃப் ஆகி அதிர்ச்சியும், பரபரப்பும், ஒரு வித பயத்தையும் கூட்டி, நம்மை இனம் காண முடியாத ஒரு பரவசத்தில் ஆழ்த்துமே.... அதேப் போன்று தான்.. இது வேற லெவல் படம்... என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது.
முரட்டுத் தனமான கொலைத்தாக்குதல்களுடன் கூடிய கொள்ளைகள்... எந்த தடயமும் கிடையாது, சாட்சியும் கிடையாது, பாதிக்கபடுவதோ, இதைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய மதிப்பு மிக்கவர்களும் கிடையாது...
எல்லாவற்றுக்கும் மேலாக சம்பவங்கள் நடப்பது அனைத்துமே இன்றைக்கு இருப்பது போல, தொலைத்தொடர்பு வசதிகளும், மக்களிடம் பிரச்சினைகளைக் கொண்டு சென்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வைக்கும் சமூகவலைத்தளங்களும் இல்லாத, அது பற்றி தெரியவே தெரியாத காலக்கட்டம்...!
இதை வைத்துக்கொண்டு, டி எஸ் பி லெவலில் இருக்கும் ஒரு இளம் போலீஸ் அதிகாரி துப்புத்துலக்கி, அட்வென்ச்சர்ஸ் செய்து, இந்தியா முழுக்க தடம்பத்திருக்கும், எதற்குமே கவலை கொள்ளாத, நாடோடித்தனமான, பெரிய சொகுசு வாழ்க்கை வாழாத... கூட்டத்தையும் அதன் தலைவனையும் அழித்தொழித்து சட்டத்தின் முன் நிறுத்துவது தான் இந்த படத்தின் படா ஒன் லைன்...!
பருத்தி வீரனுக்குப் பிறகு கார்த்தியின் மேல் ஈர்ப்பே இல்லாமல் அல்லது பிடிக்காத நிலையே இருந்த நேரத்தில் இந்தப் படம் அவர் மீதான ஈர்ப்பை மீண்டும் உருவாக்கிவிட்டிருக்கிறது..!
மெர்ஸல் படம் பார்த்த பிறகு தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றிய மிகப்பெரிய பயம் என்னுள் தொற்றிக் கொண்டுவிட்டது. காரணம், எந்த கலை, கதை, ஞானம் பற்றிய அறிவுமே இல்லாத ஒரு இயக்குனரின் பின்னால் வேறு வழியே இல்லாமல் மாஸ் ஹீரோக்கள் மாட்டிக்கொண்டு விட்டார்களே என்ற கவலை தான் அது...! பத்து படத்தோட கதையை, காட்சிகளைத் திருடி எடுப்பது தான் இனி தமிழ் சினிமாவாக இருக்குமோ என்ற பயம் கூட வந்து விட்டது...!
அந்த பயத்தை ஒரு நேர்மையான தமிழ் சினிமா ரசிகனின் மனதில் இருந்து இயக்குனர் வினோத் பிடுங்கி எறிந்திருக்கின்றார் என்று தான் சொல்வேன்..!
ராஜஸ்தானின் ஒரு பாலைவன கிராமத்தில் கொள்ளைக்காரர்களை சுற்றி வளைக்க, அந்த கிராமமே இந்த போலீஸ் கூட்டத்தை சுற்றி வளைத்து ரவுண்டு கட்ட.... அதிலிருந்து அதிரி புதிரியாக கார்த்தி அன் கோ தப்பிக்கும் அந்த சீன் மரண மாஸ்...! தமிழ் சினிமா எதிலுமே நான் இதுவரை பார்த்திராத அதகளம் அது...! அந்த காட்சிகளில் எல்லாம் இசையமைப்பாளர் ஜிப்ரான்... இது தான் பின்னனி இசையின் இலக்கணம் என்று புது இசையமைப்பாளர்களுக்கு பாடம் எடுத்திருக்கின்றார்...!
கேப்டன் பிரபாகரன் போன்ற படங்கள் எல்லாம் தமிழில் இனி சாத்தியமே இல்லையா.... ராஜமௌலி போன்ற தெலுங்கு இயக்குனர்களின் தமிழ் டப்பிங் பாகுபலி படங்களைப் பார்த்துத்தான் இனி சினிமா ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டியிருக்குமோ என்ற என்னைப்போன்றோரின் கனவுகளை வினோத் இப்படம் மூலம் தகர்த்தெரிந்திருக்கின்றார்.
கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களுக்கு விஜயகாந்த்தின் பொருளாதார பின்புலம் இருந்து அப்போவே அப்படி பிரம்மாண்டம் காட்ட முடிந்திருக்கின்றது என்பது உண்மையானாலும், இந்த படத்தில் வரும் போலீஸுக்கு கொடுக்கப்படும் ரேஷன் தொகையினைக் கொண்டு இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து, டப்பா வேன்களையும், சுயசமையல் சாப்பாட்டினையும் வைத்துக்கொண்டு ஆகப்பெரிய பரம்பரை கொள்ளைக் கூட்டத்தை பிடித்தது போலத்தான்...
இப்படத்தில் காட்டியிருக்கும் பிரம்மாண்டத்திற்கு தயாரிப்பாரின் முதலீடு ரேஷன் தொகை என்றே தோன்றுகிறது.... ! இந்த இயக்குனருக்கெல்லாம் ராஜமௌலியின் தயாரிப்பாளர்கள் கிடைத்தால் தீரன் அதிகாரம் இரண்டை பத்து பாகுபலிக்கு இணையாக இந்திய சினிமாவுக்கு தமிழ் திரையுலகின் சார்பாக கொடுப்பார் என்று சத்தியம் செய்கிறேன்...!
இரண்டாம் பாதியில் வட மாநிலங்களின் பாலை வனங்களிலும், பொட்டல் வெளிகளிலும் ராஜபுதனத்து கால வரலாற்றுப் பின்புலத்தோடும், மொகலாயர் காலத்து நிகழ்வுகளோடும், ஆங்கிலேயர்களின் ஆட்சிமுறை நேர்க்கோட்டின் அழகினையும்... அழகியதொரு கதைச்சொல்லியாக, சாண்டில்யன் கதைகளைப் போன்று, நிகழ்கால படத்தின் காட்சிகளை நம் மனதில் இன்னொரு பின்புல சரித்திர மனப்பதிவுகளோடு கொள்ளைக்காரர்கள் பயணிப்பதை பார்வையாளர்கள் மங்களில் ஊடுறுவச் செய்து.... படத்தோடு ஒன்ற வைத்து, அற்புதமாக படமாக்கியிருக்கின்றார் இயக்குனர்...!

தமிழ் சினிமாவுக்கு அடுத்த நாசர்...   போஸ் வெங்கட்டாகத்தான் இருப்பார் என்று நம்புகிறேன். உடல் மொழியை இன்னும் கொஞ்சம் மெறுகேற்றி முழு ஈடுபாட்டோடு இறங்கினால், நிச்சயம் அவர் நாசரின் இடத்தைப் பிடிப்பார்..!இல்லாத பாகுபலி வரலாற்றை இவ்ளோ பிரம்மாண்டமாக தரமுடியும் என்றால், வரலாற்றோட்டு பின்னிப்பிணைந்த இச்சம்பவங்களை இதைவிட நூறுமடங்கு பிரம்மாண்டமாக ஒரு பெரிய தயாரிப்பாளர் கிடைத்தாலும் வினோத்தால் படமாக்க முடியும்...!
விஜய் அஜித் போன்றோர் இவர் கைகளைப் பற்றிக்கொண்டு கைக்கட்டி வேலை செய்தால் அடுத்த பத்தாண்டுகளுக்கு மாஸ் ஹிட்டோடு சம்பாதிக்க முடியும்...!
படத்தில் குறையே இல்லையா என்றால்... நிச்சயம் இருக்கு...! இரண்டரை மணி நேரம் படம் பார்க்கும் பலர்... கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரமாவது இயல்பாக சாய்ந்து உட்கார முடியாமால் சீட்டு நுனியிலும், அவ்வப்பொழுது கை கால்களை எல்லாம் முறுக்கிக் கொண்டும்.... டென்ஷனை ஏற்றிக்கொண்டும் இருக்க வேண்டியிருப்பதால்... அதன் காரணமான உடல் உபாதைகள் தான் இப்படத்தின் ஆகப் பெரிய குறை என்பேன்..!
நல்ல படம்ன்னா சில குறைகளையும், லாஜிக் மீறல்களையும் தள்ளி வச்சிட்டு பார்க்கணும்ங்கறதும்... நூத்துல தொண்ணூறு பசங்களுக்கு அஞ்சுலேர்ந்து பத்து வயசுக்குள்ள வர்ற லட்சியக் கனவுகளில் நிச்சயம் ஒரு போலீஸ் ஆஃபீஸர் இருப்பார் என்பது போல.... அந்த போலீஸ் ஆஃபீஸரை இங்கே நீங்கள் முழுமையாக காணலாம் என்று சத்தியம் அடித்துச் சொல்லமுடியும்..!
இதற்கு மேல் இந்த படம் பற்றி காட்சிக்கு காட்சி விமர்சனத்தை எழுதினால் அது போரடிக்கும் என்பதால்... தமிழ் சினிமா ரசிகர்கள் திரையரங்கம் சென்று இந்த சுகானுபாவத்தை அனுபவிக்கும் படியும்... அதன் மூலம் தமிழ் சினிமாவை வாழ வைக்கும் படியும் கேட்டுக்கொள்கிறேன்..!


Thursday, November 16, 2017

மாயவரம் தேர்...


எங்க ஊர் பெரிய கோவில் தேர் ரெடியாகிட்டிருக்காங்க...! எங்க ஊர் தேரினை உயிரும், உணர்வும் கலந்த சக ஊர்வாசியாகவே நாங்கள் பார்ப்பதால் தான் இப்படிச் சொல்கிறேன்..!


ஒரு பக்கம் இவிங்களுக்கு அலங்காரம் நடக்குது.... 

கோவிலுக்குள்ள சாமி - அம்பாளுக்கு (அவயாம்பாளுக்கு) அலங்காரம் நடந்துக்கிட்டிருக்கு... 

நாலு வீதிலயும் சைடுல நின்னு எட்டிப்பாக்குற மரங்களோட கிளைகள் எல்லாம் கழிக்கப்படுது... 

ரோட்டுல இருக்குற குண்டு குழி எல்லாம் கப்பி போட்டு நிரப்படுது... 

மாயவரத்து பொண்ணுங்க எல்லாம் பீரோல இருக்குற தாவணிய எடுத்து வெளில வச்சு, மேச்சிங் பிளவுஸ் தேடிக்கிட்டிருக்கு.... 

பொடியனுங்க எல்லாம் சின்னச்சின்ன விளையாட்டு சாமான், திண்பண்டங்கள் வாங்க காசு தேத்திக்கிடிருக்காய்ங்க... 

வயசு பசங்க எல்லாம் முகத்துக்கு ஃபேஷியல் போடுறது, தாடிய டிரிம் பண்றது, கிராப்பு வெட்டுறது, பைக்கை சரி பண்றதுன்னு பிஸியா இருக்காங்க... 

வயசானவங்க எல்லாம் சுத்தபத்தமா கோவிலுக்கு போக ரெடியாகிட்டிருக்காங்க.... 

என்னைய மாதிரி ஆளுங்க எல்லாம் கூட்டத்துக்கு முன்னாடி முழுசா தேரை ஒரு தரம் பாத்துடனும்ன்னு வந்து ஃபோட்டோ எடுத்திட்டிருக்காங்க...

இதுக்கு நடுப்புற மேகங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா தேர் பார்க்க வந்து கூடிக்கிட்டிருக்கு.... கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை...!

காவிரி ஆத்துக்கு இந்தப்பக்கம் வந்தா வள்ளலார் கோவில் தேர், பெருமாள் கோவில் தேர் எல்லாம் ரெடியாகிட்டிருக்கு....

மாயவரமே பரபரப்பா இருக்கு...! இது தான் வருஷா வருஷம் இங்க நடக்குற செம்மையான செலிப்ரேஷன்...!

ஹாங்... இன்னோன்னு.... 

இன்னிக்கு தேர் முடிஞ்சோடுன தான் நாளைக்கு மாயவரத்துல உண்மையான காவிரி புஷ்கரம் நடக்கும்...! ஆன்மீக அன்பர்கள் மட்டுமல்ல.... ஆனந்தத்தை விரும்புபவர்கள் அனைவரும் மாயூரம் வருக...!

அப்படியே காவிரி தாயையும் நாளை முழுக்கு நேரத்திற்குள் மாயூரம் வந்துவிடும்படி அழைக்கின்றோம்...!  ஏன்னா இந்த நிமிடம் வரை இவ்ளோ மழையிலயும் காவிரி இங்கே காய்ந்து தான் கிடக்கிறது...!
Saturday, November 11, 2017

சசி தப்புன்னா... ஜெயாவும் தப்பு தானே?!


இந்தியாவிலேயே ஆகப் பெரிய ஊழல்வாதியாக ஜெயலலிதா இருந்ருந்திருந்தால் மட்டுமே....

அவரது பினாமியாக இருந்த சசிகலாவின் குடும்பத்த்தினருக்குச் சொந்தமான நூஊஊஊஊத்தித் தொண்ணூறு இடங்களில் ரெய்டு நடத்த முடிகிறது...!

அப்படிப்பட்ட ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவின் படத்தை அரசு அலுவலகங்களில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும். அது முடியாது என்றால் சசிகலா குடும்பத்தினர் குற்றமற்றவர்கள் என்று அறிவித்து இந்த ரெய்டு நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு... முடிந்தால் சசிகலாவையும் விடுதலை செய்துவிட வேண்டும்...!

அதாவது...

சசிகலா தப்புன்னா.... ஜெயலலிதாவும் தப்பு...!
ஜெயலலிதா சரின்னா.... சசிகலாவும் சரி...!


Thursday, November 9, 2017

இவர் செயல் தலைவரா... அல்லது செயல் முதல்வரா..?!


நேற்று முன் தினம் முழுவதும் சென்னை மழை நிவாரணப் பணிகளை பார்வையிட்டு வேகப்படுத்துகிறார்...

அங்கிருந்து கிளம்பி மதுரை வந்து, நேற்று காலை பண மதிப்பிழப்பு கருப்பு தின ஆர்ப்பாட்டத்துல கலந்து கொண்டு ஒரு மாபெரும் கூட்டத்தில் உரையாற்றுகிறார்...

அங்கிருந்து கிளம்பி தஞ்சாவூருக்கு வந்து, அங்கு திறப்பதற்கு தயாராக இருக்கும் புது பாலத்தில் ஏற்பட்ட விரிசலை ஆய்வு செய்து அம்பலப்படுத்தி ஆட்சியாளர்களை அலறவிட்டு மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார்...

அங்கிருந்து புறப்பட்டு... 
சம்பா பயிர் நடப்பட்டு  பத்துப்பதினைந்து நாட்கள் ஆன நிலையில், கடந்து பத்து நாட்களாக தொடர்ந்து பெய்யும் கனமழையால் அவை அனைத்தும் மூழ்கிப்போய், விவசாயிகள் விக்கித்து நிற்கும், திருவாரூர், நாகை மாவட்டங்கள் முழுவதும்... 

...பாதித்த வயல்வெளிகளையும், விவசாயிகளையும் நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் பெற்றுத்தர உறுதியளித்து, அதற்கான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு கட்சியினருக்கு அறிவுரைகள் வழங்கி... தொடர்ந்து இரவு 9 மணியைக் கடந்தும், பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டு, அவர்களுக்கு கட்சியினர் மூலம் நிவாரணப் பொருட்களை வழங்கியவாறும் பயணித்துக் கொண்டிருக்கின்றார்...!

திமுகவினர் அவரை தங்கள் கட்சியின் செயல் தலைவராகத்தான் நியமித்திருக்கின்றார்கள்...

ஆனால் காலமும், மக்களும் அவரை இன்றைக்கு தமிழகத்தின் செயல் முதல்வராகவே மாற்றிவிட்டிருக்கின்றது..!

இவருக்கும் வயது 64 ஆகின்றது... ஆனால் நேற்று முன் தினம் ஒருவருக்கு 64 வயது ஆகி அந்த நாளையும் தமிழகத்தின் ஒட்டுமொத்த மீடியாவும் கொண்டாடித் தீர்த்து, அவர் முதல்வர் ஆவாரா மாட்டாரா என்று கேள்வி எழுப்பி, முதல்வர் ரேஸில் கிட்டத்தட்ட முந்துவதாகவெல்லாம் பில்ட்டப் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதே மீடியாக்கள் ஜெயலலிதாவுக்கும் இப்படி பில்ட்டப் கொடுத்துத்தான் தமிழகத்தை இன்றைக்கு கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கின்றார்கள்.

நியாயமாக பார்க்கப்போனால்..

மக்கள் பிரச்சினைகளுக்காக மட்டுமே தொடர்ந்து இப்படி தமிழகம் முழுக்க பயணித்து ஆட்சியாளர்களை வேலை வாங்கிக் கொண்டிருக்கும்... தமிழகத்தின் ஆகப்பெரிய கட்சியின் செயல்தலைவர் பற்றி... அவரது இந்த இடையறாத உழைப்பினைப் பற்றி இந்த ஊடகங்கள் விவாதங்கள் நடத்தியிருக்க வேண்டும். அவரது உழைப்பினை வெளிச்சம் போட்டுக்காட்டி இந்த ஆட்சியாளர்களை இன்னும் அலற விட்டு வேகமாக வேலை செய்ய வைத்திருக்க வேண்டும். அது தான் ஊடக தர்மம்..!

ஆனால் இந்த ஊடகங்கள் அதையெல்லாம் செய்யாது. அவர்களுக்கு சன் டீவியின் சீரியல்களுக்கும் மற்ற பொழுது போக்கு சேனல்களுக்கும் போட்டியாக தங்கள் செய்திகளையும் கவர்ச்சியாக மக்களிடம் சேர்க்க வேண்டும். அதற்காக சினிமா பிரபலங்கள் விடும் மூச்சுக்காற்றை ... பின்பக்கக் காற்றையும் கூட செய்தியாக்குவார்கள்...!

மக்கள் தான் கொஞ்சம் தெளிவாக இருக்க வேண்டும். இந்த முறை திமுகவை கை விட்டால், பிறகு தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது...! பீகார், உபியை விட கேவலமாக மாறிவிடும் அபாயம் இருக்கின்றது. கவர்ச்சி அரசியலையும், சாதி அரசியலையும், தமிழர்கள் கொஞ்சகாலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்..!
Wednesday, November 8, 2017

மோடியின் கலைஞர் தரிசனம்... யாருக்கு லாபம்?!


சென்னை வந்த பிரதமர் மோடி தலைவர் கலைஞரை சந்தித்தது பற்றிய ஆயிரம் ஹேஷ்யங்கள் உலவினாலும்...,
இன்றைய இந்த நிகழ்வின் மூலம் உடனடி பலனை அறுவடை செய்தது மோடியும், பாஜகவும் மட்டுமே..!

இந்த சந்திப்பு நிகழாமல் இருந்திருந்தால், இணையத்தில் பலமான தளமமைத்து செயல்படும் ஒரு லட்சத்திற்கும் சற்று கூடுதலான திமுகவினர்... இந்நேரம், மோடியின் ஒவ்வொரு அசைவையும், அவரது பேச்சுக்களையும்..., அவருக்கும் அதிமுக ஆட்சியாளர்களுக்கும் இருக்கின்ற நெருங்கிய தொடர்புகளையும் புட்டுப் புட்டு வைத்து, நீட், இந்தி திணிப்பு, மீத்தேன், ஜி எஸ் டி, பண மதிப்பிழப்பு... இப்படியாக மோடியின் ஒட்டுமொத்த தோல்விகளையும் மீண்டுமொரு முறை தெளிவாக புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்டு மக்கள் மன்றத்தில் வைத்து, இணையம் முழுக்க வைரலாக்கியிருப்பர்.

ஏற்கனவே தமிழக அதிமுக ஆட்சியாளர் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்ற நிலையில்... அதிமுக சார்பு தந்தி டீவியின் கருத்துக்கணிப்பிலேயே திமுகவுக்கு ஆதரவாக 55 சதவிகித மக்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய நிலையில்.... அந்த ஆட்சியாளர்களே... மோடி தான் தங்களைக் காப்பாற்றும் கடவுள் என்று மேடை போட்டு பேசி வரும் நிலையில்....

அதே அடையாளத்தோடு மோடி இங்கு வந்து சென்றால், அதிமுக ஆட்சியின் மீது பொது மக்களுக்கு இருக்கின்ற அத்தனை கோபங்களும் மோடியின் மீது ஒட்டு மொத்தமாக இறக்கி வைக்கப்பட்டிருக்கும். அதற்கு இணையதள திமுகவினரும் பக்காவாக அடித்தளம் அமைத்துக் கொடுத்திருப்பார்கள்.

குஜராத்திலேயே பாஜக அடிவாங்கப்போவதை இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெளிவாக எடுத்துரைத்துள்ள இந்நேரத்தில், தமிழகத்தில் தன் கட்சி மீது கட்டமைக்கப்படும் மோசமான பிம்பம், நிச்சயமாக வட இந்திய மாநிலங்களில் இன்னும் மோசமாக எதிரொளிக்கும் என்பது மோடி வகையறாக்களுக்கு நன்றாகவே புரியும்..!

இந்த நிலையில் தான் தாங்கள் அதிமுகவுக்கும் அதன் நடப்பு ஆட்சிக்கும் பாதுகாவலர்கள் இல்லை என்பதை உறுத்திப்படுத்த... தலைவர் கலைஞரை சந்தித்த நிகழ்வானது, மோடிக்கு ஏற்படவிருந்த பெரிய பிம்ப சிதைப்பிலிருந்து அவரைக் காப்பாற்றியிருக்கின்றது..!

இதைத்தான் இன்றைய கலைஞர் - மோடி சந்திப்பின் முக்கிய விளைவாக நாம் பார்க்க வேண்டியுள்ளது..!

சரி... இதனால் திமுகவுக்கு என்ன பலன் என்று கேட்பீர்களேயானால்...
மோடிக்கு திமுகவினரால் கிடைத்த மதிப்பிழப்பு தடைக்கு கைம்மாறாக... அதிமுக ஆட்சியைக் கவிழ்த்து அல்லது கலைத்து தமிழகத்தை காப்பாற்ற பாஜக முன்வரும் என்பது தான்..!